குறிப்பாக இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பலதரப்பட்ட மின்னியல் தொழில்நுட்ப சாதனங்களான ஸ்மார்ட் போன், டேப்லெட் போன்றவற்றை மிக எளிதாக அணுகுவதற்கான வாய்ப்புக்களை அதிகம் பெறுகின்றனர்.
மேலும் இன்று பல வீடுகளில் குழந்தைகள் அடம்பிடிக்கும் போதும், அவர்களுடைய அழுகையை நிறுத்துவதற்கும், உணவு ஊட்டும்போதும் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன்களில் கார்ட்டூன் வீடியோக்களை குழந்தைகளுக்கு பார்ப்பதற்கு அனுமதிப்பதையும் நாம் காண்கிறோம்.
ஒரு சிலர் தமது குழந்தை சிறுவயதிலிருந்தே மின்னணு சாதனங்களை இயக்குவதை பெருமையாக கூறுவதனையும் நாம் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.எனவே இந்த கட்டுரையில் உளவியல் சமூக வளர்ச்சியில் திரை நேரத்தின் எதிர்மறையான விளைவுகள் பற்றி ஆராய்ய்வதன் மூலம் பெற்றோர் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியுமென நினைக்கிறேன்.
கவனத்தை ஈர்க்கும் திறன் (Attention span )
குழைந்தை பருவத்தில் இருந்து வளர்ச்சியடைய வேண்டிய மிக முக்கிய திறனாகும். இது குழந்தைகள் தமது கருமங்களில் உன்னிப்பாக கவனம் செலுத்தவும், அந்த கருமம் தொடர்பான வழிமுறைகளை பின்பற்றவும் உதவுகின்றது. எனினும் அதிகளவு திரை நேரம் குழந்தைகளின் கவனத்தை சிதறடித்து பிற்காலத்தில் கவனக்குறைவு பிரச்சனைகளுக்கு ஆளாக்கின்றது
மேலும் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இலத்திரனியல் சாதனங்களில் நேரத்தை செலவிடும் பிள்ளைகளுக்கு மனச்சோர்வு, பதட்டம் போன்ற உணர்ச்சி மற்றும் நடத்தைகள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இலங்கை தேசிய மனநல நிலையம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமூக திறன்கள் ( Social skills )
சமூக திறன்கள் உளவியல் சமூக வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய அம்சமாகும். குழந்தைகள் நேருக்கு நேர் தொடர்பு கொள்வதன் மூலம் மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதனை கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் இச் சாதனங்களின் அதிகரித்த பயன்பாட்டினால் குழந்தைகள் மற்றவர்களுடன் செலவழிக்கும் நேரம் குறைவடைகின்றது. இது சமூக தனிமைக்கு இட்டுச்செல்வதுடன் குழந்தைகள் நண்பர்களை தேடிக்கொள்வதிலும் மிக சவாலினை எதிர்கொள்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
உணர்ச்சி கட்டுப்பாடு (Emotional regulation )
உணர்ச்சி கட்டுப்பாடு என்பது உளவியல் சமூக வளர்ச்சியின் மற்றுமொரு முக்கிய அம்சமாகும். குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளர்கள் மற்றும் சகாக்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் தங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
இருப்பினும், அதிகப்படியான திரை நேரம் இந்த செயல்முறையை சீர்குலைக்கும். குழந்தை வளர்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், திரைகளில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் சிரமப்படுகிறார்கள் மற்றும் அதிக எதிர்மறையான நடத்தைகளைக் காட்டுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது குழந்தைகளின் உளவியல் சமூக வளர்ச்சிக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். திரை நேரத்தைக் குறைப்பதன் மூலம், குழந்தைகளுக்கு நேருக்கு நேரான சமூக தொடர்பு, உடல் செயற்பாடு மற்றும் கற்பனை விளையாட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். இது கவனத்தை மேம்படுத்தவும், உணர்ச்சி கட்டுப்பாடுகளை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
மேலும் திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவது உடல் ஆரோக்கியத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். திரையில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன், தூக்கக் கோளாறுகள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகம். உடல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலமும், திரை நேரத்தைக் குறைப்பதன் மூலமும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
இலங்கை மருத்துவ சங்கத்தின் ஆய்வின்படி, இலங்கையில் குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 3-4 மணிநேரம் மின்னணு சாதனங்களில் செலவிடுகின்றனர் என்றும் மேலும் 70% க்கும் அதிகமான குழந்தைகள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது அவர்களின் தூக்க முறைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். மேலும், மின்னணு சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு உடல் பருமன், பார்வை பிரச்சினைகள் மற்றும் தசைக்கூட்டு கோளாறுகள் ஆகிவயற்றை தோற்றுவிக்கின்றது.
திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்:
Set Limits (வரம்புகளை அமைத்தல்): திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உங்கள் பிள்ளைக்கு விளக்கவும் மற்றும் ஒவ்வொரு நாளும் திரையில் எவ்வளவு நேரம் செலவிடலாம் என்பதற்கு குறிப்பிட்ட வரையறைகளை அமைக்கவும். American Academy of Pediatrics இல் , ஒரு நாளைக்கு 2-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு மேல் திரை நேரம் இருக்கக்கூடாது என்று பரிந்துரைக்கிறது.
Monitor Content (உள்ளடக்கத்தைக் கண்காணிக்கவும்): உங்கள் குழந்தை பார்க்கும் அல்லது விளையாடும் உள்ளடக்கம் வயதுக்கு ஏற்றதா மற்றும் கல்வி சார்ந்ததா என்பதை உறுதிப்படுத்தவும். கற்றல் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும்.
Encourage Physical Activity (உடல் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும்): ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க உடல் செயற்பாடு மற்றும் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபட உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும். நடைபயிற்சி, பைக்கிங், நீச்சல் போன்ற குடும்ப நடவடிக்கைகளில் அவர்களுடன் பங்கேற்கவும்.
Create Tech-Free Zones (தொழில்நுட்பம் இல்லாத வலயங்களை உருவாக்குங்கள்) : நேருக்கு நேர் தகவல்தொடர்பு மற்றும் திரை நேரத்தைக் குறைக்க உங்கள் வீட்டில் சாப்பாட்டு மேசை அல்லது படுக்கையறை போன்ற தொழில்நுட்பம் இல்லாத வலயங்களை உருவாக்குங்கள்.
Be a Good Role Model (ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள்): பெற்றோர்கள் தமது சொந்த திரை நேரத்தை முடிந்தளவு குறைத்துக்கொள்வதனூடாக உங்கள் குழந்தைக்கு ஆரோக்கியமான தொழில்நுட்ப பழக்கங்களை கற்பிப்பதில் முன் மாதிரியாக இருங்கள்.
உங்கள் குழந்தை ஏற்கனவே அதிகப்படியான திரை நேரத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவர்களை அதிலிருந்து மீட்கவும், ஆரோக்கியமான உளவியல் வளர்ச்சியை மேம்படுத்தவும் வழிகள் உள்ளன.
திரைகளை உள்ளடக்காத பொழுதுபோக்குகள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட அவர்களை ஊக்குவிப்பதாகும். ஒரு இசைக்கருவியை வாசிப்பது, விளையாட்டுப் பயிற்சி செய்வது, வாசிப்பது அல்லது எழுதுவது ஆகியவை இதில் அடங்கும்.
மனதைத் தூண்டும் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் செயல்களை ஊக்குவிப்பதன் மூலம், குழந்தைகள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து காலகட்டங்களிலும் உதவக்கூடிய பல்வேறு திறன்களையும் ஆர்வங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும்.
திரையின் நேரத்தைக் கட்டுப்படுத்துவது, அதை முற்றிலுமாக நீக்குவதைக் குறிக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். திரைகள் கற்றல் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு மதிப்புமிக்க கருவியாக இருக்கலாம், மேலும் மிதமான பயன்பாடாக இருந்தால், அவை குழந்தையின் வாழ்க்கையின் ஆரோக்கியமான பகுதியாக இருக்கும்.