இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களிடம் செயலாற்றுகிற மனிதர்கள் எங்கெங்கோ பரந்துவிரிந்து பணிசெய்வதை நான் அறிவேன். ஆனால், செரினா தனக்கு வாய்த்த எல்லா வசதிவாய்ப்புகளையும் ஒட்டுமொத்தமாகத் தள்ளிவைத்துவிட்டு, அங்கிருக்கும் மக்களோடு மக்களாகக் கலந்து, அங்கேயே தங்கியிருந்து பணியாற்றுவது இப்பொழுதும் வியப்புதரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.
இத்தனைக்கும் அதுசார்ந்த எந்தப் பின்னணியும் முன்னனுபவமும் செரினாவுக்குக் கிடையாது. ஆனால், அதைக் கற்றடைந்து ஈட்டுவதற்காக வலியச் சென்று தன்னைத் தானே தயார்படுத்தி, தகுதிப்படுத்தி இத்தனைக் காலம் அதே அகநம்பிக்கையோடு பயணிப்பது என்பதே போற்றுதலக்குரியது.இப்பொழுது செரினா வந்தடைந்திருக்கும் இந்த நிலைக்காக, அவர் இழந்த இழப்புகள் எல்லாம் விலைமதிக்க முடியாதவை.
தர்க்கத்தராசில் அந்த கணக்கீடு நிற்பதில்லை. தவிப்பையும் நெருக்கடியும் வென்றுகடந்தே செரினா இந்நிலையை எட்டியிருக்கிறார். எந்தச்சிறு நிறுவனப் பின்புலம்கூட இல்லாமல், யார்யாலையோ தேடித்தேடிப்போய் கையேந்தி உதவிபெற்று அந்த மக்களுக்கும் குழந்தைகளுக்கும் தன்னாலியன்ற நல்வெளிச்சத்தைத் தந்துவருகிறார். தன்னுடைய செல்வத்தை அழித்து அழித்து இந்தப் பொதுக்கனவுக்கு உயிரேற்றுகிறார்.
என்னைப் பொறுத்தவரையில், இருளர் மக்கள் செரினாவை எவ்வித நாயக பிம்பத்தோடும் பார்ப்பதில்லை. ஆனால், தங்களுக்கு ஏதேனும் காய்ச்சல் வந்தால் அந்நோயைத் தீர்க்கக்கூடிய தாதியாகவே செரினாவை அவர்கள் கருதுவதை நான் கண்கூட நேரிலிருந்து பார்த்திருக்கிறேன். கல்பாக்கம் அலை குழந்தைகளின் கல்விப்பங்களிப்பில் செரினாவுடைய வாழ்வு செலுத்தியிருக்கும் தாக்கம் என்பது என்றும் வணக்கத்துக்குரிய ஒன்று.
செரினா… எல்லாம்வல்ல இறையாற்றல் முன்பு நான் உனக்காக வேண்டிக்கொள்கிறேன். இன்னும் இன்னும் அரிதான பெருங்கனவுகள் நோக்கி உன்னை நீ செலுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான சாத்தியத்தை இப்பிரபஞ்சம் நிகழ்த்திவைக்கும். குக்கூ நிலத்தில் உள்ள எல்லோருடைய எண்ணமும் இதுதான். ஆழிகாக்கும் நீரன்னை உன்னில் செயலருளாக நிறைக!”கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக…” என்ற வேதாகமத்தின் வார்த்தை இக்கணம் உனக்காக உச்சரித்துக்கொள்கிறேன் செரினா.