திரிகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு!

‘கண்டுபிடிப்புகளில் கல்வெட்டுகள் நம்பகரமான முக்கிய சான்றுகளாகப் பார்க்கப்படுகின்றன. அவை இலக்கியங்களைப் போல் விரிவான செய்திகளைத் தராவிட்டாலும், அவை வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த காலத்திலேயே பெரும்பாலும் எழுதப்பட்டிருப்பதால், அவற்றில் இருந்து அறியப்படும் வரலாற்றுச் செய்திகள் நம்பகரமாகவே பார்க்கப்படுகின்றன.’
இக்கல்வெட்டு திரிகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கிலோமீட்டர் தொலைவில் மாவட்டத்தில் தனி நிர்வாகப் பிரிவாக உள்ள கோமரன்கடவல பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் காணப்படுகிறது.

இங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டிட அத்திவாரங்களும் காணப்படுகின்றன. அவற்றுள், அழிவடைந்த சிவாலயம் அதேநிலையில் தொல்லியற் திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்திற்கு மிக அருகிலுள்ள சிறு மலையிலேயே கல்வெட்டும் காணப்படுகிறது.

இம்மலையின் மேல்பகுதியில் திருவாசி போன்ற வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன. சிவலிங்கத்திற்கு மேலுள்ள வட்டம் சக்தி வழிபாடு மரபுக்குரிய சக்கரமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இக்குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. முதல் இரு வரிகளும், ஏனையவற்றில் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. கல்வெட்டின் வலப்பக்கத்தில் உள்ள பல எழுத்துப் பொறிப்புக்கள் மலையின் மேற்பகுதியில் இருந்து கீழ்நோக்கி வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்தும், தெளிவற்றும் காணப்படுகின்றன. இடப்பக்க எழுத்துப் பொறிப்புக்கள் தெளிவாகக் காணப்பட்டதால் கல்வெட்டைப் படியெடுத்தவர்கள் ஆர்வ மிகுதியால் பல சொற்களைப் படித்தனர். ஆயினும் கல்வெட்டின் ஒரு பாகம் தெளிவற்றுக் காணப்பட்டதால் அது கூறும் வரலாற்றின் முழுமையான உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இதனால் தென்னாசியாவின் முதன்மைக் கல்வெட்டு அறிஞரும், பேராசிரியருமான வை.சுப்பராயலுவுக்கும், தமிழக முன்னாள் மூத்த கல்வெட்டு அறிஞரான கலாநிதி சு.இராஜகோபாலுக்கும் இக்கல்வெட்டுப் படிகளின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் ஒருவாரகாலமாக கடும் முயற்சி செய்து கல்வெட்டின் பெரும்பகுதியை வாசித்து அதன் வாசகத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

கி.பி 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த இக்கல்வெட்டுப் பற்றிய தமிழக அறிஞர்களின் வாசிப்பிலிருந்து இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய பல வரலாற்று உண்மைகள் தெரிய வந்துள்ளன. அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம் வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப்போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவனவாக உள்ளன.

மேலும், யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றகாலப் பின்னணி, அது தோன்றிய காலம், தோற்றுவித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய பார்வையை மீளாய்வு செய்வதிலும், தெளிவுபடுத்துவதிலும் இக்கல்வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

தென்னிந்தியாவில் நீண்டகால வரலாறு கொண்டிருந்த சோழ அரசு தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூறாண்டிலிருந்து ஒரு பேரரசாக எழுச்சியடைந்த போது, அவ்வரசின் செல்வாக்கால் சமகால இலங்கை வரலாற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் தமிழ்நாட்டு அரச வம்சங்களை வெற்றி கொண்டதன் பின்னர் சோழர்கள் இலங்கைக்கு எதிராகவும் படையெடுத்து வந்தனர்.

இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் இப்பகுதியில் சோழர் ஆட்சிக்குப் பொறுப்பாக மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத்தளபதிகளுள் ஒருவனான அல்லது அரச பிரதிநிதியான குலோத்துங்க சோழக் காலிங்கராயன் இருந்துளான் என்ற புதிய செய்தியும் தெரிய வருகிறது.
இக்கல்வெட்டில் அறியப்படும் முக்கிய வரலாற்றுச் செய்திகளோடு அவற்றில் இடம்பெற்றுள்ள சில பெயர்கள், சொற்கள் தொடர்பாக அறிஞர்கள் கூறும் கருத்துக்களும் விளக்கங்களும் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டில் வரும் ‘மாநாமத்துநாடு’ என்ற பெயர் இங்குள்ள பரந்த பிரதேசத்தை குறித்த இடமாக இருக்கலாம் எனக் கருதுகிறார்.
இக்கல்வெட்டில் ‘பற்று’ என்ற நிர்வாகப் பிரிவு பற்றிக் கூறப்பட்டுள்ளது.

பற்று என்ற தமிழ்ச் சொல் சிங்களத்தில் ‘பத்து’ என அழைக்கப்படுகிறது. இச்சொற்கள் தற்காலத்திலும் இலங்கையின் பல பாகங்களிலும் நிர்வாக அலகுச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இக்கல்வெட்டைப் படியெடுத்த போது கடும் மழையாக இருந்ததாலும், பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் இங்குள்ள காட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டதாலும் குறுகிய நேரத்திற்குள் இக்கல்வெட்டைப் படியெடுக்க வேண்டியிருந்தது. ஆயினும், மீண்டும் இக்கல்வெட்டைப் படியெடுக்க வேண்டியிருப்பதால், மேலும் பல புதிய தகவல்கள் வெளிவரக்கூடும்.

(Maniam Shanmugam)