கோவில்களிற்கு பணம் கொடுக்கவேண்டாம் என அவர் கூறவில்லையே, மாறாக கோவில்களுக்கு கொடுப்பதுபோல் பாடாசாலைகளிற்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்றுதானே அவர் கூறுகின்றார்.
கோடி கோடியாக நாம் கொட்டிக்கொடுத்த கோவில்கள் இன்று பூட்டிக்கிடக்க கொரோனா என்னும் கொடிய நோயினை குணப்படுத்த நாம் மருத்துவமனைகளைத்தானே நாடிச்செல்கின்றோம்.
அந்த மருத்துவமனைகளில்,பாடசாலைகளில் கல்வி கற்ற மருத்துவர்கள் தானே எம்மை காப்பாற்றுகின்றார்கள்.
எம்மை நோயிலிருந்து காப்பாற்றி மறுவாழ்வு தரும் மருத்துவமனைகளும், மருத்துவர்களையும், சுகாதார பணியாளர்களையும் உருவாக்கும் பாடசாலைகளையும்
நாம் கோவில்களுக்கு நிகராக பராமரிக்க வேண்டியது அவசியம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
மருத்துவமனைகள் பாடசாலைகளுக்கு உதவி செய்யுங்கள் என தன் கருத்தை பதிவு செய்தவரை ஒரு கூத்தாடி என வசைபாடுபவர்கள் அவரை மத நம்பிக்கைகளை இழிவு செய்வதாக குற்றம் சாட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
ஒரு பெண்ணாக தன் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துக்கூறிய ஜோதிகா பாராட்டுக்குரியவர்.
அகரம் என்னும் அமைப்பின் மூலம் தன் கணவனுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் ஜோதிகா தன் கருத்துக்களை கூற தகுதியுள்ளவர்.
இந்த அகரம் அமைப்பின்மூலம் பல ஈழத்தமிழ்மாணவர்களும் கடந்தகாலத்தில் உதவிகள் பெற்றிருக்கின்றார்கள்.
கொரோனாவால் பெரும் இடர்களை சந்தித்த யாழ் மண்ணில் அந்த மக்களின் இதயங்களில் நீங்காதவிடம் பெற்றிருக்கும் நல்லூர்க்கந்தனின் ஆலயக்கதவுகளும், இதயக்தவுகளும் அந்த மக்களுக்காக இன்றுவரை திறக்கவில்லை என்பது இவ்விடத்தில் நினைவில் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.