பர்தா – 3

இஸ்லாமோபோபியாவில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மையாக வாழும் இனங்கள்மீது வெறுப்புக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களின் வெறுப்பு முஸ்லீம் சிறுபான்மையினர் மீது மட்டுமல்ல.

எனவே பர்தாவுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் இனவாதிகளா என்ற ஒரு தர்க்கரீதியான வினாவினை கேட்டு அதற்கு விடை காண முயற்சிப்பது நியாயப்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது.

எனவே, பர்தாவினை விமர்சிப்பவர்கள் பற்றியும், அவர்கள்பற்றிய பின்னணி பற்றியும் பொருத்தமான புள்ளிவிபர மாதிரிகளையும் (Statistical Models), ஆய்வு முறைமைகளையும் (Methodologies) பயன்படுத்தி இத்துறையில் அக்கறையுள்ள சமூகவியல் அறிஞர்கள் பொருத்தமான ஓர் ஆய்வினை மேற்கொள்ளலாம்.

நான் இத்துடன் தொடர்பான சில காரணிகளை (Variables) மட்டும் சுருக்கமாகக் கீழ் வரும் பகுதிகளில் எல்லா மட்ட வாசகர்களும் விளங்கக்கூடிய வகையில் எழிய தமிழில் விளக்குகின்றேன். அவைகளின் அடிப்படையில் பல பொருத்தமான கருதுகோள்களை (Hypothesis) அமைத்து நல்லதொரு ஆய்வினை மேற்கொள்ளலாம்.

அது பர்தா பற்றிய எதிர்மறை உணர்வு உள்ளவர்களின் மனதில் மாற்றமொன்றைக்கொண்டுவரக்கூடும். இதனால் பர்தாவுக்கு எதிரான விமர்சனத்தைப் பொய்யென நிரூபிக்க முடியும்.
பர்தா விமர்சனத்திற்குப் பின் இருக்கும் அரசியலும், இஸ்லாமோபோபியாவும் (Islamophobia):
பர்தா அணியும் பெண்களுக்கு எதிரான விமர்சனம் இஸ்லாமோபோபியாவின் ஓர் அங்கமாகவே நாம் நோக்க வேண்டும்.

இஸ்லாமோபோபியாவினை, முஸ்லிம்கள், அவர்களின் கலாச்சாரம், அவர்கள் பின்பற்றுகின்ற மதம் ஆகியவற்றிற்கு எதிரான விரோதம் அல்லது வெறுப்பு என்று கூறலாம். இதில் ஈடுபட்டுள்ளவர்களால் இது பகுத்தறிவற்ற முறையில் செய்யப்படுகின்றது.

இது முஸ்லிம்கற்கு எதிரான இனப்பாகுபாட்டிற்கு (racial discrimination) இட்டுச்செல்கின்றது. அது அவர்கட்குரித்தான மூல வளப்பங்கீடு, தொழில் வாய்ப்புக்கள், கல்வி வாய்ப்புக்கள், அரசியல் பிரதிநிதித்துவம் உட்பட பல்வேறு விடயங்களில் பாதகமான நிலைமையினை ஏற்படுத்துகின்றது. இது உரிய ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய இன்னொரு விடயமாகும்.


இன்று குறிப்பாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் அங்குப் பெரும்பான்மையாக வாழும் ஏனைய மதத்தவர்கள் சிலரின் பேச்சுக்கள், எழுத்துக்கள், நடத்தைகளினூடாக மட்டுமல்லாது சில நிறுவனங்களினால் நடை முறைப்படுத்தப்படுகின்ற கொள்கைகளினாலும் நடைமுறைகளினாலும் (institutionalised Islamophobia) இந்த இஸ்லாமோபோபியா வெளிப்படுகின்றது. இதற்கு நாம் பல உதாரணங்களைக் கூறலாம். இதில் மிகக்குறிப்பிடக்கூடிய உதாரணங்கள்தான் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பெண் ஆசிரியைகளும்/விரிவுரையாளர்களும், மாணவர்களும் பர்தா அணிவதற்கு எதிரான விமர்சனங்களும், நீதி மன்றங்களில் தொடர்கின்ற வழக்குகளும், பாடசாலைகளின் சீருடைக்கொள்கைகளின் திடீர் மாற்றங்களும், அவை தொடர்பான சில அரச சட்டங்களும் ஆகும்.

