நேரடி ஒலிபரப்பு…? ஒளிபரப்பு இல்லாத கால கட்டம் கறுப்பு வெள்ளையாக புகைப்படம் எடுக்கும் கால கட்டம் பத்திரிகைச் செய்திகளே விளையாட்டின் முடிவுகளை வர்ணனையுடன் எடுத்து வந்த நிலமைகள்.
தந்தையின் கனவை நனவாக்கியது இந்த வீரர்தான். உருகுவே என்ற தென் அமெரிக்க நாட்டிடம் பிரேசில் இறுதி ஆட்டம் ஒன்றில் தோற்ற போது தனது தந்தையின் அழுகை சமாதானப்படுத்த சிறுவனாக ‘….அப்பா ஒரு நாள் நான் எனது நாட்டிற்கு உங்கள் விருப்பப்படியே சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தருவேன்….” என்ற போது தனது கண்ணீரை துடைப்பதற்காக சமாதானம் செய்யும் சிறுவனாக மட்டுமே அவரை பார்த்தார் அவரின் தந்தையார்.
தனது தந்தையின் உதைபந்தாட்ட வீரன் என்ற கனவு அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் தொடர முடியாது போக அவர் தன்னை கால்பந்தாட்ட பயிற்சியாளராக மட்டுப்படுத்திக் கொண்டார்.
அவரின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். மிகவும் வறுமையில் வளர்ந்த பீலே, வறுமையால் திசைமாறிப் போகவிருந்த வாழ்க்கை பாடசாலை போவதை தவிர்த்து, அவரது கைகள் தேனீர் கடையில் பாத்திரங்களை கழுவின. இதற்கு மேலும் வேலை செய்தால் தான் சில வேளையாவது தனது குடும்பம் சாப்பிட முடியும் என்ற நிலையில் வீதி வீதியாக அலைந்து ‘கனவான்’களின் சப்பாத்துகளுக்கு பாலிஷ் போட்டுக் கொண்டார். வசதி படைத்தவர்கள் வீட்டு தரையை துடைக்கும் துப்பரவுத் தொழிலாளியாகவும் செயற்பட்டார் இதன் பின்புதான் தந்தையின் நெறிப்படுத்தலின் அடிப்படையில் கால்பந்தாட்ட வீரனாக வளர்த்து தேசத்தின் அடையாளமாக மாறினார்.
அந்த பெண்ணின்… தாயின்…. ஏமாற்றம் தனது மகனை கால்பந்தாட்ட வீரனாக்குவதில் ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை இதனையும் மீறி சிறுவனாக விளையாட்டு வீரனாக மைதானத்திற்கு இறங்கிவன்.
தென் அமெரிக்க நாட்டில் நிலவி வறுமை இங்கும் தனது கோரத்தைக் காட்ட பந்து வாங்க பணம் இல்லாத சூழலில் துணிகளைக் கொண்ட பந்து அமைத்து அதில் தனது பயிற்சியைச் தொடங்கியவர்.
இந்த தேசத்து மக்களுக்கு பூமி உருண்டையா என்று கேட்டால் தெரியாது என்பர். ஆனால் பந்து உருண்டை என்பதை கச்சிதாக சொல்வர்…, செய்வர். அதனால் தம்மிடம் கிடைக்கும் பொருட்களை வைத்து பந்தொன்றை உருவாக்கிவிடுவார்கள்.
இது முழு தென் அமெரிக்க லத்தீன் அமெரிக்க ஆபிரிக்க நாடுகளுக்கு பொதுவில் பொருந்தித்தான் இருந்து.
தந்தையின் கனவும் இயல்பாகவே சேரிகள் எங்கும் அந்த வீதிகள் தோறும் உருண்டோடும் கால்பந்தாட்ட செயற்பாடுகளும் அந்த வீரனையும் உருவாக்கி இருந்து.
‘எப்படி நம்ம ஊரில் கிழக்கில் திருகோணமலையில் வீதியில் சாதாரணமாக போகும் போது ஒருவர் எதிரில் வந்தால் அவர் அனேகமாக முன்னால் விளையாட்டுப் பயிற்சியாளராக தன்னை அறிமுகப்படுத்தும் ஒருவராக இருப்பாரே(இந்த அனுபவம் நான் திருகோணமலையிற்கு போகும் போதெல்லாம் அதிகம் ஏற்படுவதுண்டு) அதே போலத்தான் பிரேசிலிலும், தென் அமெரிக்கா. லத்தீன் அமெரிக்கா எங்கும் இந்த கால்பந்தாட்டம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அதுதான் நடந்து முடிந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் நெய்மரின் தோல்வியின் பின்னராக அழுகையும், பீலே யின் மரணத்தின் பின்னராக துக்கங்களும், வென்ற பின்பு மெஸ்ஸியின் கொண்டாட்டமும், மைதானத்திலிருந்து அவமானப்படுத்தப்பட்டு வெளியேறிய ஆஜன்ரீனாவின் மறு மகன் ரொனாட்டோவின் கண்ணீரும் கோடிட்டுக் காட்டி நிற்கின்றன.
