பர்தா -1

பர்தா பற்றிய பிழையான விமர்சனங்கட்கு பலகாரணகள் இருப்பினும் முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன என்று சொல்லலாம். ஒன்று, பர்தா என்றால் என்ன என்ற தெளிவான விளக்கமின்மை; அடுத்தது அதன் பூர்வீகம் பற்றிய தெளிவான அறிவின்மை. இந்தப் புரிவின்மை சாதாரண பாமர மக்களிடையே மட்டும் காணப்பட்டால் அமைதியாக இருந்து விடலாம். ஆனால் இதுபற்றிய அறிவின்மை ஒரு சில நன்கு படித்த கல்விமான்கள் என்று கருதப்படுபவர்களிடேயேயும் காணப்படுவது கவலைக்குரியதாகும்.

பர்தா பற்றி விமர்சிப்பவர்கள் ஞானசார தேரர் குரானை கையில் வைத்துக்கொண்டு பிழையாக விளக்கம் சொல்வது போல் விளக்கம் சொல்லக் கூடாது, அது மிகவும் கவலையை அளிக்கின்றது. குரானை விளங்கிக்கொள்ள இவர்களிடம் ஆற்றல் கிடையாது. குரானின் மொழி சாதாரண அரபு மொழியல்ல. அது classical அரபு மொழியில் உள்ளது.

இதனைக் குரானிக் அரபு (Quranic Arabic) என்றும் சொல்வர். இது ஒரு உயர் தரப்படுத்தப்பட்ட இலக்கிய அரபு என்றும் கூறுவர். குறிப்பாக அரபு இலக்கியங்கள் அக்காலத்தில் எழுதப்பட்ட அரபு என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். இந்த அரபில் தான் கவிதைகள், ஏனைய இலக்கியங்கள் என்பன அமைந்திருந்தன. இது ஒரு புனிதமான மொழி என்றும் கூறப்படுகின்றது.

எனவே, குரான் சாதாரணமாக அரபியர்கள் பேசும் அல்லது எழுதும் அரபு மொழியில் எழுதப்படவில்லை. குறிப்பாக அரபு மொழியினை தாய் மொழியாகக்கொண்ட அராபியர்கள் கூட ஒரு சமய அறிஞரின் (Islamic Scholar) உதவி யுடனேயே குரானை விளங்கிக்கொள்கின்றனர். குரானை பிழையாக விளங்கிக்கொள்பவர்கள் அதனை விளங்கிக்கொள்வதற்கு இஸ்லாமிய கல்விமான்களால் (Islamic scholars) எழுதப்பட்ட விளக்கவுரைகளையும் வாசிக்க வேண்டும்.

மேலும், இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையானது, கலாச்சாரமானது குரானை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல; அதற்கு மேலதிகமாக ஹதீஸ் (Hadith), இஜுமா (Ijma), கியாஸ் (Qiyas) என்பனவற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. எனவே, பர்தாவினைப் பற்றிய தெளிவினைப்பெறுவதற்கு இவற்றை எல்லாம் வாசித்து, அவற்றில் பர்தா பற்றி என்ன கூறப்படுகின்றது என்று அறிந்த பின்னரே அதுபற்றிப் பேச வேண்டும்.

எனது தமிழ் நண்பர்கட்காக இவற்றைச் சிறிது விளக்கமாகக் கூறுவது பொருத்தம் என்று நினைக்கின்றேன்.

ஹதீஸ் என்பது இஸ்லாமிய பாரம்பரியங்களின் தொகுப்பாகும். இது முஹம்மது நபி (ஸல்) யினால் சொல்லப்பட்டவற்றையும், அன்னாரின் தினசரி வாழ்க்கை நடைமுறையினையும், அவரினால் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளையும் கொண்ட தொகுப்பாகும்.

அவருடைய வாழ்க்கைமுறை உதாரணங்கள் சுன்னா (the Sunna) என்று அழைக்கப்படுகின்றன. குரானுக்கு மேலதிகமாக ஹதீஸும் முஸ்லிம்களை வழி நடாத்தும் பிரதான அடிப்படை மூல ஆதாரமாகும்.