இதற்கு மேலதிகமாகப் பர்தா அணியும் பெண்கள்மீது உடல் ரீதியான, வார்த்தைகள் ரீதியான, இலத்திரன் தொடர்புச் சாதனங்கள் மூலமான முறைகேடுகளும் நடை பெற்று வருகின்றன. இதில் அந்ததந்த நாடுகளின் அரசியல்வாதிகளின் பங்கும் கணிசமான பங்கு இருக்கின்றது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரச கல்லூரி ஒன்றில் அங்குக் கல்விகற்கின்ற ஆறு முஸ்லீம் பெண் மாணவர்கள் ஹிஜாப் (முகம் வெளிப்படையாகத் தெரியக்கூடியதாக) அணிந்து கொண்டு வகுப்புக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதும், அதனால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் மூன்று நாட்கட்கு மூட வேண்டிய நிலை கடந்த வருடம் ஏற்பட்டதும் ஆகும்.

குறிப்பிட்ட இந்தக் கல்லூரியின் அபிவிருத்தி சபை பி. ஜே. பி ஆளும் கட்சியின் சட்டசபை உறுப்பினரை (MLA) தலைவராகக் கொண்டது. இவரின் தலையீட்டினால் குறிப்பிட்ட கல்லூரி திடீரென அதன் சீருடை கொள்கையினை மாற்றியது தான் இந்த மாநிலம் முழுவதும் இந்தப்பிரச்சினை தீ போல் பரவியதற்கு அடிப்படைக்காரணம்.

இந்தக்குழப்பம் குறிப்பிட்ட சட்டசபை உறுப்பினராலும் ஏனைய சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாலும் அவர்களின் அரசியல் நோக்கங்கட்காகப் பெரிது படுத்தப்பட்டது. பின்னர் ஒரு தேசியப்பிரச்சினையாக இது மாறியது. பின்னர், சமூக வலைத்தளங்கள் மூலம் இது சர்வேதேச பிரச்சினையாக மாற்றம் பெற்றது.

இது உண்மையில் குறிப்பிட்ட கல்லூரி சொல்வதுபோல் கல்வியோடு தொடர்பான பிரச்சினையல்ல. ஹிஜாப் அணிந்து கொண்டு இந்த ஆறு மாணவர்களும் வகுப்பறையினுள் செல்வதனால் அது எவ்வாறு அந்தப் பாடசாலையின் அல்லது ஏனைய மாணவர்களின் கல்வியினைப்பாதிக்கின்றது? இது உண்மையில் அரசியலோடு தொடர்பானதாகும்.

இஸ்லாமோபோபியாவிற்கு பின்னுள்ளவர்கள் பெருபாலும் இவ்வாறான அரசியல்வாதிகள்தான். இந்தியாவின் அரசியல் சட்டம் விரும்பிய உடையினை, பொது ஒழுங்கினை பாதிக்காத வகையில் அணிவதற்கான உரிமையினை உத்தரவாதப்படுத்துகின்றது. ஹிஜாப் என்ன வகையில் பொது ஒழுங்கினை பாதிக்கின்றது? எனவே இந்த ஹிஜாப் தடை இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டத்தை மீறும் செயலாகும்.

இது உண்மையில் பெண்கள்மீதான அடக்கு முறையும் ஆகும். இதில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டியது என்னவென்றால் இந்த முஸ்லீம் மாணவர்கள் குறிப்பிட்ட கல்வி ஆண்டின் பெரும்பகுதி முடியும்வரை ஹிஜாப் அணிந்தே வகுப்புக்களில் கலந்து கொண்டனர்.

அந்த ஆண்டின் இறுதி நெருங்கும் தறுவாயில் திடீரென அரசியல் நோக்கம் கலந்த கல்லூரி சீருடை மாற்றமே இந்தப் பாரிய பிரச்சினையினையை ஏற்படுத்தியது. இது இனக் க்கலவரமொன்றை நாடாளவியரீதியாக ஏற்படுத்துவதற்கான ஒர் உத்தியாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது.