இவர்கள் வாழ்வில் இந்த கால்பந்தாட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகிப் போன கலாச்சாரம் அது.
தந்தையின் கனவுகளை மூன்று முறை(1958, 1962, 1970) உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த மகனாக வாழ்ந்து மறைந்திருக்கும் பீலேயிற்கு உண்டு. இதற்கு அவரின் தனித்து ஆடும் திறமையும், தனது அணியிடம் அவர் பெற்றிருந்த நம்பிக்கையும், தலமைத்துவமும் காரணமாக இருந்தன.
மூன்று உலகக் கோப்பைகளை வென்ற ஒரே ஒரு வீரர், முதல் தரப் போட்டிகளில் 1000(மொத்தம் 1263) கோல்களுக்கு மேல் அடித்த ஓரே வீரர் அதனை நிறைவேற்றிய டிசம்பர் 19 ம் திகதி உதைப்பந்தாட்டத்தின் திருவிழா நாளாக பீலே தினம் என்று அவர் பிறந்த ஊரான சன்ரோஸ் (Santos) இல் உலகமே கொண்டாடுவதற்கு காரணமானவர்.
சற்றே உயரமான தோற்றத்தை உடைய பீலே தரையை விட்டு எழும்பி ஏனைய வீரர்களை விட சற்று கூடுதலான செக்கன்கள் காற்றில் நிற்கும் வல்லமை அவர் அதிகமான கோல்களை தலையினால் அடித்து இறக்கியதாக புள்ளிவிபரங்கள் சொல்லி நிற்கின்றன.
தனி ஒருவராக களைப்பின்றி அதிக தூரம் பந்தை கொண்ட சென்று அடிப்பதில் மரடோனாவிற்கு இணையாகவும் மெஸ்ஸியின் ஆட்டதிற்கு மாறாகவும் இருக்கின்றார் பீலே. ஆனாலும் ‘…. இந்த கால்பந்தாட்டம் தனி மனித ஆட்டம் அல்ல இணைந்த குழுவின் ஆட்டம்…’ என்பதை அவர் திரும்ப திரும்ப வற்புறுத்துதை அவர் தவறவில்லை.
இவர்கள் யாபேரிடமும் தமது ஆரம்ப புள்ளியான வறுமை சூழலில் இருந்து வந்து சிறந்த கால்பந்தாட்ட வீரராக பரிணாமம் அடைந்து புகழ், பணம், பாராட்டு என்று ஏதும் வந்தாலும் தமது கிராமத்து சிறுவனாக பந்து வாங்க முடியாது தத்தளித் அந்த வறுமையில் வாழ்ந்த நினைவுகள் இவர்களை விட்டுப் போவதில்லை.
அதனால்தான் இவர்கள் தமது புகழ் காலத்தில் தாம் சார்ந்த மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.
இதில் பீலேயும் விதிவிலக்கானவர் அல்ல.
உதைபந்தாட்த்தின் திறமையை அளவீடு செய்வதற்கு ஒரு நியமமாக பீலே யிற்கு முன்பு, பீலே யிற்கு பின்பு என்று சொல்லும் அளவிற்கு பீலே முழு உலகத்திற்கும் அளவீட்டு கோனாக, தலைவராக அவரின் 82 வயது மரணம் வரையும் ஏன் மரணத்தின் பின்பும் கொண்டாடப்படுவார்.
தனது விளையாட்டு ஆடையில் மேல் அங்கியில் 10 இலக்கத்தை பதித்து அந்த இலகத்திற்கு ஒரு தனி அடையாளம் கொடுத்தவரும் இந்த பீலே தான்.
இதன் பின்பு தான் கால்பந்தாட்டத்திற்கு அப்பால் பலவேறு விளையாட்டுகளிலும் இந்த 10 வது இலக்கம் அனேக விளையாட்டு வீரர்களின் விருப்பு இலக்கமாக மாறியிருப்பதிலும் பிலேயிற்கு முன்பு 10 பீலேயிற்கு பின்பு 10 என்று மாற்றம் ஏற்பட்டும் இருக்கின்றது.
பதின்மவயதில் இருந்து முப்பதுகளை கடந்த வயது வரைக்கும் தனது நாட்டில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை எதிர்த்து அறிவு வளர்சியடைந்த ‘பிராயத்தில்’ தனது எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தி 1974 நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் தேசிய அணியில் விளையாட மறுத்தார்.
அந்த வருடம் உலகக் கோப்பையில் பிரேசில் படு தோல்விகளை தனது கணக்கில் சேர்த்தமையிற்கு இது காரணமாககியது.
தான் யாருக்காக குரல் கொடுப்பேன் என்று நிலைநிறுத்திய அரசியல் நிலைப்பாட்டை இதில் உறுதியாக வெளிப்படுத்தினார்.