முஸ்லிம்களும், பிரதான இஸ்லாமிய அறிஞர்களும் மிக உறுதியாக, இவை முஹம்மது நபி (ஸல்) யினால் சொல்லப்பட்டவற்றினதும், அவருடைய செயல்களினதும், அவரால் அங்கீகாரம் வழங்கப்பட்டவற்றினதும் மிக ஆதார பூர்வமான பதிவுகளின் தொகுப்பு என நம்புகின்றனர்.

ஹதீஸ் இஸ்லாமிய கலாச்சாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இது பர்தா கலாச்சாரத்திற்கும் மிகப்பொருந்தும். பர்தா தொடர்பான ஹதீஸ் களை முழுமையாக வாசித்துத் தெளிவாக விளங்கிக்கொள்ளாதவரை ஒருவர் பர்தா பற்றிக் கருத்துச்சொல்ல நிச்சயமாக தகுதி பெற்றவரல்லர்!

உண்மையானதும் ஆதாரபூர்வமானதுமான ஹதீஸ்கள் இஸ்லாமியச்சட்டவாக்கத்திற்கும், முஸ்லிம்களின் அற வழிபாட்டிற்கும் குரானுக்கு அடுத்ததாக மூல அடிப்படையாக அமைகின்றன. ஹதீஸிற்கான ஆன்மீக அதிகாரம் குரானிலிருந்து வருவதாகவும் பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புகின்றனர். (குரான் வசனங்கள் 24:54, 33:21 ஆகியவற்றைப்பார்க்கவும்).

இஸ்லாமியச்சட்டங்கள், கலாச்சாரம் தொடர்பக குரானில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் மிக அதிகம் இல்லையாதலால், முஸ்லிம்களின் வாழ்க்கைக்கான பிரதான வழி காட்டியாக ஹதீஸ் கருதப்படுகின்றது; இஸ்லாமியச்சட்டத்தின் விதிமுறைகள் அதிகமாக ஹதீஸில் இருந்தும் பெறப்பட்டனவாகும்.

இஜ்மா (Ijma) என்பது ஒத்த கருத்து அல்லது உடன்பாடு என்று பொருள்படும். இது முஸ்லீம் சமூகத்தினால் அல்லது குறிப்பாக முஸ்லீம் அறிஞர்களினால் (Islamic scholars), ஹதீஸில் இருந்து உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது உடன்பட்டுக்கொள்ளப்பட்ட விடயங்களைக்குறிக்கின்றது. இஜ்மா இஸ்லாமிய சட்ட தத்துவத்திற்கு (Islamic jurisprudence) பயன்படுத்தப்படும் மூலாதாரங்களில் ஒன்றாகக்கொள்ளப்படுகின்றது.

கியாஸ் (Qiyas). இதனை மிக எளிமையாக ஒன்றிலிருந்து இன்னொன்றை அடையும் முறை (process of deductive analogy) என்று கூறலாம். இதன்படி ஹதீஸில் சொல்லப்பட்ட விடயங்கள் குரானில் சொல்லப்பட்ட விடயங்களுடன் எவ்வாறு ஒத்துப்போகின்றன, எவ்வாறு வேறுபட்டு இருக்கின்றன என ஒப்பீடு செய்து ஒரு புதிய சூழ்நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற முடிவினை அடைதல்.

சுன்னி (The Sunni) முஸ்லிம்கள் Hanbali, Hanafi, Maliki, Shafei ஆகிய இஸ்லாமிய சிந்தனைகளில் (schools of thoughts) எதாவது ஒன்றினை பின்பற்றுகின்றனர். இவை முறையே ibn Hanbal, Abu Hanifa, Malek, el -Shafei, ஆகிய இமாம்களினால் (Islamic Scholars) உருவாக்கப்பட்டவை.
இவை எல்லாவற்றையும் முழுவதும் ஆய்வு செய்ததன் பின்னர் பர்தா பற்றிக் கருத்துச்சொல்வதே அழகு!.

தமது அறிவுப்பரப்பின் சிறுமை காரணமாக இவர்களுடைய பார்தாவுக்கு எதிரான விமர்சனம் இன்று பர்தா அணியும் தமது உரிமைக்காக உச்ச நீதிமன்றங்கள்வரை சென்று போராடிக்கொண்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான பெண்களின் உரிமைக்கெதிரான குரல் என்பதை இவர்கள் மறந்து விடுகின்றார்கள். இவர்கள்தான் பெண்ணுரிமைக்கான பாதுகாவர்கள் என்றும் சிலவேளை மார்பு தட்டி சொல்லிக்கொள்கின்றனர்.

