தீவிர இலக்கிய செயற்பாட்டளராக நெடுங்காலமாக இயங்கியவர். அவரின் இலக்கிய நட்பு பெரிதாக இருந்தது. அந்த வலைப்பின்னலை எப்போதும் பேணி வந்தவர். எப்போதும் நூல்களோ சஞ்சிகைகளோ அவரின் கைகளில் இருக்கும்.
90 களின் ஆரம்பத்தில் தோழர் இளஞ்செழியன் அவரின் அலுவலகத்தில் வைத்து எனக்கு அந்தனி ஜீவா அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். தோழர் இளஞ்செழியனை அவரது இறுதிக் காலத்தில் பராமரித்தவர்களில் அந்தனி ஜீவா முக்கியமானவர். அவரின் இறுதிச் சடங்கையும் முன்னின்று நடத்தியவர்களில் அந்தனி ஜீவாவும் ஒருவர்.
பல முக்கிய இலக்கியவாதிகளுடன் மிக நெருங்கிய தோழமை பூண்டவர். எழுத்தாளர் சாரல் நாடனின் நெருங்கிய சகாவாக நீண்டகாலம் இருந்ததைக் கண்டிருக்கிறோம். 2000 ஆம் ஆண்டு சென்னையில் “தமிழ் இனி 2000” மாநாட்டின் போது அவர்கள் இருவருடனும் ஒன்றாகவே சுற்றித்திருந்த நினைவுகளும் வந்து செல்கின்றன.
அவர் எங்கே கண்டாலும் இன் முகத்தோடு கண்களை விரித்துக் கொண்டு அருகில் வந்து ஏதாவது ஒரு விடயத்தை கதைப்பார்.அவர் வெளியிட்டு வந்த “கொழுந்து” சஞ்சிகையை பெரும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து நடாத்தி வந்தார். மலையக இலக்கிய இடைவெளியை கணிசமான காலம் நிரப்பி வந்தவர்களில் ஜீவா முக்கியமானவர்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜேவிபி யில் இணைந்து தீவிரமாக செயற்பட்டு வந்தார். அக்கட்சியின் சார்பாக தேர்தலிலும் போட்டியிட்டார். அக்கட்சியின் பத்திரிகையை நடத்துவதிலும் அவர் பங்களித்ததை நானறிவேன்.இனி ஓய்வு பெறுங்கள் தோழரே. உங்களுக்கு எமது செவ்வணக்கம்!