நினைவாஞ்சலி: மோகனின் மௌனமே…! பல மொழிகளாக…. கவிதைகளாக…. காட்சிகளாக…..

உடல் தளர்ந்த தடுமாற்றத்தின் வீழ்தலால் ஏற்பட்ட விபத்து அவரை மயக்கி நிலையிற்கு அழைத்துச் சென்று எம்மிடம் இருந்து செயற்பாட்டு ரீதியாக பிரித்து விட்டது. ஆனாலும் அவரின் ஆக்கங்கள்… அவை வாய் வழியாக…. எழுத்து வடிவில்… வெளி வந்தவை இனியும் எம்மோடு வாழ்ந்து கொண்டுதுதான் இருக்கும்.

யாழ் இந்துக் கல்லூரியின் மைந்தன்…. அகதியாக புலம் பெயர்ந்து தமிழ் நாட்டின் கல்லூரிகளில் தனது கல்வியைத் தொடர்ந்தவர்.

எந்த சூழலிலும் மாணவனாக இருந்த போது அனைவராலும் விரும்பப்படும்…. அடையாளப்படுத்தப்படும்… தரமான நகைச்சுவைகளை பண்பாக வெளிப்படுத்துவர்.

இதனுடன் கூடிய ஈழவிடுதலைச் செயற்பாடுகள்.

தமிழ் நாட்டில் இருந்து பிரித்தானியா, கனடா என்று தனது அகதி வாழ்வைத் தொடர்ந்து இறுதியில் கனடாவின் வதிவிட வாசியாக பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தவர். இந்த அகதி வாழ்க்கையுடன் அவரின் மக்களுக்கான விடுதலைப் பயணமும் அவர் இயற்கை எய்தும் வரை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

அவரின் நகைச் சுவையிற்குள் ஒரு மிக முக்கிய சமூக முன்னேற்றத்திற்கான செய்திகளும் புதைந்து இருக்கும்.
அதனை சரியான நேரத்தில்(Timing) அளவாக வெளிப்படுத்தும் தன்மையுடையவர். அவை காலம் கடந்தும் பலரால் இன்று வரை பேசப்படுபவை. (அந்த…. வெள்ளிக் கிழமை வெஜ்ஜி றோல், மட்டின் றோல் பகிடி அபாரம்…)

அவர் எழுதிய கவிதைகளும், கட்டுரைகளும், பலராலும் அதிகம் அறியப்படாவிட்டாலும் அவை ஒவ்வொன்றும் பல ஆழமான கருத்துக்களைக் கொண்ட பொக்கிசமான என்னால் உணரப்பட்டன.
இவற்றில் அவர் தொடாத பக்கங்கள் என்று ஏதும் இருக்கவில்லை.
அவ்வளவு பரந்துபட்ட பார்வையை அவர் தனக்குள் கொண்டிருந்தார்.

காதலித்தவளை கரம் பிடித்து பிள்ளைகளுக்கு தந்தையான பின்பு அவரின் வாழ்கைத் துணையிற்கும் தாயாகவும், தந்தையாகவும் வாழ வேண்டிய சூழல் சிறிது காலத்தில் அவருக்கு ஏற்பட்டது.

இதனை அவர் எப்போதும் சலிப்பின்றி விருப்புடன் தனது பிள்ளைகளுக்கு சோறூட்டி தாலாட்டி பாடசாலைகளில் சேர்த்து கல்வியும் கற்பித்து வாழ்க்கையை கொண்டு செலுத்தியவர்.

அதனை தனது கடமை என்பதற்கு அப்பால் தனது இனியாளும் தானும் கை கோர்த்து சென்னை மாநகரில் நடந்து திரிந்து நினைவுகளுடன் பயணித்தவர்.