இன்று உலகில் சுமார் 80 கோடி முஸ்லீம் பெண்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் எதோ ஒரு வகையான பர்தாவினை அணிகின்றனர். மேற்கத்தய நாடுகளில்கூட முஸ்லீம் பெண்கள் கணிசமான எண்ணிக்கையினை யுடையவர்கள் பர்தா அணிகின்றனர்.

உதாரணமாக அமெரிக்காவில் கிட்டத்தட்ட அரைவாசி முஸ்லீம் பெண்கள் தமது சொந்த விருப்பத்தின்படி பர்தா அணிகின்றனர். இவர்கள் எவரும் பர்தா அணியும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை. எனவே தமது சொந்த விருப்பத்தின்படி பர்தா அணியும் கோடிக்கணக்கான பெண்ணுரிமைக்கு எதிரான கோசமாகவே, பர்தாவுக்கு எதிராகக் கதைப்பவர்களின் கருத்த்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும்! தமது சுயவிருப்பத்தின் மூலம் பர்தா அணியும் பெண்களின் உரிமையினை சட்டத்தின் மூலம் மறுப்பது அவர்களது பெண்ணுரிமைக்கெதிரான அடக்கு முறை என்பது சொல்லித்தெரிய வேண்டிய ஒன்றல்ல.

ஈரான், அபிகானிஸ்தான் போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே பர்தா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு முழு முஸ்லீம் பெண்களையும் விமர்சிக்கவோ குறைகூறவோ முடியாது. இந்த நாடுகளில் கூட, இலட்சக்கணக்கான முஸ்லீம் பெண்கள் இஸ்லாம் மார்க்கத்தின் நிமித்தம் முழு விருப்பத்துடன் பர்தா அணிகின்றனர்.

ஈரானில்கூட, 3 கோடி க்கு மேற்பட்ட பெண்கள் தமது சுய விருப்பத்தினாலேயே பர்தா அணிகின்றனர். அதாவது பெரும்பாலான முஸ்லீம் பெண்கள் அங்கு தன்னிச்சையாகவே பர்தா அணிகின்றனர். அங்கு பர்தாவுக்கு எதிராகப் போராடுபவர்கள் ஒப்பீட்டளவில் சிறு பகுதிப் பெண்களே!

ஆனால் மேற்கத்தைய மிகவும் செல்வாக்குள்ள ஊடகங்கள் அதன் உண்மை த்தன்மை முழுவதையும் அரசியல் காரணங்கட்காக வெளிக்கொணர்வதில்லை. பர்தாவுக்கெதிரான பிரச்சாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த வல்லரசுகளின் பங்கு மிகவும் அதிகமாக உள்ளது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இதே போல் ஆப்கானிஸ்தானில் உள்ள சுமார் 2 கோடி பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தமது சொந்த விருப்பத்தின்படியே சமய கலாச்சார காரணங்கட்காக பர்தாவை அணிகின்றனர்.

ஈரான், ஆப்கானிஸ்தான் அரசுகள் சட்டரீதியாக பர்தா அணியும் நிலையினை மாற்றினால் கூட இவர்கள் தொடர்ந்து பர்தாவை அணிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சவூதி அரேபியா ஒரு நல்ல உதாரணம். இங்கு பர்தா அணிவது இப்போது சட்டரீதியாக இல்லாவிட்டாலும் கூட பெரும்பாலான பெண்கள் தொடர்ந்து பர்தா அணிகின்றனர். இந்த நாடுகளில் முஸ்லீம் அல்லாத கணிசமான பெண்கள் பர்தா அணிவதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்!

ஹிந்து கலாச்சார உடையினை ஹிந்து அல்லாத ஒருவர் விமர்சிப்பதும் கிறிஸ்தவ கலாச்சார உடையினை கிறிஸ்தவர் அல்லாதவர் விமர்சிப்பதும் எவ்வாறு பிழையானதோ அதே வகையில் ஒப்பீட்டளவிலான தவறினைத்தான் முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம் பெண்களின் உடையினை போதிய அறிவின்றி விமர்சிக்கும் போதும் செய்கின்றனர் என்பதை இவர்கள் உணரல் சமய, சமூக புரிந்துணர்விற்கு அத்தியாவசியமாகும்!.

தொடரும்…..