இந்த இஸ்லாமோபோபியா மிக வேகமாகப் பரவி வருவதற்கு, தவிக்க முடியாத வகையில், பொருளாதார, அரசியல், போர் காரணங்களினால், முஸ்லீம் சிறுபான்மையினரின் அதிகரித்த இடப்பெயர்வும் குடியேற்றமும் பிரதான காரணங்களில் ஒன்றாகக்கூறப்படுகின்றது. முஸ்லீம் கலாச்சாரம், உதாரணமாக, ஐரோப்பிய கலாச்சாரத்ததோடு வேறுபட்டுக்காணப்படும்போது இஸ்லாமோபோபியாவிற்கு வழி வகுக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.

இது ஒரு கருதுகோள் (hypothesis) மட்டுமே. இது முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நிறுவப்பட வேண்டிய இன்னொரு விடயமாகும். முஸ்லிம்கள் அல்லாதோரும் பாரிய அளவில் மேற்கத்தைய நாடுகளில் குடியேறிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களது சமய கலாச்சாரங்களும் மிகப்பாரிய அளவில் மேற்கத்தைய கலாச்சாரத்துடன் கணிசமான அளவு முரண்படத்தான் செய்கின்றன.

ஏன் அவர்கட்கு எதிரான எதிப்பு முஸ்லிம்கள்மீதான எதிர்ப்பு அளவுக்கு வளரவில்லை? முஸ்லிம்கள் உலகில் இரண்டாவது பெரும்பான்மையினர் என்பதும், முஸ்லீம் நாடுகள் உலக பொருளாதாரத்தை கணிசமான அளவு தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கதாகும். பர்தா விமர்சனத்திற்குப்பின்னுள்ள பொருளாதாரக்காரணிகளை தனிப்பட இன்னொரு நாள் விரிவாக விளக்கவுள்ளேன்.

பாரிய அளவிலான குடியேற்றம் காரணமாக ஏற்கனவே ஐரோப்பியர்களிடமும், அமெரிக்கர்களிடமும் ஏனைய பொருளாத வளர்ச்சி அடைந்த நாட்டு மக்களிடமும் இருந்த பயமும், வெறுப்பும் 2007ன் பொருளாதார மந்தத்தின் பின் வளர்ந்து வந்த தேசியவாதிகளின் அதிகரித்த செல்வாக்கும் இஸ்லாமோபோபியாவினை மேலும் வலுவடையச்செய்தது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

இதன்காரணமாகப் பர்தா அணிந்த பெண்கள்மீதான விமர்சனங்களும் தாக்குதல்களும் அதிகரிக்கத்தொடங்கின. உதாரணமாக, Guardian
அறிக்கையின்படி (20 ஜூலை 2018), 2017 ம் ஆண்டில் மட்டும், 1, 201 இஸ்லாமோபோபியா தாக்குதல்கள் ஐக்கியராச்சியத்தில் (UK) மட்டும் நடந்துள்ளன. 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 26 சத வீத அதிகரிப்பாகும்.

அதி தீவிர வலது சாரிகளின் பங்கு இதில் அதிகமாக இருப்பதாகக்கூறப்படுகின்றது. இதைவிட பல தாக்குதல்கள் பதிவு செய்யப்படாமலும் போகின்றன. எனவே, உண்மையான தாக்குதல்கள், இதைவிட அதிகமானதாகும்.

இதன் பின்னணியில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகியதும் (Brexit) பங்ககளிப்புச்செய்துள்ளதாகக்கொள்ளப்படுகின்றது. 2016 ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் இதற்கு ஓரளவு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதில் சமூக வலைத்தளங்கள் பெரும் பங்காற்றியுள்ளன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கும், முகநூல் கம்பெனிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளும் அதன் பின் அவரது முக நூல் கணக்கு முடக்கப்பட்டதும் இங்கு கவனிக்கத்தக்கது. மேற்குறிப்பிட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லோருக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை.

பெண்ணுரிமை வாதிகள் ஏன் இது தொடர்பாக குரல் எழுப்புவில்லை?
இரட்டைக்கோபுர தகர்த்தலும் (9/11) பர்தாவுக்கு எதிரான விமர்சனத்தினை ஊக்குவித்துள்ளது. அப்போது, சிலர் பர்தா அணியும் பெண்கள் அனைவரையுமே பயங்கரவாதிகளாகவே பார்த்தனர்.

