ஜனாதிபதி அனுரவின் முதலடி, அரசியல்வாதிகளுக்கு தலையிடி

மக்களின் வாக்குகளால், மக்களுக்கு சேவை செய்வதற்குப் பாராளுமன்றம், மாகாண சபை (தற்போது இயங்கவில்லை) உள்ளூராட்சி மன்றங்களுக்கு வருவோரில் பலரும் சுகபோகமான வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளனர் என்பது ​உண்மையாக இருக்கிறது. எனினும், அவ்வாறான கனவு எதிர்காலத்தில் பலிக்காது என்பது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எடுத்து வைத்துள்ள முதலாவது அடியிலேயே புரிகின்றது.

முந்தைய அரசாங்கங்களில், பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் அல்லது அமைச்சரானார், அவர், பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியத்தையும், ஜனாதிபதி ஆகிவிட்டால், அவர், பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியத்தையும் சேர்த்தே பெற்றுக் கொள்கிறார் என அம்பலப்படுத்திய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான ஓய்வூதியத்தை வேண்டாமென எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஆட்சி மாறும் போது, அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் வகையில், கட்சி மாறி, சுகபோகங்களை அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை அவதானிக்கும் போது, முன்மாதிரியானதாய் உள்ளது.

எவ்வாறெனினும், ஆட்சிப்பீடத்தை கைப்பற்றி அதில் குளிர் காய்வதற்கு முயற்சிக்கும் பலரும், அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மிகக் குறுகிய காலத்திலேயே முன்வைக்கின்றனர். ஆகையால், மக்களின் மனங்களைக் கவரும் வேலைத்திட்டங்களை அதிரடியாக முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கடந்தகால ஆட்சிகளின் போது இடம்பெற்ற, ஊழல்,மோசடி, சொத்துக்குவிப்பு உள்ளிட்டவை அம்பலப்படுத்தும் அதேநேரத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்காக  முன்வைத்துள்ள யோசனைகளை அமல்படுத்த வேண்டும். இல்லையேல், மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, நம்பிக்கை உள்ளிட்டவை குறையும். இதுவே, பிரச்சினையாகிவிடும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர், தங்களுக்குரிய மாதாந்த சம்பளம் எவ்வளவு என்று தெரியாமலே பல வருடங்களாக இருந்துள்ளனர். அதாவது, மாத சம்பளத்தை அவர்கள், வங்கிகளில் இருந்து எடுக்கவே இல்லையெனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியமும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மக்களுக்கு சேவையை செய்ய வேண்டும். அவர்கள் கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருக்க முடியாது. களத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.  தேர்தல்கள் காலங்களில் மட்டுமே, வாக்காளர்களைத் தேடிச்செல்லாது. மக்களுக்கு சேவைகளை செய்யும் அரசியல்வாதிகள் மட்டுமே மக்களின் மனங்களில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.

(Tamil Mirror)

Leave a Reply