அந்த வகையில்தான், அம்பாறை- மல்வத்தை கிராமத்தில், மன்னார் நகரில், கிளிநொச்சி – முழங்காவிலில், நுவரெலியா – டயகமவில் புதிதாக மதுபான சாலைகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலே குறிப்பிட்ட அத்தனை பிரதேசங்களிலும், புதிதாக திறக்கப்பட இருக்கும் மதுபானசாலைகளுக்கு எதிராக, பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாடசாலை மாணவர்களும் ஒன்று திரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலைக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தால் வியாழக்கிழமை (06) முதல் 14 நாள்கள் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில், புதிய மதுபான சாலைகளுக்கு எதிராக, இதுவரையிலும் எவருமே நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை.
உயரிய சபையில் அங்கம் வகிக்கும் பலரிடமும், ஏனைய சபைகளில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் சிலரிடமும் மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் உள்ளமை தொடர்பில், கடந்தகாலங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. மதுபான விற்பனையின் ஊடாக, அரசாங்கத்துக்கு கிடைத்த வருமானம் குறைந்துள்ளது என அறிவிக்கப்பட்ட ஒருசில நாள்களுக்குள் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில், மேலே குறிப்பிட்ட பிரதேசங்களில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைகளுக்கு எதிராக, நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தால் இடைக்கால தடையுத்தரவை பெற்று, மக்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுத்திருக்கலாம்.
மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னர், சட்டவிரோதமான மதுபான பாவனை அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி, மதுபானசாலைகளுக்கு முன்பாகத் திரண்டிருப்பவர்களின் எண்ணிக்கையில் குறைவில்லை. ஆக, அரசாங்கத்துக்கான வருமானம் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றது.
‘ஒரு நாட்டு குடிமக்களின் பொருளாதார நிலை உயர்ந்தால், அந்நாட்டு அரசனின் நிலை உயரும்’ என்பதைத்தான், ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்’ என்ற ஔவையார் மிக நுணுக்கமாகத் தனது வரிகளில் குறிப்பிட்டுள்ளார். ‘குடி உயர கோன் உயரும்’ என்ற ஔவையின் சொல் இன்றும் பொருத்தமாக இருக்கிறது.
ஆனால், பொருள்தான் சற்று மாறியிருக்கிறது. ‘குடி’ என்பது குடிமக்களை இன்று குறிக்கவில்லை. கெடுக்கும் ‘குடி’யைக்தான் குறிக்கிறது. குடிப்பவர்களின் எண்ணிக்கையும், குடியின் அளவும் அதிகரிக்க, அதிகரிக்க அரசின் வருவாய் உயர்கிறது. ஆனால், மக்கள் பாதிக்கப்பட்டு, குடும்பம் சீரழிந்து சமூகமே சின்னாபின்னமாகி விடுகின்றது என்பதை, மக்கள் பிரதிநிதிகள் கவனத்தில் கொள்வது அவசியம்.
(Tamil Mirror)