சஹ்ரானின் தாக்குதலுக்குப் பின் முஸ்லிம்கட்கு எதிரான இனப்பாகுபாடு இலங்கையில் மிக வெளிப்படையாகவே காணப்பட்டது இன்னொரு சிறந்த உதாரணம். அதன் பின் தொடர்ந்த காலப்பகுதியில் ஹிஜாப் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டதும், அதன் பின் ஆஸ்பத்திரிகளிலும், வங்கிகளிலும் சுபர் மார்கட்களிலும், பொது போக்குவரத்து வாகனங்களிலும், அரச காரியாலயங்களிலும் பர்தா அணிந்த பெண்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் எமக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

சஹ்ரானின் குண்டு வெடிப்பிற்குப் பிறகு இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் பௌத்தர்கள் எவ்வாறு நோக்கினார்களோ, அதே நிலைமைதான் 9/11 இற்குப் பிறகு அக்கால கட்டத்தில் மேற்கத்தைய நாடுகளில் காணப்பட்டது. அதில் ஓர் அங்கம்தான் பர்தா எதிர்ப்பு. அந்தக்கால கட்டங்களில் மனிதன் இதயம் அற்றவனாகவும், யதார்த்தபூர்வமாகச் சிந்திக்க சக்தியற்றவனாகவும் காணப்பட்டான்.

இலங்கையில் பௌத்த பெண்கள்மீது கருத்தடை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகப் பரப்பப்பட்ட வதந்திகளைப்போன்றதே இது. அதையும் பலர் நம்பினர். அதன் விளைவு மனிதம் செத்துக்காணப்பட்டது.
ஆனால், தமது பொருளாதார, அரசியல் அல்லது வேறு எந்தக்காரணத்திற்காகவும், எவ்வளவு சவால்கள் வந்த போதும் முஸ்லீம் பெண்கள் தமது சமய கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்கவும் இல்லை, அவர்கள் அதில் எந்தவொரு சிறு மாற்றத்தையும் செய்யவும் இல்லை என்பது பெண்ணியல்வாதிகள் பெருமைப்பட வேண்டியதொன்றாகும.

இது விமர்சிக்கப்பட வேண்டியதொன்றல்ல! அதாவது, தமது பர்தாவினை சிலர் விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக இதனை அணியும் பெண்கள் அவர்கள் வேறுநாடுகளில் குடியேறி வாழ்ந்தாலும் தமது வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கின்ற சமய நம்பிக்கையினை, கலாச்சாரத்தை/ தாம் பழக்கப்பட்ட வாழ்க்கை முறையினை, தாம் நடந்து வந்த நீண்ட பயணத்தினை தமது பொருளாதார, தொழில் காரணங்கற்காக மாற்றிக்கொள்ளவில்லை என்பதாகும். இது பெருமைப்பட வேண்டியதொன்றாகும்.

அது அவர்களுடைய உடம்பு; அதனை மறைப்பதற்கு அவர்கட்கு உரிமை உண்டு. அதை மறைக்க வேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது!.

உண்மை என்னவென்றால் முஸ்லிம்கட்கு எதிராகக் குரல் எழுப்புவதற்கு இனவாதிகட்கும் அரசியல்வாதிகட்கும் ஒரு சுலோகம் (label) தேவைப்பட்டது. பர்தா அவர்கட்கு மிக இலகுவாகப்பட்டது. குறிப்பாக 9/11 சம்பவத்திற்குப் பிறகு மேற்கில் வளந்துவரும் அடையாள அரசியலுக்கும் (Identity Politics) அதன் வெற்றிக்கும் பர்தாவினை மிகவும் காத்திரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் முஸ்லிம்களின் சமயம், கலாச்சாரம், தேசியம், சமூகப்பின்னணி, பாலியல் நோக்குநிலை (sexual orientation) என்பவற்றைப்பயன்படுத்தி தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நகர்த்தி வருகின்றனர். பல நாடுகளில், ஆச்சரியப்படக்கூடிய வகையில் இலங்கையிலும் கூட, LGBT தொடர்பான ஆதரவு வளர்ந்து வருவதும் அதற்கு ஆதரவான சட்டங்கள் இயற்றப்படுவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலின் (political agenda) ஓர் அங்கமாகும். அரசியல்ரீதியாக அல்லது வேறு வகையில் இவர்கள் பல நன்மைகளை அடையலாம். இதன் விளைவு தனி நபர்களின் சொந்த அடையாளத்தின் (identity) மீதும் படிப்படியாகத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். சுருக்கம் கருதி ஓரிரு உதாரணங்களுடன் நிறுத்திக்கொள்ளலாமென நினைக்கின்றேன். உதாரணமாக, சமய நம்பிக்கையுடைய பர்தா அணிந்த ஒரு பெண் ஒரு வலது சரியாக இருக்க முடியாது என இவர்கள் நினைக்கின்றனர்.

