அவ்வாறான சம்பவமொன்றுதான் பதுளையில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. முதலாம் தரத்துக்கு சேர்க்கப்பட்ட சி.வருண் ப்ரஜிஷ் தன்னுடைய பாட்டியுடன், பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது, லொறியொன்றின் சில்லில் மோதுண்டு, மரணித்துள்ளார். அவரது பாட்டி, கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் தரத்துக்கு மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்ளும் செயற்பாடுகள் பெரும்பாலான பாடசாலைகளில் நேற்று (15) ஆரம்பமாகின. பல பாடசாலைகளில் வரவேற்பு வைபவங்களில் ஓரளவுக்கு பிரமாண்டமான முறையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஆனால், வருண் ப்ரஜிஷின் அந்த வாய்ப்பை, லொறியின் வடிவில் வந்த காலன் அபகரித்துச் சென்றுவிட்டான். இந்த வடு, இனிவரும் ஒவ்வொரு வருடங்களும், பாடசாலைக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை உள்ளீர்க்கும் வைபவம் இடம்பெறும் போதெல்லாம். அச்சிறுவன் செல்விருந்த பாடசாலையின் நினைவில் பதிவாகும்.
மாணவன் என்ற நாமத்தை கூட பெற்றுக்கொள்ள முடிதளவுக்கு, நேற்றைய விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் நிறைவில், நீதிமன்றங்களின் ஊடாக, ஏதாவதொரு தீர்ப்பு கிடைக்கும். தீர்ப்புக்கு அப்பால், இன்றைய சம்பவமும் அந்த சாரதியின் மனதிலிருந்து அகலாத வடுவாகிவிடும்.
அதேபோல, வருண் ப்ரஜிஷித்தை வரவேற்க தயாராகியிருந்த ஏனைய மாணவர்கள், ஒரே வகுப்புக்குச் செல்லப்போகின்றோம், என கடந்த பல நாள்களாக கனவுக்கண்டுக்கொண்டிருந்த சக சிறுவர்களின் எண்ணங்களிலும் இச்சம்பவம் வடுவாகிவிடும்.
இவற்றுக்கெல்லாம், கவனயீனமே மிகமுக்கியமானதாய் அமைந்துள்ளது. பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்றுவரும் பொறுப்பை, தாத்தா, பாட்டியிடம் பலரும் ஒப்படைத்துவிடுகின்றனர். அதில் தவறில்லை. ஆனால், வீதியில் பயணிக்கும் போதும், பாதசாரி கடவையை கடக்கும்போதும் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றவேண்டுமென சொல்லிக்கொடுக்கவேண்டும்.
என்னதான் தலைபோகும் காரியமாக இருந்தாலும், முதலாவது நாளன்று பாடசாலைக்குச் செல்லும் போது, பெற்றோர், தன்னுடைய பிள்ளைகளை அழைத்துச்சென்றால், பிள்ளைகளிடத்தில் ஓர் உத்வேகம் ஏற்பட்டிருக்கும். அதேபோல, வேண்டப்படாத இவ்வாறான விபரீதங்களையும் தவிர்த்திருக்கலாம்.
அதுமட்டுமன்றி, வாகன சாரதிகளும் இன்னும் கவனமாக, வாகனத்தை செலுத்தவேண்டும். முந்திச் செல்கின்றோம் இன்றேல், வேகமாகச் செல்கின்றோம் என்பதற்கு அப்பால், கவனமாகக் செலுத்துகின்றோமா என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டும்.
பாதசாரிகளும், சாரதிகளும் கவனமாக இருந்தால் மட்டுமே, இவ்வாறான கவனயீனமான வாகன விபத்துக்களை தவிர்க்கலாம். அதனூடாக பட்டாம்பூச்சிகளைப் போல பறக்கும் பள்ளிக்குச் செல்லும் பிஞ்சுகளின் கனவுகளுக்கு உயிர்க்கொடுக்கலாம் என்பதே எமது கருத்தாகும்.
(Tamil Mirror)