நீரைச் சேமிக்கும் முறை என்பது வருடத்திற்கு ஒரு சில நாட்கள் செய்ய வேண்டிய செயல் அல்ல. தற்போது பெருகிவரும் மக்கள் தொகையில் நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொரு விநாடியும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவருமே உள்ளோம். தண்ணீர் பற்றாக்குறை இன்று இல்லாவிட்டாலும் நாளைக்கே வரலாம். வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. உங்களின் சிறு கவனமும் சில லீட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம்.
அந்த வகையில், தற்போது நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது.
வறண்ட காலநிலையினால் நீர் மூலங்களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வரும். அதேவேளை, அதிக வெப்பம் காரணமாக நுகர்வோரிடையே நீரின் பாவனையும் அதிகரித்துள்ளது. இதனால், நீர் விநியோகத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, நீரை விரயம் ஆகாமல் சிக்கனம் ஆகாமல் அனைவரும் பழக வேண்டும். அதாவது, வீடுகளில் குழாயைத் திறந்து விழும் தண்ணீரைக் கொண்டு நேரடியாகப் பாத்திரங்களைக் கழுவுவதைத் தவிர்த்து, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரைப் பிடித்து அதிலிருந்து தண்ணீரை எடுத்துக் கழுவலாம். குடிநீரை ஏனைய தேவைகளுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
கோடைக் காலத்திலும்கூட குளியலறை ‘ஷவரை’ திறந்து விட்டு, நேரம் போவது தெரியாமல் குளித்து நீரை வீணாக்குவது முறையல்ல. மாறாக, வாளியில் தண்ணீரை நிரப்பிக் குளிப்பதன் மூலம் நீரைச் சிக்கனப்படுத்தலாம்.
கோடைக் காலத்தில் தண்ணீரின் சிக்கனம் கருதி, காலையில் மட்டும் குளித்து விட்டு, மாலையில் கை, கால்கள், முகம் மட்டும் கழுவிக் கொண்டால், தண்ணீரைச் சேமிக்க முடியும்.
வீட்டில் வாகனங்கள் வைத்திருப்பவர்கள், அதைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தப்படுத்துவதை விட்டுவிட்டு, துணியை நீரில் நனைத்து அதன் மூலம் துடைத்துச் சுத்தப்படுத்தலாம்.
தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிப்போர், துணி துவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
தற்போது உலகிலுள்ள அனைத்தும் வணிக மயமாகி விட்டதால் காற்றையும், தண்ணீரையும் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் தண்ணீர் தான் மூலாதார பிரச்சினையாகிவிடும். இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் ஆண்டுக்கு ஆண்டு மழை குறைந்து வருகிறது. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. தண்ணீரின்றி உயிர்கள் மடிகின்றன. எனவே, அதிக அளவு தண்ணீரை வீணாக்குவதை நன்கு உணர்ந்து, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட ஒவ்வொருவரும் உறுதி கொள்வது அவசியம்.
(Tamil Mirror)