எனவே தீவிர வலது சாரிகள் பர்தா அணியும் பெண்களை வெறுக்கின்றனர். பர்தா அணிந்த ஒருவர் பெண்ணியல்வாதியாக இருக்க முடியாது என்று நினைக்கின்றனர். எனவே பெண்ணியல்வாதிகள் பர்தாவினை விமர்சிக்கின்றனர். ஒரு விஞ்சானி இறை நம்பிக்கையுடையவராக இருக்க முடியாது என்று இவர்கள் நினைக்கின்றனர்.

இப்படிப்பட்ட தனி நபர் அடையாளங்களும் பர்தாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. பர்தாவினை விமர்சிப்பவர்கள் அதனை அணிபவர்கள் மீது காட்டும் ‘கரிசனை’ போல் பர்தா அணியும் பெண்கள் அதனை அணியாத பெண்கள்மீது ‘கரிசனை’ காட்டினால் என்னவாகும்? பெண்களின் உடம்பு ஒரு விற்பனைப்பொருளல்ல விளம்பரப்படுத்துவதற்கு!

இன்று பெண்களின் உடம்பை விளம்பரப்படுத்தி பாரிய சர்வதேச கம்பனிகள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. ஆனால் பர்தா அணிந்த இறை விசுவாசமுள்ள முஸ்லிம் பெண்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதற்கு உடன்படமாட்டார்கள்; எனவே அவர்கள் இப்பெண்களை விமர்சிக்கின்றனர்.

இந்தச் சர்வதேச பாரிய கம்பனிகளும் சர்வதேச இனவாத அரசியலுக்கு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துக்கொண்டிருக்கின்றன. பர்தா அணிந்த பெண்கள் இக்கம்பனிகளின், அல்லது அரசுகளின் அல்லது தனிப்பட்ட நபர்களின் தனிப்பட்ட உள்நாட்டு, சர்வதேசிய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை அவர்கள்மீது திணிக்க இடமளிப்பதில்லை. அங்கேதான் முரண்பாடு ஏற்படுகின்றது. எனவே அவர்கள் இப்பெண்களை விமர்சிக்கத்தலைப்படுகின்றனர்.

இதில் இன்னும் பல தொடர்பான காரணிகள் இருக்கின்றன. இன்று பர்தா அணிந்த முஸ்லீம் பெண்களின் முன்னேற்றம் அதி வேகமாக அதிகரித்து வருகின்றது. இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், உயர் நீதி மன்ற நீதியரசர்களாகவும், பிரபலமான விஞ்சானிகளாகவும், பாரிய கம்பனிகளின் இயக்குநர்களாகவும் மிளிர்கின்றனர்.

இது போட்டியினையும் பொறாமையினையும் இவ்வாறான பதவிகளை அடைய முடியாதவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது. இவர்களை விமர்சிக்க அவர்கட்கு கிடைத்த ஒரேயொரு சிறந்த ‘ஆயுதம்’ அவர்கள் அணிந்திருக்கும் பர்தாதான். எனவே, அவர்களுடைய விமர்சனம் வெளிப்படையாகவே அவர்களினால் சாதிக்க முடியாத போட்டித்தன்மையினையே வெளிப்படுத்துகின்றது என்றும் கூறலாம்!.

