குறிப்பாக இலங்கையின் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலுள்ள பல தீவுகளில் இக் கண்டல் காடுகள் பேரழிவுக்குள்ளாகி வந்தன. இதைத் தடுக்கவென இலங்கையின் அப்போதைய கடற்படை அதிகாரியான அட்மிரல் ரவிந்திரா விஜயகுணரத்ன ஒரு திட்டத்தை ஆரம்பித்தார். 2011 இல் அவரால் தொடக்கி வைக்கப்பட்ட திட்டம் இப்போது வெற்றியளித்திருப்பது குறித்து அவர் மிகவும் பெருமிதமடைகிறார்.
அவருக்கு பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய, தற்போது கட்டளைத் தளபதியாகவுள்ளவரும் கடற்படையில் விசேட படையணிக்குத் தலமை தாங்குபவருமான சத்துர கமகே என்பவர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் என அவர் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
“சேர், உங்கள் யாழ்ப்பாணத் தீவுகள் அளவில் பெருத்து வருகின்றன. உங்கள் திட்டம் பலனளிக்கிறது. அதை உறுதி செய்யும் கூகிள் படத்தை நான் உங்களுக்கு அனுப்புகிறேன்” என கமகே கூறியதாக விஜயகுணவர்த்தனா தெரிவிக்கிறார். கமகே ஒரு பேராதனைப் பல்கலைக்கழக முதுமாணிப் பட்டதாரி. விண்வெளிக் கருவிகளின் மூலம் நிலங்களை மதிப்பீடு செய்வது அவரது துறை.
அக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெதுப்பகங்களின் விறகுத் தேவைக்கு கண்டல் தாவரங்கள் இலக்காகியிருந்தன. மிகவும் கடுமையான விறகாகையால் நீண்ட நேரம் எரியும் இவ்விறகுகளை வெதுப்பக முதலாளிகள் நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள். யாழ்ப்பாணத்தில் விறகுத் தட்டுப்பாடு அதிகமாகவிருந்த அக்காலத்தில் இத் தீவுகளிலுள்ள கண்டல் காடுகள் அவர்களின் தேவைக்காக பெருமளவில் அழிக்கப்பட்டன. பண்ணை பாலம் வழியாக பார வண்டிகள் மூலமும், சைக்கிளில் கட்டிக்கொண்டும் பலர் யாழ்ப்பாணம் சென்று விற்று வந்ததைத் தான் பார்த்தேன் என்கிறார் விஜயகுணரத்தினா. தீவுப்பகுதியின் பாதுகாப்பு விவகாரங்கள் அப்போது கடற்படையின் கைகளில் இருந்தபடியால், பொலிசாரைக் கடமையில் இருத்தி இவ் விறகுக் கடத்தலைத் தான் நிறுத்திவிட்டதாக அவர் கூறுகிறார்.
காரைநகர், எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, மண்டைதீவு ஆகிய ஏழு தீவுகளிலும் விஜயகுணரத்தினாவின் தலைமையில் 2011 இல் ஆரம்பிக்கப்பட்ட கண்டல் மரப் பாதுகாப்பு நடவடிக்கையால், 10 வருடங்களுக்குப் பிறகு கண்டல் வனத்தின் அளவு பருத்துச் செழித்து இருக்கிறது எனக்கூறிப் பெருமைப்படுகிறார் அவர்.
“கண்டல் காடு வெறும் விறகைத் தரும் மரங்களல்ல. சங்குகள், மட்டிகள், நண்டுகள், இறால்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இங்குதான் முட்டையிடுகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் இங்குதான் நடைபெறுகின்றது. பெரிய மீன்களிலிலும் இதர உயிர் கொல்லிகளிலுமிருந்து தப்பி இங்கு அவை பாதுகாப்பாக உயிர்வாழ்கின்றன” என்கிறார் அட்மிரல் விஜயகுணரத்தின.
“2011 இல், முன்னாள் கடற்படைத் தளபதியும், எனது உதவியாளரும், தற்போதய ஆப்கானிஸ்தான் தூதுவருமாகிய அட்மிரல் பியால் டி சில்வா, தீவுப்பகுதியில் கண்டல் காடுகளை வளர்ப்பதற்கு ஒரு புதிய திட்டத்துடன் வந்தார். இத் துறையில் நிபுணர்களை ஆலோசித்து, காரைநகர் பாலத்துக்கு அருகே சில நூறு கண்டல் தாவரங்களை அவர் நடுவித்தார். மூன்று மாதங்களின் பின்னர் அத் திட்டம் தோல்வியில் முடிந்தது. ஆனால் அத் திட்டத்தைக் கைவிட வேண்டாமென்வும் மீண்டும் முயற்சி செய்து பார்க்குமாறும் நான் அவருக்கு அறிவுறுத்தினேன். மீண்டும் அத் திட்டம் தோல்வி கண்டது. 100 தாவரங்களில் 6 மாத்திரமே தப்பிப் பிழைத்தது.
“2017 இல் அவர் வட பகுதியின் கற்படைத் தளபதியாக இருந்தபோது, அவர் தனது தோல்வியை மீண்டும் ஆராய்ந்தார். ஒவ்வொரு 6 மணித்தியாலங்களுக்கும் இந்த ஏரியில் நீர் ஏறி இறங்குவது வழக்கம். இதனால் புதிதாக நடப்பட்ட தாவரங்களின் வேர்கள் குழப்பமடைகின்றன. இதனால் நான்கு அடி தடிகளை நாட்டி அவற்றில் இத் தாவரங்களைக் கட்டி ஸ்திரப்படுத்தினார். இந்நடைமுறை வெற்றியளித்தது. தற்போது காரநகர் ஏரியில் முழுமையாக வளர்ச்சியடைந்த 600 மரங்களுள்ளன.
“எங்களது திட்டத்தால் மிகவும் சந்தோசப்படுபவர் சின்னம்மா. இக் கண்டல் காட்டில் பிடிக்கும் நண்டுகளை விற்று இந்த மூதாட்டி தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். அந்த நாட்களில் நாங்கள் இளம் அதிகாரிகளாக இருந்தபோது அவரிடம் நண்டு, இறால்களை வாங்கி வார விடுதிகளில் சமைத்து உண்பது வழக்கம். தென்னங்க் கள்ளுடன் அக் கறி நல்ல ருசியாகவிருக்கும். சிங்கப்பூருக்கு நண்டு ஏற்றுமதி செய்யும் ஒருவர் சின்னமாவிடம் ஒரு கிலோ ரூ.120 இற்கு வாங்குகிறார். அது அவருக்கு மிக்க மகிழ்ச்சி.
மீளவும் நடப்பட்ட கண்டல் மரங்கள் சின்னம்மாவின் வருமானத்தை அதிகரித்துள்ளது. காரைநகர் ஏரியிலுள்ள கண்டல் காட்டைப் பாதுகாப்பதில் சின்னம்மா இப்போது களைக்காத போராளி.
தீவுப்பகுதி மக்களுக்கு கடற்படையினர் பல நல்ல விடயங்களைச் செய்துள்ளனர். கண்டல் காடுகள் களவாக வெட்டப்படுவதைக் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. சத்துரா தனது விண்வெளிப் படத்தில் காட்டியதுபோல, தீவகள் வளர்கின்றன” என்கிறார் அட்மிரல் விஜயகுணரத்ன.