கரோனா ஊரடங்கால் உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி பாதித்ததால் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியும் வணிகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு நாடும் அதன் சொந்தப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிமுறைகளை சிந்தித்து வருகின்றன. அந்தவகையில், உலகமயம் அழிந்து, உலகப் பொருளாதாரக் கட்டமைப்பு புதிய பரிணாமம் எடுக்கவிருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதாவது, தற்போது உலகமயமாக்கத்தினால் (globalization) நாடுகள் தனித்தனியாக உலக சந்தையில் தயாரிப்புகளை வாங்கவும் விற்கவும் செய்கின்றன. ஆனால் இனி வரும் காலங்களில் நாடுகள் தனித்தனியாக இல்லாமல், தனக்கு தோதான நான்கைந்து நாடுகளுடன் ஒன்றிணைந்து (multi-polarity) மற்ற நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும், அதன் மூலமே உலகப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னோக்கி நகர முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், சமீப யதார்த்தம் இதற்கு நேர்மாறாக இருக்கிறது.
இனி சாத்தியமா?
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி, தேசியவாதத்தை நோக்கி பயணிக்க முயற்சிக்கின்றன. குடியேற்றத்தை சமீப ஆண்டுகளாகவே பல நாடுகள் எதிர்த்து வருகின்றன. கரோனா தாக்கத்தால் அது இன்னும் வீரியமடைய ஆரம்பித்திருக்கிறது. நாடுகள் சுயசார்பு கொள்கையைப் பகிரங்கமாகவே அறிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தியாவும் இனி சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார்.
அதாவது அந்நிய முதலீட்டையும் அந்நிய பொருட்களையும் நம்பிஇராமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த 30 ஆண்டுகாலமாக நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு உலகமயாக்கலை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டு இருக்கிற நிலையில், பிரதமர் அறிவித்துள்ள இந்த முழு அளவிலான சுயசார்பு இனி சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.
சந்தைப் பொருளாதாரம்
உலகப் பொருளாதாரம் ‘சந்தை மதிப்பை’ அடிப்படையாகக்கொண்டு இயங்கிவருகிறது. அதாவது சந்தை மதிப்பு இருக்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளே வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். அதன் நீட்சியாக பெரும்பாண்மை நாடுகள் கார்கள், செல்போன்கள், ஆடைகள், அழகுசாதனப் பொருட்கள் என சந்தைகளில் லாபம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றன. அதற்கேற்றவாறே பொருளாதாரக் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன. லாபத்தை மையமாகக்கொண்டே தொழில்கள் செயல்பட்டு வருகிற நிலையில், சந்தை மதிப்பில்லாத பொருட்களில் நிறுவனங்கள் முதலீடு செய்யாது.
விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் ஏன் அதிக வருமானம் ஈட்டுகிறார்கள்; சமூகப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் குறைந்த ஊதியம் தரப்படுகிறது என்பதை இந்தப் பின்புலத்தில் புரிந்துகொள்ளலாம். ஒரு பொருளுக்கான சந்தை மதிப்பு என்பது உள்நாட்டுத் தேவைகளைப் பொறுத்தும், வெளிநாடுகளுடனான வர்த்தக உறவைப் பொறுத்தும் உருவாகக்கூடியது. இதன் விளைவாக, சந்தை உருவாக்கும் தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, சந்தை உருவாக்கித் தரும் வேலைகளை மக்கள் செய்கின்றனர்.
எனவே சந்தை வளர்த்தெடுக்கும் வேலைகள் மட்டுமே அதிக ஊதியம் தரக்கூடிய வேலைகளாகவும் மாறி இருக்கின்றன. இந்நிலையில் இந்தியா, தற்போது சுயசார்பு நிலைப்பாட்டை எடுக்கையில், உள்நாட்டுச் சந்தையை வலுப்படுத்துவது மிக அடிப்படையான ஒன்றாக மாறுகிறது. அதற்கான தெளிவான புரிதலோ, செயல்திட்டங்களோ இந்த அரசிடம் உள்ளதா? தற்போது வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் கரோனா நெருக்கடி காரணமாக வேலை இழப்பைச் சந்தித்து வருகின்றனர். வளைகுடா நாடுகளிலிருந்து மட்டும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்து இந்தியா திரும்ப உள்ளனர். இந்தியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவரும் சூழலில் அவர்களையும் உள்ளடக்கி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது.
எது சுயசார்பு?