இதைவிட, கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பின் மூலவளப்பற்றாக்குறையும், மூலவளப்பங்கீடும் பல முன்னேறிய நாடுகட்குகூட பெரும் சவாலாகவுள்ளது. எனவே வேறு நாடுகளிலிருந்து குடியேறிய மக்கள் மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்களுடன் இம்மூலவளப்பங்கீட்டில் போட்டியிடும்போது போட்டியும் பொறாமையும் காணப்படுகின்றது.

ஏனைய இன குடியேறிய மக்களைவிட முஸ்லிம்கள் கணிசமான அளவு அதிகமாகக்காணப்படுவதனால், அவர்கள் கண்களுக்குப் பெரிதாகத் தெரிவது முஸ்லிம்கள் மட்டும்தான். உதாரணமாக, இங்கிலாந்தில் ஆகப்பெரிய சிறுபான்மையினர் முஸ்லிம்களாவர்.

இவர்கள் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 7% வீதமாகக்காணப்படுகின்றனர். ஹிந்துக்கள் 2 %, சீக்கியர்கள் 1%. எனவே அதிகமாகவுள்ள முஸ்லிம்கள்தான் அவர்கள் கண்கட்குத்தெரிகின்றனர்.

குறிப்பாக மருத்துவ வசதிகளையும், குடியிருப்பு வசதிகளையும், பொதுநலக்கொடுப்பனவுகளையும் பெரும்பான்மையினருடன் பகிர்ந்து கொள்வதில் இவர்கள் மிகவும் போட்டியிட வேண்டியுள்ளது. இது பொறாமையினையும் இன உணர்வுகளையும் உருவாக்குகின்றது.

அவர்களது வெறுப்புணர்வுகளை வெளிப்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றாக முஸ்லீம் பெண்களின் பர்தா காணப்படுகின்றது.


உண்மை என்னவென்றால் பொருளாதார வசதிகளைப்பற்றியோ, அல்லது வேறு வசதிகளைப்பற்றியோ அல்லது மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதைப்பற்றியோ பர்தா அணியும் பெண்கள் கவலைப்படுவதில்லை.

அவர்கள் எந்தளவுக்கு தமது சமய நம்பிக்கையினை கொண்டுள்ளோமோ, எந்தளவுக்கு எமது கலாச்சாரத்தினை கடைப்பிடிக்கின்றோமோ, எந்த அளவுக்குத் தாம் தமது சொந்த அடையாளத்தைப் பேணிப்பாதுகாக்கின்றோமோ என்பதில்தான் கரிசனை உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.


ஒரு மனிதனுடைய உடை அவனது மனத்திருப்தியினைப் பொறுத்ததும்கூட. அதனால்தான் நாம் வெளியில் செல்வதற்கு முன் கண்ணாடி முன்னாள் நின்று முன்னும் பின்னும் திரும்பிப்பார்த்து தமது உடை சரியாக இருக்கின்றதா என்று சரி பார்த்துக்கொள்கிறோம். திருப்தி தராவிட்டால் மாற்றிக்கொண்டு செல்கின்றோம்.

இதே நிலைதான் பர்தா அணியும் பெண்களின் நிலையும் என்று கூறலாம். அது அவர்கட்கு திருப்தி தருகின்றது. அது இல்லாமல் அவர்கள் வெளியில் செல்லமாட்டார்கள். விமர்சிப்பவர்கள் எவ்வளவு விமர்சித்தாலும் அவர்கள் அதனை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அது அவர்களின் உயிரோடு கலந்திருக்கின்றது!

பர்தா அணிபவர்களுக்கு மனிதர்கள்தான் என்பதை விமர்சகர்கள் மறந்து விடுகின்றனர். உண்மை என்ன வென்றால் அவர்கள் எவ்வாறு பெண்களைப்பார்க்க விரும்புகின்றனரோ அவ்வாறு அவர்கள் தென்படவில்லையென்றால் அவர்களை விமர்சிக்கத்தொடங்குகின்றனர்; அவர்களை வெறுக்கத்தொடங்குகின்றனர். உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர்.

இதில் நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடுகளும் கணிசமான அளவு காணப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பக்கம் ஹிஜாப் அணிந்த பெண்கள் நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கின்ற வேலையில், சில நாட்டு நீதிமன்றங்களில் தம்முடன் தொடர்பான வழக்குகட்கு ஹிஜாப் அணிந்து சென்ற பெண்களை அவர்களின் ஹிஜாபை நீதிபதி கழட்டச்சொன்ன நிகழ்வுகளும் நடை பெற்றுள்ளன.

