2048ஆம் ஆண்டு இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என முன்னர் ஆட்சியாளர்கள் மக்களுக்கு நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். அதுவரை அனைத்து இன்னல்களையும் தாங்கி, வயிற்றை இறுக்கிக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அத்தகைய நாட்டை ஒரு புதிய சமூக மாற்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே இதற்கு எளிய உடனடி குறுக்குவழிகள் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து நூறு நாட்களே கடந்துள்ளன. புதிய அரசாங்கம் பதவியேற்று ஆறு வாரங்களுக்கு மேலாகியும் இல்லை. எனவே, எழுபத்தாறு வருடங்களாகத் தீர்க்கப்படாத நம்பிக்கைகள் குறுகிய காலத்தில் தீர்ந்துவிடும் என்று நினைக்கும் அளவுக்கு நாம் தாழ்ந்த மனப்பான்மை கொண்டவர்கள் அல்ல.
மக்கள் எதிர்பார்க்கும் சரியான பாதையில் நாட்டை கொண்டு செல்வதற்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் எதிர்பாராத பல பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
நம்பகமான மற்றும் நியாயமான அமைப்புக்காக பொதுமக்கள் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக நாங்கள் இன்னும் நம்புகிறோம். கட்சி, நிறம் எதுவாக இருந்தாலும், நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது. “சுத்தமான இலங்கை” திட்டம் அதன் முதன்மையான திட்டங்களில் ஒன்றாகும்.
ஊழல், மோசடி, வீண் விரயம், உறவுமுறை போன்ற பிரச்சினைகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு குறிப்பிட்ட மூலோபாயத் திட்டங்களை சமூகமயமாக்குவது அவசியம். மக்களுடன் நல்ல தொடர்பு உறவை உருவாக்குவதும் மிக அவசியம்.
தனித்துவத்தை விட கூட்டுத்தன்மை முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில்: இவ்வளவு காலமாக, தனிநபர்களை விட கூட்டுச் செயல்களால் மக்கள் வெற்றியை அடைந்துள்ளனர்.
எனவே, 2025ஆம் ஆண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நனவாக்கும் ஆண்டாக அமையும் என நினைக்கிறோம். எனவே, இது மறுமலர்ச்சி ஆண்டாக மட்டுமன்றி, மக்களின் அபிலாசை ஆண்டாகவும் அமையும் என எதிர்பார்க்கிறோம். அதற்காக அரசாங்கத்தையும் அதன் திணைக்களங்களையும் அரசாங்கத்துடன் இணைந்த ஏனைய நிறுவனங்களை மட்டுமே எதிர்பார்த்து காத்திருப்பது முட்டாள்தனமானது.
ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு தனிமனித செயற்பாடுகள் இன்றியமையாது. அதற்காக, பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்பதே காலத்தில் கட்டாயமாகும். இல்லையேல் என்னதான், முயற்சி செய்தாலும், அதற்கான பலனை முழுமையாக அனுபவிக்க முடியாது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
(Tamil Mirror)