இனியாளின் (சுய)நினைவுகள் அவளை விட்டு சில வேளைகளில் நீங்கும் போதும் அரவணைப்பாய் பாதுகாத்து அவள் நல்ல நிலையிற்கு வரும் போதெல்லாம் அவளை நண்பர்களிடம் அறிமுகம் செய்து மகிழ்ந்தவர்…. வாழ்ந்தவர்…..

இதில் அவரின் வாழ்வு பலருக்கு உதாரணமாகவும் அமைந்திருக்கின்றது.
இந்த சுமையான…? வாழ்வை சுகமாக மாற்றிய அந்த மனத்தெளிவும், தைரியமும், திறமையும் அவரை பொருளாதார உயரங்களை தொடுவதற்கு வாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தாவிட்டாலும்….

பெற்ற மூன்று பெண் பிள்ளைகளையும் அவர்களின் எதிர்காலம் சிகரங்களை தொடும் வண்ணம் கல்வி சபையில் முன்னிறுத்தியவர்…

இதற்கு அந்த பிள்ளைகளின் பக்குவப்பட்ட நிலமைகளும் காரணம்.

தன்னுடன் கூடப் பிறந்து சகோதரர்கள் தாய் தந்தையர் ஏன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்று பெரும்படையானவர்கள் தோழர் பத்மநாபாவின் பொதுவாழ்வில் இணைந்திருந்ததும் அவர்கள் இன்றும் அவ்வளியில் சிந்திப்பதும், செயற்படுவதும் தோழர் மோகனின் அடையாளமாக நாம் நிச்சயம் சொல்ல முடியும்.

அவருடன் தோழர்கள், நண்பர்கள் பலரும் இதனை அறிவர்.

இந்த பொது வாழ்விற்கான பங்களிப்பில் சித்தாந்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் மிகவும் தெளிவான நிலையிலேயே தோழர் மோகன் எப்போதும் வாழ்ந்திருக்கின்றார்.

அவரின் பொருளாதார கீழ் நிலமைகளில் பல தோழர்களும், நண்பர்களும் அவருடன் கைகோர்த்திருக்கின்றார்கள். அதற்கு மோகனிடம் இருந்த இயல்பான பண்பாளன், நல்லவன் என்ற பொது பார்வை காரணமாக இருந்தது.

இதில் நானும் பல தடவை இணைந்திருக்கின்றேன்.

வீடுகளின் திருத்தல் வேலை என்ற சுய தொழிலில் ஈடுபடுவதே குழந்தைகளுக்கான சமையல் உட்பட்ட பராமரிப்பு வாழ்க்கை, இணையாளை கவனித்தல் என்றாக நேரங்களை ஒதுக்கி செயற்படலாம் என்பதாக தனது பொருளாதாரத் தேடலை தகவமைத்துக் கொண்டவர்.
இதனால் அவர் சந்தித்த வேலைச் சங்கடங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் அதிகம்.

இந்த சங்கடங்களைத் தவிர்க்கும் செயற்படும் ஆற்றலை அவரது வாழ்க்கை இணையாள் கொண்டிருந்தால் அந்த உடல் ஆரோக்கியம் உருவாகி இருந்தால் இன்று மேற்குலகில் பலரும் திரும்பிப் பார்க்கும் தொழில் முனைவோராக மிளிந்திருப்பார் தோழர் மோகன்.

இவற்கும் அப்பால் இலக்கிய உலகில் அவரின் படைப்புகள் பலவும் முன்னிலையிற்கும் வந்திருக்கும். அவை அதிகம் கவிகளாக… துணுக்குகளாக… சிந்திக்க வைக்கும் நகைச் சுவைகளாக..

இதுவரை அவரால் எழுதப்பட்டவை கிறுக்கப்பட்டவை ஏதும் இதுவரை தொகுக்கப்படவில்லை.