சில விமான நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்த பெண்களை அதனைக் கழட்டச்சொன்ன சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. மேலும் தொழில் தொடர்பான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் கணிசமானவை ஹிஜாப் தொடர்பானவையாகவே காணப்படுகின்றன. உதாரணமாக, கனடா முஸ்லிம்களின் தேசிய கவுன்சிலுக்கு அறிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் 35 % பர்தாவுடன் சம்பந்தப்பட்டனவாக உள்ளன.

இவை இஸ்லாமோபோபியாவின் உச்சக்கட்டத்தை காட்டுகின்றன. இப்படிப்பட்ட நாடுகள்தான், தம்மை நாகரீக சமூகம் என label ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் உண்மையில் நாகரீக சமூகத்தை (The Civilised Society) சேர்ந்தவர்கள் அல்லர். இவற்றைப்பார்த்துக்கொண்டு ரசிக்கும் அதே வேளை நாங்கள் நாகரீக சமூகத்தில் வாழ்கின்றோம் என்று கூறிக்கொள்பவர்கள் நயவஞ்சகர்களே! இவர்கள் வெட்கித்தலை குனிய வேண்டிய விடயம் இது!. பர்தா அணியும் பெண்கள் தமது சமய, கலாச்சார அடையாளத்தினை பாதுகாத்துக்கொள்ளும் அதே வேளை அவர்கள் வாழும் நாட்டின் கலாச்சாரத்திற்கு பாதிப்பு இல்லாமல் வாழ வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றனர்.

அதனால்தான் அவர்கள் பல்வேறு வகையான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். உதாரணமாக இன்று எத்தனையோ பர்தா அணிந்த இளம் பெண்களை கால் பந்தாட்ட, கரப்பந்தாட்ட, ஹொக்கி, கிரிக்கெட், ஓட்டப்பந்தய மைதானங்களிலும் நீச்சல் தடாகங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

அவர்கள் அணியும் பர்தா அவர்களின் எந்த முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கவில்லை; தடையாக இருப்பது இனவாதமும் அதனூடாக உருவான இஸ்லாமோபோபியாவும் தான் என்று கூறினால் மிகையாகாது. உண்மை என்னவென்றால் முஸ்லீம் பெண்கள் முன்னேறுவதை இவர்கள் விரும்பவில்லை.

முடிவாக, பர்தா எதிர்ப்பிற்குப்பின்னணியில் பல சுயநல, அரசியல், பொருளாதார காரணிகள் இருப்பது தெளிவாகின்து. இது தொடர்பாக சுய சிந்தனையுடையவர்கள் இன மத வேறுபாடின்றி வாய் திறந்து பேச வேண்டும். அவர்கள் வாய்மூடி மௌனம் சாதிப்பதுதான் இனவாதிகட்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சாதகமாகப்பயன்படுத்தி அரசியல் செய்யும் சமூக அக்கறையற்ற சில சுய நல அரசியல்வாதிகட்கும், சில பெண்ணியல்வாதிகட்கும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

பர்தாவினை விமர்சிக்கும் இவர்கள் தான் ஒழுக்கக்கேடான (unethical) சில நடத்தைகட்கும், அவை தொடர்பான சட்டங்கட்கும் சார்பாகக் குரல் எழுப்புபவர்களாகக்காணப்படுகின்றனர்.!

உதாரணமாக கருத்தடை, ஓரினச்சேர்க்கை ஆகிய சார்பான சட்டங்கள். நாகரீகமுள்ள ஒரு சமூகத்தில் (civilised society) இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. இவைபற்றித் தனிப்பட வேறாக எழுதவுள்ளேன்.

எனவே சுய சிந்தனையுள்ளோர் தமது மௌனத்தைக் கலைத்து வாய் திறந்து பேச வேண்டும்! பர்தாவுக்கு எதிரான விமர்சனத்தை, இதன் பின்னணியில் உள்ள இனவாத, பொருளாதார, அரசியல் காரணிகளை வெளிக்கொணர்ந்து இவர்களால்தான் பொய்யென நிரூபிக்க முடியும்!