புத்தமதமும் – டாக்டர் அம்பேத்கரும்

டாக்டர் அம்பேத்கர் 1933இல் பம்பாயில் ஒரு மாநாட்டில் கூறினார்:

‘இந்துமதப் பற்று உள்ளவரை உங்கள் அடிமைச் சங்கிலிகளை உடைப்பதோ, வறுமையைப் போக்குவதோ இயலாது…உண்ணா நோன்பு, தொழுதல், யாத்திரை முதலியவற்றை விட்டொழியுங்கள். உங்கள் கவனத்தைச் சட்டம் இயற்றும் உரிமையைப் nறுவதில் செலுத்துங்கள்.

ஏனெனில், சட்டம்தான் எல்லா உலக இன்பத்திற்கும் இருப்பிடமாகும்.’

புத்தர் தலைவிதியையோ, பிறவியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதையோ நம்பவில்லை. மாறாக, இவைகளை எதிர்த்து வந்தார். இந்த நோக்கு டாக்டர் அம்பேத்கருக்குப் பெரிய உற்சாகத்தை ஊட்டியது.

பகுத்தறிவும், எண்ணும் சுதந்திரமும், புத்த மதத்தின் அடிப்படைகளாகும். இவற்றில் டாக்டர் அம்பேத்கருக்கு முழுக்க முழுக்க நம்பிக்கை இருந்தது.

ஜாதிக் கொடுமைகளின் விளைவாக ஒரு சிலர் எல்லா உலக நன்மைகளும் அனுபவித்தனர். பெரும்பாலோர் வறுமை, பசி, பட்டினியில் வாடினர். இவைகளைக் கண்ட புத்தர் இந்நிலையை ஒழிக்க வேண்டும் என்று பாடுபட்டார்.

வேதங்கள் தெய்வ வாக்கு அல்ல என்றும், பிறவியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று இல்லை என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.

ரிக் வேதம் கூறுவது சுத்த அபத்தம். பார்ப்பனன் பிரம்மாவின் முகத்திலிருந்தும், சத்திரியன் புஜத்திலிருந்தும், வைசியன் தொடையிலிருந்தும், சூத்திரன் காலிலிருந்தும் பிறந்தான் என்பது கேலிக்கூத்தாகும் என்றார் புத்தர்.

பிராமணன் தன் தாய் வயிற்றில் பிறப்பது நடைமுறை உண்மையாகும். அவ்வாறிருக்க பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தான் என்று கூறுவது சுத்தப்பொய் என்றார் புத்தர்.

புத்தரும் அவர் சீடர்களும் தினசரி வீடு வீடாகப் பிச்சை எடுத்து வாங்கிய உணவை உண்டனர். தீண்டப்படாதோர் குடிசைகளுக்குச் சென்று, ‘பகுதி பிட்சாந்தேஹி’ என்று சொல்லிக் கலசத்தை நீட்டியபோது, குதூகலத்துடன் உணவைக் கலசத்தில் இட்டனர். அவர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. பெரியதோர் துறவியாகிய புத்தர் தம் சீடர்களுடன் தங்கள் குடிசைகளுக்கு வந்ததே அவர்களுக்கு மகிழ்ச்சி.

புத்தர் பின்வருமாறு விளக்குகிறார்:

‘சகோதரர்களே! கங்கை, யமுனை, ஐராவதி, சரஸ்வதி, மகாநதி என்னும் நதிகள் மகாசமுத்திரத்தில் போய் விழுந்த பின் எவ்வாறு தங்கள் பெயர்களை இழந்து சமுத்திரத்தோடு சுமத்திரமாய் விடுகின்றனவோ, ஓ! சகோதரர்களே! அவ்வாறே நான்கு ஜாதிகளும் – பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் – எப்பொழுது ததாகதரின் கொள்கைகளையும், கட்டுப்பாட்டையும் ஏற்று நடக்கின்றானோ, அப்பொழுதே எல்லா ஜாதி வேற்றுமைகள் அழிந்து, ஒரே சமுதாயத்தின் அங்கத்தினர்களாய் விடுகின்றனர்.

புத்தரும், புத்த மதமும் ஜாதிப் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்து வந்தனர். பகுத்தறிவிற்கு ஒவ்வாதவை ஜாதியும், ஜாதிக் கொடுமைகளும் என்பதை நன்கு உணர்ந்த டாக்டர் அம்பேத்கர் புத்த மதத்தைப் பெரிதும் ஆதரித்தார்.

(இவை ஏ.எஸ்.கே. என்ற தமிழக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர் எழுதி வெளியிட்ட ‘டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்’ என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட வசனங்களாகும்)

(Manium)