பெஞ்சமின்

சொந்தக்காரனான பெஞ்சமின் (ஈபிஆரெல்ப்வில் டொக்ரர் பெஞ்சமின் என அழைக்கப்பட்டவர்) அடிக்கடி நிரோமியின் வீட்டுக்கு வந்து ஈபிஆரெலெப் இயக்கத்தவர்கள் எவ்வளவு முற்போக்கானவர்களாய் இருக்கின்றனர் என்பதையும் நிரோமி அறிந்துகொள்கின்றார். நிரோமி கவிதைகள் எழுதுகின்றவர், அவர் கவிதைகள் புலிகளின் பத்திரிகைகளிலும் வெளிவருகின்றது. பெஞ்சமினும் தம் சுவரொட்டிகளில் பாவிக்க நிரோமியிடம் கவிதைகள் கேட்கின்றார்.

புலிகள் மீது ஆர்வமிருக்கும் நிரோமிக்கு பெஞ்சமினிடம் கவிதைகள் கொடுக்கத் தயக்கமிருக்கிறது. அதைப் புரிந்துகொண்ட பெஞ்சமின், தான் வாசித்துவிட்டு தருகின்றேனெனக் கவிதைப் புத்தகத்தை எடுத்துச் செல்கிறார். அடுத்த நாள் பெஞ்சமின் இருந்த முகாம் புலிகளால் தாக்கப்பட்டு பெஞ்சமின் சிறைபிடிக்கப்படுகின்றார். இதைக் கேள்விப்பட்டு நிரோமியின் தாயாரும் நிரோமியும் புலிகளின் முகாமிற்குப் பெஞ்சமினைப் பார்க்கச் செல்கின்றனர். புலிகள் பெஞ்சமினைச் சித்திரவதை செய்தது நிரோமிக்குத் தெரிகிறது.

வாயிலிருந்த ஏறக்குறைய எல்லாப்பற்களும் சிதைக்கப்பட்டு வாயை மூடியபடியே பெஞ்சமின் இவர்களோடு கதைக்கின்றார். நிரோமியின் தாயார் புலிகளின் முகாம் பொறுப்பாளரிடம், இவர்களின் விடுதலை பற்றிக் கேள்வி கேட்கும்போது, விரைவில் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகின்றது.

இரண்டு மாதங்களாகியும் பெஞ்சமின் விடுவிக்கப்படாததால், அவரின் மாமியார் மலையகத்திலிருந்து பெஞ்சமினைத் தேடி வருகின்றார். பெஞ்சமின் பெற்றோர் நோயாளிகள் என்பதாலும் யாழுக்கான பயணம் இராணுவத்தின் கெடுபிடிகளினால் ஆபத்தானதென்பதாலும் அவர்களால் வரமுடியாது என்பதால் மாமியார் வருகின்றார். இத்தனைக்கும் பெஞ்சமினின் பெற்றோருக்கு பெஞ்சமின் இயக்கத்தில் இருக்கின்றார் என்பதே தெரியாது.

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தார் என்று மட்டுமே அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். கிட்டு மீது கிரனைட்டு தாக்குதல் நிகழ்கிறது. அதையடுத்து நிரோமியின் வீட்டுக்கு அவ்வப்போது வரும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பெஞ்சமினுக்கு ஏதோ நடக்கப்போகின்றது, விரைவில் அவரை வெளியில் எடுங்கள் எனக் கூற நிரோமியின் தாயார் அடுத்தநாள் பிரவுன் ரோட்டிலிருந்த முகாமிற்குச் செல்ல அங்கே இரண்டு பதின்ம வயதினர் இரத்தம் தோய்ந்த தரையைத் தேய்த்துக் கழுவிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆம், அங்கே ‘கந்தன் கருணை’ படுகொலை நிகழ்த்தப்பட்டு பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இது நிரோமிக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது. மிகவும் நட்பான மென்மையான பெஞ்சமின் எதற்காய் -அதுவும் தான் நம்பும் புலிகளால்- கொல்லப்பட்டிருக்கின்றார் என்பது நிரோமிக்கு நம்பவே முடியாதிருக்கின்றது.

யாழ் வரும் பெஞ்சமினின் மாமியாருக்கும் இத்தகவல் தெரிய, எப்படி இந்தச் சம்பவத்தை பெஞ்சமினின் பெற்றோருக்குச் சொல்வதென அவர் கவலைப்படுகிறார், அதுவும் இலங்கையரசிற்கு எதிராகப் போராடப்போன ஒருவர், சொந்த சகோதரர்களாலேயே கொல்லப்பட்டுவிட்டார் என்பதை எவரால்தான் தாங்கிக்கொள்ள முடியும்?

ஆனால் இதையெல்லாம் தெரிந்துகொண்டும் ஏன் நிரோமி புலிகளைத் தேர்ந்தெடுத்துப் பிறகு போராடப் போகின்றார்? இந்தக் கேள்வியை இவ்வாறான சிக்கலான அனுபவங்கள்/சம்பவங்களினூடாக பார்ப்பதினூடாகத்தான் நாம் ஒரளவாவது அறியமுடியுமே தவிர, புலிகள் ஆதரித்தல் எதிர்த்தல் இரு துவித முனைகளில் நின்றெல்லாம் நாம் ஒருபோதும் பார்க்க முடியாது என்பதையே மீண்டுமொரு வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கின்றது