கடந்த ஆறுவருடங்களாக மோடி மேற்கொண்ட பயணமும், ஆட்சிக்கு வருவதற்கு முன் தந்த வாக்குறுதிகளும், முழுக்க முழுக்க அந்நிய முதலீடுகளை அடிப்படையாகக்கொண்ட தொழில் வளர்ச்சியை இலக்காகக் கொண்டதாகவே இருந்தன. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, அந்நிய முதலீடுகளைக் கவரும் நோக்கில் தொழில் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி வந்தது. அதை தனது சாதனைகளாகவும் முன்வைத்தது. ஆனால், கரோனா பாதிப்புக்குப் பிறகு சுயசார்புதான் மீள்வதற்கு ஒரே வழி என்ற நிலைப்பாட்டுக்கு மோடி வந்திருக்கிறார். இருக்கட்டும். ஆனால், சுயசார்பு என்பது பொருளாதாரத்துடன் மட்டும் தொடர்புடைய விஷயமா? பிற நாடுகளைச் சாராமல் நாம் நமக்கான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் வலியுறுத்தும் சுயசார்பு என்ற கருதுகோளின் மைய அம்சம்.
எனில், இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலங்களும் நிதி ரீதியாக தங்களைத் தாங்களே நிர்வகித்துக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தருவதுதான் உண்மையான சுயசார்பாக இருக்க முடியும். உள்ளூர் நிர்வாகம், உள்ளூர் சந்தை என்ற கட்டமைப்புக்குத் திரும்ப வேண்டுமென்றால், அதிகாரப்பரவலாக்கம் வழியாக மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும். ஆனால், நடைமுறை அப்படி இல்லையே. நிதிப் பங்கீடு முதல் மிக அடிப்படையான உரிமைகளைக்கூட மத்திய அரசு தன்வசப்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு முன் எப்போதையும் விட மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் அதிகம் வைக்கப்படுகிறது. மாநிலங்களில் அதிகாரம் பறிக்கப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மத்திய அரசின் கையை எதிர்நோக்க வேண்டிய சூழலில் மாநிலங்கள் உள்ளன.
நாட்டின் வளர்ச்சி பார்வை மாற வேண்டும்
தவிரவும், உலகமயமாக்கலின் தாக்கம் இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் வேரூன்றி கிடக்கிறது. எல்லா வளங்களும் ஆதாரங்களும் இருந்தாலும் உற்பத்தி முறையையும், தொழில்நுட்பத்தையும் வெளிநாடுகளிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்து பழகியிருக்கிறோம். சுயசார்பு பொருளாதாரத்துக்கான அடிப்படை திறன்களை நம்முடைய கல்வி முறை வழங்குகிறதா என்பது ஆகப்பெரிய கேள்வி. படித்து முடித்து வெளிவரும் எல்லோருமே பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியவே விரும்புகிறார்கள். இந்தச் சூழலில், உலகமயமாக்கலால் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பை ஒரே ஒரு அறிவிப்பில் மாற்றிவிட முடியாது. அதற்குமுன்பாக நாட்டின் வளர்ச்சி குறித்த பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணத்தில் இந்தியா இருக்கிறது.
இந்தியா பொருளாதார வளர்ச்சியை மட்டுமே வளர்ச்சியாக கருதுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நிராதரவாக விடப்பட்டுள்ளனர். அவர்களின் உயிர் மலிவானதாக மாறியிருக்கிறது. தன் மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை வசதியை ஏற்படுத்தி தருவது தனது கடமை என்று இந்தியா உணரவில்லை. இந்திய மக்களில் 30 சதவீதத்தினர் எவ்வித அடிப்படை மருத்துவ வசதிகளையும் பெற முடியாத நிலையில் இருக்கின்றனர். ராணுவத்துக்கு ரூ.3.37 லட்சம் கோடி செலவிடும் இந்நாடு அதில் கால்பங்கைக்கூட மருத்துவத்துக்கு செலவிடுவதில்லை.
இதுதான் இந்திய யதார்த்தம். மக்கள் நலனை நோக்கமாகக்கொள்ளாமல், பொருளாதாரக் கொள்கையில் எந்த மாற்றங்கள் கொண்டு வந்தாலும், அதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில், சுயசார்பு பொருளாதாரத்துக்கான அடிப்படை புரிதலும் கொள்கையும் இல்லாமல், ‘சுயசார்பு நோக்கி நகர வேண்டும்’ என்று கூறுவது, வேடிக்கையானதாகவே பார்க்கப்படும்.
( முகம்மது ரியாஸ்)