அவ்வாறான பல சம்பவங்கள் மனிதப்பிறவிகளுக்கு இடையே மனிதாபிமானமற்ற முறையில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், கடமையிலிருந்த போக்குவரத்து சார்ஜன்ட், லொறி சாரதியொருவரை கீழே தள்ளிவிட்டு, அவர்மீதேறி குதித்த சம்பவம் பேசும் பொருளாகிவிட்டது.
உதாரணங்களாக எடுத்துக்கொள்ளப்பட்ட இவ்விரு சம்பவங்களும் சட்டத்தை மதித்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய பொலிஸாரினால், மூர்க்கத்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான இன்னும் பல சம்பவங்கள் திரைமறைவில் மிக சூட்சுமமான முறையில் வெளிச்சத்துக்கு வராமல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம்.
போக்குவரத்து சார்ஜடின்டின் இச்செயற்பாட்டுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிந்தனைச் சித்திரங்களும் கீறப்பட்டுள்ளன.
“இருவழி நெடுஞ்சாலையில் பகல் நேரத்தில் ஒரு குடிமகனை பொலிஸார் ஒருவர் கீழே தள்ளிவிடுகிறார். கீழே விழுந்த மனிதனின் மீது பாய்கிறார். தனது சமநிலையை பராமரிக்க முடியாமல், உருளைக்கிழங்கு சாக்கு போன்று அபத்தமான முறையில் தரையில் விழுகிறார்” என ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியை முட்டி மோதிவிட்டு, தப்பிச்சென்ற சாரதியை கையும் மெய்யுமாக பிடித்து இவ்வாறு ஏறிக்குதித்து அந்த சார்ஜன்ட் தாக்குதல் நடத்தியுள்ளாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றச்சம்பவங்களைப் பொறுத்தவரை பொலிஸ் விசாரணைகள் நடைபெறும். இது வழமையாகும். ஆனால், சந்தேகநரொருவர் மீது இவ்வாறு குரூரமான முறையில் தாக்குதல்களை நடத்துவதற்கு, பொலிஸாருக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லை. மனித உரிமை அப்பட்டமாகவே மீறப்பட்டுள்ளது.
பன்னிப்பிட்டிய வீடியோவை செம்மையாக்கப்பட்டுள்ளது. அதனை பார்க்கும்போது, சிவில் உடையிலிருந்த ஒருவரே முதலில் தள்ளிவிடுகின்றார். அதன்பின்னரே, சீருடையிலிருந்தவர் தாக்குகிறார். சுற்றியிருந்தவர்களில் சிலர், பொலிஸ் கான்ஸ்டபிள்ளை கட்டியணைத்து அழைத்துச் செல்கின்றனர். ஆனால், கீழே விழுந்து துடிப்பவரை காப்பாற்றுவதற்கு எவரும் உடனடியாக முன்வரவில்லை.
அவ்விடத்தில் உயிர் போயிருந்தாலும் கூட, அவற்றை வேடிக்கை பார்த்துவிட்டு, அங்கிருந்து அகன்று சென்றிருப்பர். ஆனால், பொலிஸாரின் மனிதாபிமானமற்ற செயலை, வீடியோவாக பதிவிட்டு சமூகவலைத்தளங்களில் தரவேற்றம் செய்தவரின் மனிதாபிமானத்தை மதிக்கவே வேண்டும்.
நடுத்தெருவில் நின்று சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸாருக்கு உணர்ச்சிகள் மேலோங்கக் கூடாது. அதேபோல, சகலருக்கும் சட்டம் சமமானது என்பதை யாவரும் நினைவில் கொண்டால், இவ்வாறான கொடுமைகளில் மகிழாதிருக்கலாம் என்பதே எமது பார்வைக்குப்பட்டுள்ளது.