கொழும்பில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு இலங்கையின் தூர பிரதேசங்களில் இருந்தெல்லாம் சிங்கள மக்கள் வண்டிகட்டி வந்து புத்தகங்கள் வாங்கி செல்வதை கண்டிருக்கிறேன். அதுமட்டுமின்றி என்னுடன் பணிபுரியும் அனேகமான பெரும்பான்மையின நண்பர்கள் தங்களது வீட்டில் சிறியளவிலான நூலகமாவது வைத்துள்ளனர்.
இலங்கைக்கு பயணமாக வரும் மேனாட்டு உல்லாச பயணிகளின் பைகளில் எப்போதும் ஒரு புத்தகம் இருப்பதையும் அவர்கள் பயணங்களில் வாசிப்பதும் கூட சாதாரண நிகழ்வாகிறது.
நமது வீடுகளில் நடப்பது என்ன?அரிய நூல்களை கொண்டிருக்கும் நமது நூலகங்களின் நிலை என்னவென்பது உங்களுக்கு தெரியும். இது தொடர்பாக நான் வாசித்த சம்பவம் ஒன்றை பகர்கிறேன்.
தமிழ் அன்பர் ஒருவர் சைவ சித்தாந்த வகுப்புகளில் கலந்து கொள்கிறார்.ஒருநாள் அறைக்கு வந்த நண்பர் இவரின் படிப்பு மற்றும் அறையெங்கும் இருந்த புத்தகங்களை கண்ணுற்று விட்டு “இதுவெல்லாம் சோறு போடுமா?ஏன் வேண்டாத வேலை?” என எள்ளி நகையாடல் செய்துள்ளார்.
நகையாடல் செய்யப்பட்ட நண்பர் வேறாரு நாள் கேரளாவில் இருக்கும் மற்றொரு நண்பரும் இதழாசிரியரின் வீட்டுக்கு போயிருக்கிறார்.வீடெங்கும் புத்தகங்கள். அப்போது இவர் கேட்கிறார்”இவ்வளவு புத்தகங்கள் குறித்து உனது வீடோ சுற்றமோ எதுவுமே கூறுவதில்லையா?” என கேட்க, மலையாள நண்பர் கூறுகிறார்”புத்தகங்கள் சம்பந்தமாக எள்ளி நகையாட எந்த பாமர மலையாளியும் விரும்புவதில்லை. ஏனென்றால் கேட்பவன் தன்னை மடையனாக நினைக்க கூடுமென்பதால்.ஆக யாரும் மடையனாக விரும்புவதில்லையே.வாசிப்பு மலையாளிகளின் பண்பாடு” என கூறியிருக்கிறார்.
அழிவுகள்,ஆக்கிரமிப்புகள் குறித்து எப்போதும் ஓலமிடும் சமூகமாகவும், “கடவுச்சீட்டு” கனவுகளில் வீங்கி கிடக்கும் சமூகமாகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள எனது சமூகத்திலிருந்து நான் காண்பது வெறுமனே மலட்டுத்தனமான சிந்தனைகளன்றி வேறென்ன?இத்தனை அழிவுகளின் பின்பும்கூட நம்மால் எழ முடியாமைக்கு பிரதான காரணம் நாம் அறிவார்ந்த சமூகமாக இல்லாமையே.எப்போதும் நமது அடையாளம் என்பது “வாயால் வடை சுடுதல்”.ஆக வீரவிளையாடல்களின் பெருமை பேசும் “வெற்று தேசிய குஞ்சுகள்” நாம்.
எனினும் இங்கேயும் அவ்வப்போது விடிவெள்ளிகள் கிளம்பாமலில்லை.
முகநூல் நண்பரும் அன்பு தம்பியுமாகிய கதன் அம்பாறை காரைதீவில் முடி திருத்தகம் (சலூன்) ஒன்றை நடாத்தி வருகிறார். தான் சேர்த்து வைத்த அறிவுச்செல்வங்களை பிறருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இப்போது அந்த சலூனில் “தில்லை அறிவாலயம்” என்ற படிப்பகத்தையும் திறந்திருக்கிறார்.பல்வேறு நண்பர்களும் இப்போது வாசிக்க நூல்களை வாங்கி செல்வதாக அவரது உரையாடல்கள் மற்றும் முகநூல் பதிவுகளிலிருந்து அறிகிறேன்.
நேற்றைய அவரது முகநூல் பதிவில் தரம் மூன்றில் பயிலும் யுதுர்சன் என்ற பிஞ்சும் வாசகனாகி இருப்பதை அறிகிறேன். கதன் விதைத்தது இப்போது விதையாகிறது.
அந்த சிறுவன் புத்தகங்களை தேடும் அழகை இரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும். புத்தகங்கள் வைத்திருக்கும் நண்பர்கள் அவற்றை வெறுமனே பூட்டி வைத்திராது இவ்வாறு ஏதேனும் முயற்சிகளை செய்வது நல்லதில்லையா?
(Thirugnanasampanthan Lalithakopan)