அவரின் ஆசைகளில் ஒன்றாக இன்று அவரின் மரணம் பிரேசில் இடதுசாரிக் கூட்டமைப்பு அரசால் நாடுதளுவிய ரீதியில் நடாத்தப்படுவது இதற்கு முந்தைய அரசு தொடரந்திருந்தால் அதுவும் அமெரிக்க சார்பு அரசு தொடர்ந்திருந்தால் இவ்வளவு சிறப்பாக அடையாளப்படுத்தப்பட்டதாக இருந்திருக்குமா என்பது கேள்விகளா நிற்க…
வரலாற்றில் சில நிகழ்வுகள் தற்செயலாக சிறப்பான தருணங்களை தன்னகத்தே இணைத்தக் கொள்கின்றது என்பதை எனக்குள் எற்படுத்தியிருக்கின்றது. நீண்ட நாட்களாக நோய்வாயப்புற்று இருந்தாலும் அவரின் மரணம் தற்போது நடைபெற்றதை எண்ணும் போது இந்த உணர்வு எனக்குள் எற்படுகின்றது.
தெருக்களில் ரெனிஸ்(Tennis) பந்தில் வெறும் காலால் தரையைத் தட்டி கல்லில் கால் பட்டு சிராப்பு ஏற்பட கிராமத்து வீதிகளில் விளையாடிய என்னைப் போன்ற பலருக்கும் உலகத்தர கால்பந்தாட்டத்தை பத்திரிகை செய்திகள் வானொலி மூலமும் உலகக் கோப்பை முடிந்த பின்பு யாழ் றியோ தியேட்டர் அரங்கு என்று எமக்கு அறிமுகப்படுத்தியது.
அன்று தொடக்கம் கால்பந்தாட்டத்தில் ஆதர்ச நாயகனாக எமக்கு காட்டியது இந்த பீலேயை தான். இதற்கு பின்னர்தான் மரடோனா ரொனால்டோ மெஸ்ஸி எல்லாம்.
நாடுகள் கடந்து கொள்கை வேறுபாடுகள் கடந்து அனைவரும் கொண்டாடும் மதிக்கும் ஒரு வீரராக வாழ்ந்தவர் பீலே.
அதனால்தான் அமெரிக்காவும் அதற்கு எதிரணியில் நிற்கும் தற்போதைய பிரேசில் அரசும் இவரின் மரணத்தை பெரும் இழப்பு என்ற செய்திகளை ஒருங்கே கூறி நிற்கின்றன.
இதில் மரடோனாவிற்கு இந்த எதிர் முகாமில் இருந்து இரங்கல்கள் பிடல், சே மீதான வெறுப்பால் கிடைக்கவில்லை. இந்த அரசியலையும் தாண்டி நினைவு கூர்வதற்கு ஏகாதிபத்தியங்களும் முன்வர வேண்டிய அளவிற்கு மிகச் சிறந்து ஆட்டக்காரராக இருந்திருக்கின்றார் பீலே(Pele)
மின் குமிழைக் கண்டு பிடித்த தோமஸ் அல்லா எடிசனின் மீதான ஈர்ப்பு மரியாதை இவரின் தந்தை அவருக்கு எட்(டி)சன்(எட்சன் அராண்டோஸ் டோ நாசிமென்டே)(Edson Arantes do Nascimento) என்ற பெயரின் பகுதியை கொண்ட பெயரை சூட்டி இருந்தாலும் இதுவரை இன்று பலரும் செல்லமாக அழைத்த பீலே முன்னிலைக்கு வந்த சுவாரசிய பெயர் மாற்றம் இதற்குள் இருக்கின்றது.
இசைக் கலைஞராகவும் நடிப்பில் சிறந்தவர் என்ற பன்முகத் தோற்றத்தையும் தன்னகத்தே கொண்ட இயல்பான கறுப்பின மக்களுக்குரிய இயல்புகள் இவரிடத்தில் இருப்பது ஒரு சிறப்பான விடயமாகவும் பார்க்ப்படுகின்றது.
விஞ்ஞானம் வளர்ந்து நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்த பின்பு பீலே(Pele) இவ்வாறு கூறுகின்றார்… ‘…. எண்பது ஆண்டு வாழ்வில் நான் செய்யாது ஒன்றே ஒன்று நிலவில் கால்பந்து ஆடாதது மட்டுமே….” என்று.
இன்னும் சில காலம் அவர் வாழ்ந்திருந்தால் அவர் நிலவிலும் கால்பந்து ஆடியிருப்பாரோ. எதிர்காலத்தில் அவரின் பெயர் சொல்லும் பல இலட்சம் சிறுவர்களில் ஒருவர் நிலாவில் அல்லது வேறு ஒரு கிரகத்தில் காலபந்தாட்ம் ஆடத்தான் போகின்றார். விஞ்ஞானம் அப்படிப்பட்டது.
அப்போதும் பீலே(Pele) உலக மக்களால் பேசப்பட்டுக் கொண்டுதான் இருப்பார். அவருக்கு எமது மரியாதை கலந்த அஞ்சலி