தோழர் மு.சின்னையா மறைவுக்கு புரட்சிகர அஞ்சலி!

அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த ஒரு சமூகச் சூழ்நிலையில் தோழர் சின்னையா கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றதினால் அரசாங்கத்தில் ஒரு எழுதுவினைஞர் வேலையைப் பெற்றுக்கொண்டார். பொதுவாக நமது தமிழர் சமுதாயத்தில் ‘உத்தியோகம் புருச லட்சணம்’ என்றும், ‘கோழி மேய்த்தாலும் கோண்மெந்திலை (கவர்ன்மெந்தலை அதாவது அரசாங்திலை) மேய்க்க வேண்டும்’ என்றும் சொல்வார்கள். ஆனால் அரசாங்க வேலை ஒன்று கிடைத்துவிட்டால் அவர்கள் தமது சுற்றம் சூழலை ஏன் சில Nவைளைகளில் மாதா பிதா சகோதரர்களைக்கூட மறந்து விடுவதுண்டு. தன் குடும்பம் தனது சோலி என வாழத்தொடங்கி விடுவார்கள்.

ஆனால் தோழர் சின்னையாவின் வாழ்வு அத்தகையது அல்ல. அவர் தனது அரசாங்க வேலைக்கு இணையாகத் தனது சமூகக் கடப்பாடுகளையும் ஒருங்கே நிறைவேற்றிய ஒருவராவார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த வாகனம் கம்யூனிஸ்ட் இயக்கமாகும். வாலிப வயதிலேயே இடதுசாரிக் கருத்துக்களால் உந்தப்பட்ட அவர், 1964 இல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதனுடன் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். அவரது பணிகளை பின்வரும் முறைகளில் வகைப்படுத்தலாம்.

தான் வாழ்ந்து வந்த மானாவளைக் கிராமத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஆழமாகவும் அகலமாகவும் வேரூன்ற வைத்தது.
• கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த சகல வெகுஜனப் போராட்டங்களிலும்

தன்னையும் தனனைச்மூழ இருந்தவர்களையும் ஈடுபடுத்தியது. குறிப்பாக, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் ஊடாக 1960 களில் வடபகுதி எங்கும் மேற்கொண்ட ஆலயப் பிரவேசம், தேநீர்க்கடைப் பிரவேசம், பொது இடங்களில் சமத்துவம் நிலைநாட்டுதல் போன்ற சாதியமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதுடன், தனது பகுதி மக்களையும் அவற்றில் ஈடுபட வைத்தது.

முக்கியமாக அவரது பகுதியில் அமைந்திருந்த பன்றித்தலைச்சி அம்மன் கோயிலில் இருந்து வந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போராடியதில் முக்கிய பங்கு வகித்து அந்தக் கோயிலை சகல சமூகத்தினரதும் வழிபாட்டுக்குத் திறந்துவிட வைத்தது.

• மானாவளைக் கிராமத்தில் இருந்த மோனதாஸ் சனசமூக நிலையத்தின் ஊடாக கிராம மக்களின் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முன்முயற்சி எடுத்ததுடன், அங்கு செயல்பட்ட வாசிகசாலையின் ஊடாக இளைய சமுதாயம் கல்வி அறிவு பெறவும், விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபவும் வழிகாட்டியாக இருந்து வட பகுதியில் ஒரு முன்னோடிச் சனசமூக நிலையமாக அதை மிளிர வைத்தது.

இப்படியே தோழர் சின்னையாவின் சமூகப் பங்களிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தனிப்பட்ட முறையிலும் அவருக்கும் எனக்குமான உறவுகளும் மிகவும் நெருக்கமாக இருந்ததையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். நான் அடிக்கடி மானாவளையிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்று அவருடன் உரையாடுவதுடன், சில சமயங்களில் அவரது இல்லத்தில் இரவு தங்கியும் வந்துள்ளேன். 1970 – 71 காலகட்டத்தில் அவர் மன்னார் மாவட்டத்திலுள்ள, முழுக்க முழுக்க முஸ்லிம் மக்கள் வாழும் எருக்கலம்பிட்டிக் கிராமத்தில் அமைந்திருந்த எருக்கலம்பிட்டி மத்திய மகாவித்தியாலயத்தில் எழுதுவினைஞராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைகளில் ஈடுபட்டிருந்த நான், சில கட்சி வேலைகளுக்காக மன்னாருக்கும் செல்வதுண்டு. அந்தச் சமயங்களில் அங்கு வாழ்ந்த தோழர் பங்கிராஸ் (பொன்னையா அண்ணை) அவர்களின் வீட்டிலும், சில முஸ்லிம் தோழர்களின் வீட்டிலும் தங்குவதுடன், சில சமயங்களில் தோழர் சின்னையா எருக்கலம்பிட்டி மத்திய மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த பாடசாலை விடுதியிலும் அவருடன் தங்குவதுண்டு. அந்த நேரங்களில் பல இரவுகள் நானும் தோழர் சின்னையாவும் எருக்கலம்பிட்டி கடற்கரையில் நீண்டநேரம் அமர்ந்திருந்து உரையாடிய நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாக உள்ளன.

இறுதியாக அவரை நான் சந்தித்தது 1998 இல் என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தைப் புலிகளிடமருந்து இராணுவம் கைப்பற்றியிருந்த நேரம். அவரது கிராமத்திலிருந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தைக்கு வியாபாரத்துக்கு வரும் ஒரு தோழரை எதேச்சையாக ஒருமுறை சந்தித்த போது தோழர் சின்னையா உட்பட மானாவளைத் தோழர்களைப் பற்றி விசாரித்தேன். அந்தத் தோழர் கொடுத்த தகவலை வைத்துக்கொண்டு அடுத்தநாள் தோழர் சின்னையா என்னைத் தேடிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து அளவளாவி விட்டுச் சென்றார். அவ்வளவு தூரம் தோழர்களில் பற்றுதல் கொண்டவர்.

மார்க்சிச – லெனினிசத்தில் உறுதியான நம்பிக்கை, எளிமையான வாழ்வு, பொதுமக்களுடன் எப்பொழுதும் இணைந்து செயல்படுதல், மற்றவர்களுக்கு உதவி செய்தல் என்பனதான் தோழர் சின்னையா என்ற தோழரின் மொத்த உருவ அமைப்பு என்றால் மிகையாகாது.

ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மகோன்னத மனிதர்களாக வாழ்ந்து மறைந்து கொண்டிருக்கும் நமது தோழர்கள் வரிசையில் இப்பொழுது தோழர் சின்னையாவும் இணைந்துவிட்டார். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், மானாவளை கிராம மக்கள் மற்றும் தோழர்களுக்கு எங்கள் எல்லோரினதும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், எமது செங்கொடியைத் தாழ்த்தி அவருக்கு எமது புரட்சிகர சிவப்பு அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.

(Maniam Shanmugam)