1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள பிப்யாட் என்னும் இடத்துக்கு அருகில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்து .
இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஒன்றின் நீர் குளிர்வு சாதனம் செயல்படாததன் காரணமாக, வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருக ஆரம்பித்தது. 1986, ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1.23 மணியளவில் நேர்ந்த இந்த சம்பவம் தொடர்ந்து மூன்று மணி நேர வெப்பத்தின் காரணமாக , உருகுதலோடு, உலையில் உள்ள பிளாக்குகளைத் தீப்பற்ற செய்து வெடிக்கவும் வைத்தது. அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன.
காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின. இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது.
இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் எத்தனை பேர் இறந்தனர் என்ற விபரங்கள் இதுவரை தெளிவாக இல்லை . எனினும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் 2000 க்கும் அதிகமானோர் இறந்தனர். இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை, இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின.
இதன் காரணமாக காற்று நீர் ஆகியவற்றில் கதிரியக்க மாசு படிந்து தாவரங்களையும், விலங்குகளையும் பாதித்தது. உயிரிகள் துன்புற்றன.
செம்மையாக வடிவமைக்கப்படாத அணு உலை, பணியாளர்களின் கவனக்குறைவு, விபத்துக்கான எச்சரிக்கைக் கருவிகள் முன்கூட்டி எச்சரித்த போதும், கடமையில் காட்டிய மெத்தனம் ஆகியவைகளே விபத்தின் காரணமாக கூறப்பட்டாலும் அன்றைய சோவியத் அரசினால் விபத்திற்கான காரணம் பகிரங்க படுத்தப்படவில்லை.
இன்று உலகத்திலேயே பெரிய அருங்காட்சியகம் செர்னோபில். வளர்ச்சியின் அழிவை நமக்குக் காட்டும் இடம் செர்னோபில். வாழ்வின் மகத்துவத்தைக் காட்டும் ஊர் செர்னோபில். கடந்த சில ஆண்டுகளாக செர்னோபில் அணு உலை பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிட மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
35 ஆண்டுகளில் செர்னோபில் நிறைய மாறிவிட்டதாக பிரான்சில் வசிக்கும் உக்ரேனிய நண்பர்கள் மூலம் அறிய கூடியதாக இருந்தது. கருகிய மரங்கள் அதன் பச்சையத்தினை மீட்டெடுத்துவிட்டன. மண் வாசனையைக்கூட உணர முடிவதாக, பார்வையிட்ட மக்கள் சொல்கிறார்கள். இயற்கை தன்னை புதுப்பித்துக் கொண்டுவிட்டது. ஆனால், மனிதனின் கண்டுபிடிப்புகளான தொடர் வண்டிகள், ஆலைகள் இன்னும் அப்படியே துருப்பிடித்துதான் இருக்கின்றன. மனிதனின் பேராசை அனைத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கத் துடிக்கிறது. ஆனால், தொடர்ந்து இயற்கையின் முன் பரிதாபமாக மனிதன் தோற்றுக்கொண்டிருக்கிறான். இயற்கை நமக்கெல்லாம் பேராசான் என்பதற்கு அங்கு படரும் பச்சைய வாசனையும், துருப்பிடித்துப் பரிதாபமாக இருக்கும் தொடர் வண்டியும்தான் நல்ல உதாரணம்.