அவை அவர் வாய்மொழியாக வந்தவவையாக…. இருக்கலாம் எழுத்துக்களாக… கிறுக்கல்களாக… இருக்கலாம் ஏன் தோழர் பத்மநாபாவுடன் நெருங்கிய பழகும் அன்பு வட்டத்திற்குள் வாழ்ந்த அனுபவங்களாக இருக்கலாம் ஏதும் தொகுக்கப்படவில்லை.

இவை வரலாற்றில் பதியப்பட வேண்டும். இதற்கான தொகுப்பு ஒன்றை செய்வது நாம் தோழர் மோகனுக்கு செய்யும் நினைவாஞ்சலியாக அமையும் என்பது என் பார்வை.

இத் தொகுப்பு நிச்சயமாக சமுதாய மேம்பாட்டிற்கு, சமூநீதியிற்கு, ஒரு சமத்துவமான சமுதாயத்தை கட்டியமைப்பதற்கான சில செங் கற்களை நிச்சயம் விட்டுத்தான் சென்றிருக்கின்றது.

அவற்றில் பலவற்றில் சிலதை குறுக்கி இணைத்துள்ளேன். இது அவரின் படைபிற்கான தொகுப்பை நாம் ஏன் செய்யவேண்டும் என்பதை கூறி நிற்கும்.

மோகனின் பதிவுகளில் இருந்து….

உயிர் பிரிதலின் பின்னால் ஒருவரை பற்றி…. (இதிலிருந்து ஆரம்பிக்கின்றேன்…)

‘….ஒரு உயிர் உடலை விட்டு பிரிகின்ற வெற்றிடம் அவரவர் தனித்தன்மையால் பலர் நெஞ்சங்களை நிரப்பி செல்கிறது…..’

கொலை மரணங்கள் பற்றி…

‘…..கொலையாளிகள் யாராகவேனும் இருக்கட்டும் கொல்லப்பட காரணங்கள் எதுவாகவும் இருக்கட்டும் மரணங்களை நடத்துவது மன்னிக்கபடமுடியாத குற்றம்…..’

பெற்ற தாயைப் பற்றி….

‘….. அதிகாலை துயில் கலைத்து அடுப்படியில் தவமிருந்து
வேகாத விறகோடு சலியாமல் பேராடி
வேளை ஒன்று கூட தவறாமல்
வேளைக்கு பாடசாலை அனுப்பிவைக்க
நீ பட்ட பாடுதனை
வாழும் காலம் வரை மறந்துதான் வாழமுடியுமா?
அன்னையே உன் வெற்றிடத்தை நிரப்பிவிட
இந்த பூமியில் ஏதும் இல்லை என் அன்புத்தாயே….’

தனது திருமண வாழ்வு பற்றி…

‘…… எத்தனை கோபம் எத்தனை ஆற்றாமை எத்தனை நெகிழ்வு எத்தனை இனிமையான தருணம் அத்தனையும் அள்ளித்தந்த 25 வருடங்களில் முத்தான மூன்று செல்வங்களை முழு நிலவாய் அள்ளித்தந்த காலத்தின் கருணையோடு எமது 25 வருட திருமண வாழ்வை நினைந்து மகிழ்கிறோம்….’

தமிழ் மக்களின் இன்றைய அவலம் பற்றி……

‘……தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு அவர்களுக்கு அதிக பட்ச அதிகாரங்களை கொடுக்க வேண்டும் என்று சிங்கள பெருபான்மை இன மக்களுக்குள் மத்தியில் தேர்தல் பிரச்சாரமாக மேற்க்கொண்டு பதவிக்கு வந்தவர் சந்திரிகா. அதே போல் தமிழ் மக்களுக்கான அதிகபட்ச தீர்வை தர தயாராக இருந்தவர். அப்படிப்பட்ட தீர்வை பதவி சுகத்துக்காக புலிகளின் பினாமிகளாக செயற்பட்டவர்கள் தூக்கி வீசியெறிந்தவர்கள் இன்று அந்த அம்மையாரின் தீர்வுக்கு பாதியளவு கூட இல்லாத அதிகாரத்திற்காக பல்லை இழிக்கும் ஒரு தமிழ் தலைமையும் தமிழ் தேசியத்தை இனவாதமாக கக்கும் இன்னொரு தமிழ் தலைமையுயும் அதே பதவி சுகத்திற்கானது என்பதை தமிழ் மக்கள் புரியாத வரைக்கும் தமிழ் மக்களின் எதிர் காலம் இன்னும் கானல் நீரே….’

