பல தசாப்தங்களாக அகதி என்ற நாமத்துடன் வாழ்ந்த இலங்கைத்தமிழர்கள் தற்போது இந்திய பிரஜாவுரிமை பெறும் நிலை உருவாகியுள்ளமையும் அவர்களது அகதிகள் என்ற பதம் மாற்றப்பட்டமையும் அவர்களுக்கான வசதிகளுமே இந்தப் பேசு பொருளுக்கு காரணமாகியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் வாழ்ந்த பலரும் யுத்த நிறைவுக்கு பின்னர் தமது தாயகத்தில் வாழும் அபிலாசைகளுடன் அரசின் வாக்குறுதிகளை நம்பி இலங்கைக்கு வந்திருந்தனர்.
இவர்களில் பெரும் பகுதியினர் வவுனியாவில் தமது வாழ்விடங்களில் குடியேறியுள்ள நிலையில், அவர்களின் வாழ்வியல் எவ்வாறு அமைந்துள்ளது என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டிய நிலை உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் 600 குடும்பங்களுக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் இருந்து கடந்த 10 வருடத்தில் நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும் கூட, அவர்களில் எத்தனை சதவீதமானவர்கள் சுய பொருளாதாரத்துடனும் தமது தேவைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் வாழ்கின்றார்கள் என்பது மீள் பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம், மணிபுரம், கற்குளம், சுந்தரபுரம், வவுனியா வடக்கு என பல பகுதிகளிலும் இவ்வாறு நாடு திரும்பியவர்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்கள் வாழ்வியல் முறைகளும் அவர்களுக்கான பொருளாதார முயற்சிக்கான உந்துதல்களும் எவ்வகையில் வழங்கப்பட்டுள்ளது என்பது கேள்வியாகவே உள்ளது.
ஐந்து வடங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மக்கள் நாடு திரும்பியிருந்தனர். அவ்வாறு வந்தவர்களை, கட்டுநாயக்க வானூர்திதளத்தில் மாலை போட்டு அழைத்து வந்த அரசு, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தால் வழங்கப்பட்ட சிறுதொகை நிதியையும் தகரங்களையும் தவிர எதையும் வழங்கவில்லை என தாயகம் திரும்பிய சிலர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகின்றனர்.
வாக்குறுதிகள் பயனற்றதாகப் போய்விடும் எனத் தெரிந்திருந்தால், அன்றே இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்ந்திருப்போம் என்ற வார்த்தைகளை இன்று அவர்களிடம் காண முடிகின்றது.
எனினும் ஒரு சிலர்,தாம் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பின்னர், சிறப்பாக வாழ்கின்றோம் என்ற வார்த்தைகளை சொல்லவும் தயங்கவில்லை.
வவுனியா மாவட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாக வவுனியா மாவட்ட செயலக பதிவுகளில் தெரிவிக்கும் நிலையில், இம் மக்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கு மாத்திரமே இதுவரை காலத்திற்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய பலரும் இன்றும் நிரந்தர வீடின்றியும் விட்டுத்திட்டம் கிடைக்கும் என்ற அவாவில் தம்மிடம் இருந்த நகைகளை விற்றும் அயலவர்களிடம் கடன் பெற்றும் வீட்டத்திட்டத்திற்காக அத்திவாரம் போட்ட நிலையிலும் காலத்தை கழித்து வரும் துர்ப்பாக்கிய நிலையே வாழ்கின்றனர்.
தாயகம் திரும்புகின்றவர்கள் சிறந்த வசதிகளுடன் வாழ்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த கருத்துகள் காற்றோடு கரைத்துள்ளமை கவலையளிப்பதாக தாயகம் திரும்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம், தேசிய வீடமைப்பு திட்டத்தினூடான வீட்டுத்திட்டம் என்பன வழங்கப்பட்ட போதிலும் கூட ஆட்சி மாற்றங்களின் பின்னரான காலத்தில் குறித்த வீட்டுத்திட்டங்கள் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே இந்தியாவில் இருந்த நாடு திரும்பியவர்களுக்கான வீட்டுத்திட்டமும் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை பெரும் துர்ப்பாக்கியமாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு நாடு திரும்பியவர்கள் இது மாத்திரமின்றி யானை தொல்லைக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். எனவே இம் மக்கள் மாத்திரமின்றி யானை அச்சம் நிறைந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு யானைகளால் ஏற்படக்கூடிய உயிராபத்து தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது.
மின்சாரம் இல்லை, நிரந்த வீடு இல்லை, தொழில் இல்லை, சீரான கல்வி இல்லை என்ற நிலையில் உள்ள இம் மக்களுக்கு வாழ்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் பல குடும்பங்களுக்கு இன்றும் உள்ளது.
இந்தியாவில் கல்வியை தொடர்ந்த பலரும் இன்று இலங்கையில் கல்வியை தொடர்வதற்கு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் கற்ற பாடங்களுக்கும் இலங்கையில் கற்கும் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் காரணமாக பல மாணவர்கள் தேர்ச்சி மட்டத்தை அடைவதில் சிக்கல் நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பாடசாலைகளில் அவர்கள் கற்றல் செயற்பாடு குறைந்தவர்கள் என்ற எண்ணப்பாட்டுக்கு உள்ளாகின்றனர்.
அரசின் வாக்குறுதிகள் ஏதுவான முறையில் நிறைவேற்றப்படாமை மற்றும் ஏற்கெனவே தாயகம் திரும்பியவர்களின் வாழ்வியல் முறைகள் இந்தியாவில் தற்போதும் வாழும் பலருக்கு அச்சத்தையும் மீண்டும் தமது தாயகம் நோக்கிய வருகைக்கும் தயக்கத்தை ஏற்படுத்தி வருவதனால் இந்தியாவிலேயே அகதி என்ற அந்தஸ்தோடு வாழத்தலைப்படும் செயற்பாட்டுக்கு தள்ளி விடுகின்றது.
இவ்வாறு இந்தியாவில் வாழும் இலங்கை மக்களை அந்த நாடே தத்தெடுத்தால்போல் இலங்கை மக்கள் மறுவாழ்வு நிலையம் என அவர்களும் வாழும் பகுதிக்கு பெயர் சூட்டி வீட்டுத்திட்டம் மற்றும் சலுகைகளை அளித்துள்ளமை பெரும் ஆறுதலாக உள்ளபோதிலும் அவர்களுக்கு தங்கள் மண் மீது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கவே செய்கின்றது.