நாய்க்கு நடுக்கடலிலும் நக்குத் தண்ணீர் என்பார்கள் நடுக்கடலில் (H₂O) நீர் மட்டும் இருந்தால் இது சாத்தியம்தான் ஆனால் அதற்கு (Na) சோடியமும் கலந்து இருக்கின்றது. அப்போ எப்படி நக்குத் தண்ணியாக இருக்க முடியும்.
இயற்பியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சம் விட்டு பிரபஞ்சம் தாண்டி புதையல் தேடும் போது நீர் இருக்கின்றதா…? என்பதையே முதலில் தேடுகின்றனர் அது முதலில் கோள் விட்டு கோள் தாவும் போதும் அவ்வாறுதான் ஆரம்பமானது.
உபரி நீரைத் தரமாட்டேன் என்று ஒரே மொழி பேசும் ஒரே தாய்வயிற்றுத் தேசியங்கள் இரணைமடுவில் போட்ட சண்டை இன்னும் தீரவில்லை.
எங்கள் திருகோணமலை சேனையூரில் கலக்கும் மகாவலி ஊற்றெடுப்பது மலையகத்தில் என்றாலும் அதனை வடக்கே திருப்பி வளம் பெறச் செய்வோம் என்ற நீர் அரசியலுக்குள் பேரினவாதம் தனது கைங்கரியங்களை காட்டும் என்ற பயம் இயல்பானதுதான்.
ஆனால் நீர் இன்றி அமையாது இந்த வளமான வடக்கு மண் என்பதையும் நாம் பார்த்தாக வேண்டும்.
பாராக்கிரமர்கள், சேனநாயக்கர்கள் குளங்களை, சமுத்திரம் என்று அழைக்கும் வகையில் கட்டியது நீர் ஐ தேக்கியது இன்றுவரை எமக்கு சோறு போடுவதற்கு உதவுவதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
புலம் பெயர் தேசத்து உறவுகளின் உபயங்கள் வெள்ளை, சிவப்பு வர்ணங்களை அதிகம் உருவாக்குவதில் அக்கறை காட்டுவதை விடுத்து அதற்கு அருகில் இருக்கும் தெப்பக் குளத்தையும், குட்டை, குளத்தையும், வாய்கால், வரப்புகளிலும் அதிக கவனத்தில் எடுத்தல் நீர் இன்றி அமையாது உலகு என்பதை ஏற்று நிற்கும்.
பொதுக் கிணற்றில் எல்லோரும் நீர் அருந்தலாம் என்ற உணர்வில் துலாக் கொடி பிடித்து தண்ணீர் அருந்தியதற்கான என்னைப் பெற்றவள் ‘…..’அவர்கள்’ இன் கிணற்றில் தண்ணீர் அள்ளிக் குடிப்பாயா….’ என்று சிறுவயதில் தடி முறியும் வரை என்னை அடித்து துவைத்தது இப்போதும் ஞாபகத்திற்கு வந்தாலும்…..
யுத்தத்தின் குண்டுகள் எல்லோரையும் அவர்கள், இவர்கள் என்ற வேறுபாடு இன்றி ஒன்றாக ஒதுங்க வைத்ததும் அடைகலம் புகுந்த கோடிக்குள் எல்லோரும் ஒரு செம்பில் தண்ணி வாங்கி குடிக்கும் அளவிற்கு மாற்றத்தை கொண்டுவநதிருந்தாலும்…..
நீறு பூத்த நெருப்பாக பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்த்து பொது தண்ணீர் தாங்கியில் ‘பட்டியல்’ இன மக்கள் தண்ணீர் குடிப்பதா…? என்று மனித மலத்தை கலந்த அவலங்கள் தமிழ் நாட்டில் அண்மையிலும் அரங்கேறத்தான் செய்கின்றது.
இதற்குள் மனித மலத்தை அகற்றி நீர் இனால் சுத்திகரிக்கும் அருந்ததியினருக்கு தண்ணீர் மட்டும் அல்ல தங்கும் இட வசதியை மாநிலத்தில் மறுத்த நாம் தமிழர் அரசியலில் இன்று கண்நீர் தான் விஞ்சுகின்றது.
திராவிடர் என்று ஒருதாய் மொழியில் இருந்து பலமொழிகளாக உருவாக்கம் அடைந்து பிரிந்து சென்ற பின்பு… முல்லைப் பெரியாறு, நீர் காவிரி நீர் என்ற நீர்ப்பங்கீட்டு அரசியல் ஓய்ந்தபாடில்லை.
இத்தனையும் இந்த நீர் ஐ சுற்றி இருப்பதினால் கூறுகின்றோம் ‘நீர் இன்றி உலகு அமையாது’ சோறு வேகாது உயிரினம் வாழாது…
அதனால்தானோ ‘…..அணிலாரே ஒரு சொட்டுத் நீர் இற்காக அரைகாலில் தொங்குகின்றீரோ….’
(உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day)
ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது.
அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும்.
அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டிற்கான (2023) உலக தண்ணீர் தினத்தின் மையக்கருவானது, ‘தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை விரைவுபடுத்துதல்’ ‘Accelerating the change to solve the water and sanitation crisis’ என்ற கருப்பொருளில் உள்ளது.)