தனது இனிய தோழன் பத்மநாபா பற்றி……

‘……. நாபா என்ற மனிதர் ஒரு ஜனநாயகவாதியாகவோ, சோசலியவாதியாகவோ, எதார்த்தவாதியாகவோ, மனிதநேயம் கொண்டவராகவோ தன்னை மெருகேற்றி கொள்ளவில்லை அவர் அவராகவே வாழ்ந்தார் அவை அனைத்தும் அவருடன் வாழ்ந்தது…..’

தோழர் சேகுவாராவின் வரிகளால்….

‘……எனக்கு வேர்கள் கிடையாதுகால்கள் தான். அடிமைத்தனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்….’

ஈழவிடுதலைப் போராட்ட பாதையின் முரணப்பாடுகள் பசப்புகளைப் பற்றி….

‘…… உண்ணாவிரதம் அமைதி போராட்டம் எதிரிகளுக்கு புரியாத பாசை என செல்வி மதிவதனியை தூக்கிட்டு வந்தவக ஏன் தீலீபனை எதிரிக்கு புரியாத பாசையில உட்கார வைச்சு சாக சொன்னாங்க….’

மாற்றுக் கருத்தாளர்களை துப்பாக்கியினால் களமாடியதை பற்றி…..

‘…..ஊதினால் உடைந்து விழும் உடம்பை குண்டுகளால் துளைத்தெடுத்த வீரம் செறிந்த போராட்டம் எம்முடையது….’

ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கிய இரு தலைவர்களின் மரணம் பற்றி…

‘……தானாக ஏற்கப்பட்ட உன் தலைமைத் தன்மை வீணாக சிதறடிக்கப்பட்டபோது கண்ணீர் மழை மட்டுமே சிந்தப்பட்டது. ஆனால் திணிக்கப்பட்ட தலைமைத் தன்மை தன்னை முழுவதுமாக இழந்த போது மக்கள் குருதி வெள்ளத்தால் நனைக்கபட்டனர்.
ஒவ்வொரு உயிரின் மறைவுக்கு பின்னால் அவரை சார்ந்தவர்கள் மட்டுமே பலதை இழந்து நிற்பார்கள். ஆனால் உன் இழப்பினால் உன்னை சாராதகர்களும் தாங்கள் இழந்தது எதுவென்று அறியாமல் நிற்கின்றனர். உன்னுடைய அன்றைய ஒவ்வொரு அசைவிற்கும் இன்றைய அரசியல் தலைமைகள் தங்கள் இருப்பிற்காய் இசைவாய் நகர்த்தி செல்கின்றனர்.
ஆனால் தோழனே உன்னுடைய எண்ணங்களும் மனிதநேயமும் என்றாவது எமது மக்களை வாழவைக்கும்….’

முள்ளிவாய்கால் அவலம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றி…

‘….. துரோகிகள், கைக்கூலிகள் பெயரில் நடந்த கொலைகளுக்கு மக்களால் தந்த அங்கீகாரம், பொது மக்கள் மரணம் சண்டையில் தவிர்க்கப்பட முடியாதவை என ஜீரணிக்க பழகிய சமுதாயம் இன்னமும் முள்ளிவாய்க்கால் முடிவுக்கு காரணம் இதுவே என விளங்க மறுக்கிறது அல்லது விழுங்கி மறைக்கிது…’

ஈழவிடுதலை மரணங்களுக்கான ஒருசாரரின் வணக்க முன்னெடுப்புகள் பற்றி…..

