இதனிடையே, அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர் கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
இது தொடர்பாக மாளவிகா மோகனன் தம்மைச் சுற்றியுள்ள நிறவெறியை முதலில் பார்க்க வேண்டும் என்று நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“எனக்கு 14 வயது இருக்கும் போது, அப்போது எனக்கு இருந்த நெருங்கிய நண்பர்களில் ஒருவன், அவனை அவன் அம்மா எப்போது தேநீர் சாப்பிட விட்டதில்லை என்றான். ஏனென்றால் தேநீர் அருந்தினால் ஒருவரது தோலின் நிறம் கருத்துவிடும் என்று வினோதமான நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஒரு முறை அவன் அம்மாவிடம் தேநீர் கேட்ட போது, அவர் “தேநீர் அருந்தினால் அவளைப் போல கருப்பாகிவிடுவாய்” என்று என்னைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
அவன் வெள்ளையாக இருந்த மகாராஷ்டிரன். நான் கோதுமை நிறத்திலிருந்த மலையாளி. எங்கள் நிறத்தில் இருந்த வேறுபாடு குறித்து அந்த நொடி வரை எனக்குத் தோன்றியதே இல்லை. இந்த அனுபவம் என்னைக் குழப்பியது ஏனென்றால் எனது தோலின் நிறம் குறித்து ஒருவர் இழிவான தொனியில் பேசியது அதுவே முதல் முறை.
நமது சமூகத்தில் வெகு இயல்பாக இன வெறியும், நிற வெறியும் ஊறிப்போயிருக்கிறது. இன்றும் கூட கருப்பாக இருக்கும் ஒருவரை காக்கா என்று கூப்பிடுவதை நாம் பார்க்க முடியும்.
தென்னிந்தியர்கள், வட இந்தியர்களுக்கு எதிரான பாரபட்சமான நடத்தையும் மோசமாக உள்ளது. கருப்பாக இருப்பவர்களை நகைச்சுவையாக மதராசி என்கிறார்கள். ஏனென்றால் எதோ வினோதமான காரணத்துக்காக இந்த அறியாமையிலிருப்பவர்கள் அனைத்து தென்னிந்தியர்களும் கருப்பாக மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள்
வடகிழக்கு இந்தியர்கள் அனைவருமே சின்கி என்றே அழைக்கப்படுகிறார்கள். அனைத்து கருப்பின மக்களும் சகஜமாக நீக்ரோஸ் என்று அழைக்கப்படுகின்றனர். வெள்ளையாக இருப்பவர்கள் அழகு என்றும், கருப்பாக இருப்பவர்கள் அசிங்கம் என்றும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்
சர்வதேச இன வெறி குறித்து நாம் பேசுகையில், நம்மைச் சுற்றி, நம் வீட்டில், நம் நண்பர்கள் கூட்டத்தில், நம் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதில் இருக்கும் தவறை, தினசரி வாழ்க்கையில் நம்மைச் சுற்றி இருக்கும் இனவெறி, நிற வெறியை ஒடுக்க வேண்டும். நல்ல, கனிவான நபராக நீங்கள் இருப்பதே உங்களை அழகாக்கும். உங்கள் தோலின் நிறமல்ல”
இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.