தற்போதும் புதிது புதிதாகப் போராட்டங்கள் ஆரம்பித்துக்கொண்டும் இருக்கின்றன. நடைபெறும் போராட்டங்களுக்கு முடிவும், போராட்டங்கள் தோற்றம் பெறாத நிலையும் எப்போது நாட்டில் உருவாகும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.
அதேபோன்ற ஒன்றே கிழக்கு மாகாணத்தில் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் மக்களை அப்புறப்படுத்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டமாகும். 10 மாதங்களாகியும் தீர்வு வழங்கப்படாததால் அப்பகுதி பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுத்தருமாறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் பாற்பண்ணையாளர்களின் போராட்டம் ஜூலை 09ஆம் திகதி 300 நாட்களைப் பூர்த்தி செய்த நிலையில், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மயிலத்தமடு மாதவனை பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் சீனித்தம்பி நிமலன், தமது வாழ்வாதாரம் தற்போது முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் போராட்டம் இல்லாமல் எந்த வெற்றியையும் அடைய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“300 நாட்களுக்குப் பின்னரும், எங்கள் மேய்ச்சல் நிலங்கள் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம். தொடர்ந்து போராடினால்தான் பலன் கிடைக்கும். சிங்களக் குடியேற்றங்கள் வருவதற்கு முன் ஒரு நாளைக்கு 6,000 லீட்டர் பால் கொடுத்தோம். இப்போது 500 லீட்டர் பால்தான் கிடைக்கிறது. மாடுகள் இறக்கின்றன. வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 100 லீட்டர் பால் கறந்தவர் இன்று ஐந்து லீட்டர் பால்தான் கறக்கின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக, உள்ளூர் மத தலைவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 13ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குழுக் கூட்டத்தில் தீர்வை வழங்க முடியாதுள்ளதாக மாவட்டச் செயலாளர் கமலாவதி பத்மராஜா தெரிவித்ததை அடுத்து, 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சித்தாண்டி சந்திக்கு அருகில் பால் பண்ணையாளர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதற்கு முன்னரும் சிறு சிறு போராட்டங்களை நடத்தியிருந்த பண்ணையாளர்கள் இப்போராட்டத்தினையும் அவ்வாறே நடத்திவிட்டுக் கைவிட்டுவிடுவர் என்று எதிர்பார்த்தபோதும் இப்போராட்டம் முடிவின்றித் தொடர்ந்து வருகின்றமை வருத்தத்துக்குரியதாகும்.
தமது மாடுகளை மேய்ச்சலுக்குப் பயன்படுத்திய சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணி அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மைச் சிங்கள விவசாயிகளால் பயிர்ச்செய்கைக்காக கையகப்படுத்தப்பட்டதாகவும், தாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும் மேலும் பல ஏக்கர் காணிகளை அவர்கள் கையகப்படுத்தியுள்ளதாகவும் பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் உள்ள கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் தரை நிலம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆளுநராக நியமிக்கப்பட்ட, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால், சோளம் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும் வகையில், குடியேற்றப்பட்ட 150 சிங்களக் குடும்பங்களுக்கும் பிரதேச பால் பண்ணையாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படத் தொடங்கின.
ஏற்கெனவே யுத்தம் நடைபெற்று முடிந்த காலப்பகுதியில் இருந்தே இப்பிரதேசத்தில் குடியேற, காணிகளைக் கையகப்படுத்தும் எண்ணத்துடன் செயற்பட்டுவந்த இவர்கள் நிரந்தரமாகக் குடியேறும் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து, பெளத்த விகாரை அமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
யுத்தம் முடிவுற்ற காலத்தில் அத்துமீறி பயிர்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் மேற்கொண்ட பயிர்களின் விளைச்சல் காலத்தின் பின்னர் இவ் மேய்ச்சல் தரைப் பிரதேசத்திலிருந்து வெளியேறவேண்டும் என அன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ பணிப்புரை விடுத்திருந்தார். அன்றைய காலத்தில் கூட முழுமையாக வெளியேறியிருக்கவில்லை. அதற்கு அதிகாரிகளினதும் பாதுகாப்பும் தரப்பினரதும் கரிசனையின்மை காரணமாகும்.
கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்ட 6,000 ஏக்கர் மேய்ச்சல் நிலத்தில், சிங்கள விவசாயிகள் 2,500 ஏக்கர் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், இது புல் வளரக்கூடிய வளமான பூமியெனவும் பால் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
300 நாட்கள் தொடர் போராட்டத்தின் போது சிங்கள விவசாயிகள் மேய்ச்சல் நிலங்களில் தாம் மேற்கொண்டுள்ள பயிர்ச் செய்கைகளுக்காகக் களைக்கொல்லிகளை வீசியதாலும், மேய்ச்சல் நிலங்களுக்கு தீ வைப்பதாலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உணவின்றி உயிரிழந்துள்ளன. அத்துடன், பொறிகள், வெடிகள் மூலமும் கால்நடைகள் கொல்லப்பட்டு வருகின்றன என்று மயிலத்தமடு, மாதவனை பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
“மேய்ச்சல் தரையை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை 1,075 மாடுகள் உயிரிழந்துள்ளன. சட்டவிரோதமாக குடியேறியவர்களின் ஆயுதங்களால் 375 மாடுகள் பலியாகியுள்ளன. இதுவரை இந்த இறப்புகளுக்கான இழப்பீடு எதுவும் கிடைக்கவில்லை. “மேய்ச்சல் நிலத்தில் 160 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் அத்துமீறி வாழ்ந்து வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதாக நாட்டின் தலைவரும் அரச அதிகாரிகளும் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
“ஜனாதிபதியும், மகாவலி அபிவிருத்தி அமைச்சரும் சந்தித்து வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர் அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புங்கள் என்கிறார்.
மொத்த நிலத்தில் 10,000 ஹெக்டேயரை மேய்ச்சலுக்குக் கேட்டிருந்தோம். அதன் பின்னர் குறைந்தது 7,000 ஹெக்டேயரைக் கேட்டோம். ஆனால், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் 3,000 ஹெக்டேயர் என்கிறார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்றும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், பால் பண்ணை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாகக் கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸாருக்கும் மகாவலி அதிகாரசபை அதிகாரிகளுக்கும், பால் பண்ணையாளர்களின் நிலத்தை அபகரித்து விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்ற சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
மயிலத்தமடு – மாதவனையில் மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான அரச காணியில், அத்துமீறிக் குடியேறியதாகத் தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அரச அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எவ்வகையான ஆவணமும், அத்துமீறிக் குடியேறியவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிக் குடியேறிய 13 பேரையும் வெளியேற்றுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.
எவ்வாறெனினும் சிங்கள விவசாயிகள் இதுவரை நிலத்தை விட்டு வெளியேறவில்லை. ஆங்கு அத்துமீறிக் குடியேறியிருப்பவர்களை முழுமையாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இம்மாத ஆரம்பத்தில் மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்திற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக மேற்கொள்ளப்பட்ட விஜயத்தில், மாவட்டத்தின் எல்லையோர பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இதன் போது அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரையில் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை என்பதே யதார்த்தம்.
எது எவ்வாறானாலும், மகாவலி அதிகாரசபையுடன் கலந்துரையாடுவதும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் உறுதிமொழி பெறுவதும் ஜனாதிபதி பணிப்புரை விடுப்பதும் பயனற்றதே. அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடும் குடியேறும் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாதவரையில் இதனை முடித்துவைக்கவே முடியாது என்பதுவே நிச்சயமானது.
300 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகின்ற பண்ணையாளர்களின் போராட்டம் ஒருவருடம் கடப்பதற்குள்ளாவது தீர்வை எட்டட்டும் என்று பிரார்த்திப்போம்.