‘…….உன் குருதி தோய்ந்த வீதியில் கால் பதித்து உள்ளே சென்றவர்கள் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள் உன் குருதியை வீதியில் சிதறவிட்டவனின் பிறந்த நாளுக்காய், பல்கொலைகழக ஆதரவாளர்கள்…’

புலம் பெயர் தேசத்தில் அல்லல்படும் ஒருவரின் உணர்வாக எம்மவர்களின் திறமையற்ற ஆட்சி அதிகாரம் பற்றி….

‘…… ஐஞ்சு வருச அதிகாரத்தை வைச்சு என்னத்தை கழுவி கிழிச்சீங்களோ சொல்லுங்கையா கழுவிறதை விட்டிட்டு ஓடோடி வாறம்….’

இந்தியாவையும் அவர் விட்டுவைக்கவில்லை தற்போதைய ஆட்சி பற்றி…

‘…..பப்பு தானே என தப்பு கணக்கு போட்டு மப்பில கோட்டை விட்டிட்டோமோ….’

தமிழ் நாட்டின் ஆட்சி பற்றி……

‘…..மோடி காலத்தில் இது தொடங்கப்படவில்லை காங்கிரஸ் ஆட்சிதான் எல்லாத்துக்கும் காரணம் என்று பதில்களை சொல்வதற்கு… பேசாமல் அவர்களையே ஆட்சியில் தொடரவிட்டிருக்கலாமே….?
இதுக்கு தமிழ்நாடு சுப்பர் முன்னுதாரணம் கருணாநிதி கொண்டு வந்ததை ஜெயலலிதா கிடப்பில் போடுவதும் ஜெயலலிதா கொண்டு வந்ததை கருணாநிதி கிடப்பில் போடுவதும் சும்மா சொல்லக்கூடாது வீராணம் குழாய்கள் எத்தனை ஏழை மக்களுக்கு உறைவிடமாக இருக்கின்றது….’

தமிழ் நாட்டுப் புலி ஆதரவாளர்களைப் பற்றி…..

‘….. தலைவர் உயிரோடு இருக்கிறாரமே பழம் நெடும் ஐயா அடிச்சு சொல்லுறாருஇ அதுசரி இந்த மனுசன் உயிர்வாழ தலைவரை உயிரோடுதானே வைச்சிருக்கோணும்….’

இயற்கையின் சீற்றத்தை பற்றி……

‘….கஜா நீ கரையை கடந்தாய் காலத்தால் மன்னிக்க முடியாத கறையுடன்…..’

சிரியாவில் இருந்து கனடாவிற்கு அகதிகளாக வந்த சில நாட்களில்….. ஒரு குடும்பத்தின் அனைவரும்(7 பேர்) தீ இன் விபத்தினால் கொலையுண்ட போது வெம்பி எழுதியது…..

‘…தீயே நீ தின்ற உடல்கள் போதுமா?
இல்லை உன் தீராத பசிக்கு இன்னும் சில பிஞ்சு உடல்கள் வேணுமா?
தீமையை கண்டால் தீயாய் எழுவேன் என்றேனே
நீயே தீமையாய் கண்டால் நான் என்ன செய்ய?
நீயாய் எரிவதற்க்கும்இ உன்னை எரிய வைப்பதற்ற்க்கும்
நிறையவே பாகுபாடு உண்டு
அதை புரிந்து கொள்
இல்லையெனின்……….’

ஒரு எழுத்தாளனின் உணர்வாக…..

‘……கவிதை ஒன்று எழுதினேன் இது ஒரு கவிதையா என்றார்ர்கள். பார்த்ததை பகுத்தறிந்து சென்னேன் இது நல்ல கதையா இருக்குது என்கிறார்கள்…..’

தோழர் மோகன் இற்கு எனது மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.