ஆனால், பெண்களுக்கு எதிரான வன்முறை, தொடர்ச்சியானதாகவும் நிறுவனமயப்பட்டதாகவும் இருக்கிறது. இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் யாதெனில், பெண்களின் கருத்துரிமைகளுக்கான புதிய களங்களாகக் கருதப்பட்ட சமூக வலைத்தளங்களில், மிகப்பயங்கரமான வன்முறை அரங்கேறுகிறது.
இது, பாலியல் தாக்குதல்களாகப் பெண்களைக் குறிவைக்கிறது. வன்முறையாளர்கள் பாதுகாப்பாகவும் வன்முறைக்காளாகுவோர் அச்சத்துடனும் வாழுகின்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது; இது தடுக்கப்பட வேண்டும். இதற்கெதிராக அனைவரும் திரண்டு குரல்கொடுப்பதும் இவ்வகையான இழிசெயல்கள் நிறுத்தப்படுவதும் அவசியமாகிறது.
பெண்கள் பலருக்கான பொதுவெளியாகவும் கருத்துச் சுதந்திரத்தின் களமாகவும் சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன. அப்பொதுவெளியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவுகளும் தாக்குதல்களும் நிகழ்கின்றன. இது பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கமும் வக்கிரமும் இன்று நேற்று உருவானதல்ல. பெண்கள் மீதான ஒடுக்குமுறை அவர்களது உயிரியல் அடிப்படையிலானதன்று. மாறாக, அதன் தோற்றத்துக்குப் பொருளியல், சமூகப் பரிமாணங்கள் உள்ளன.
எந்தக் காலத்திலும், சமூக உற்பத்தியில் பெண்களின் பங்கு, சமூக உற்பத்திச் சக்திகளின் விருத்தியிலும் உற்பத்தி உறவுகளிலும் தங்கியிருந்துள்ளது. எனவே, பெண்கள் மீதான பால் அடிப்படையிலான ஆதிக்கமும் ஒடுக்கலும் முழுச் சமூகத்தினதும் சுரண்டல் அடிப்படையிலான உற்பத்தி உறவுகளில் இருந்து பிரித்து நோக்க இயலாது.
சமூக உற்பத்தியில், பெண்களுக்கு விதிக்கப்பட்ட இடம், சமூக அமைப்புகளின் மாற்றத்துடன் மாறி வந்துள்ளது. அதிதொன்மையான சமூகம், உற்பத்தி அடிப்படையில் அமைந்திருந்தது. உற்பத்தியின் பயன்கள், சமமாகப் பகிரப்பட்டன. உண்மையில், சமூக உற்பத்தியின் உயர்வில் பெண்களின் பங்கு, ஆண்களினதை விட மேலானதாக இருந்ததெனவும் கூறலாம்.
சமூகத்தில் பெண்களின் தாழ்வு, தனியார் சொத்துடைமையாலும் குடும்பம் எனும் அமைப்பாலும் நிர்ணயித்த வேலை ஒதுக்கீட்டாலும் உருவானது. வர்க்க அடிப்படையிலான வேலைப் பிரிவினை, எவ்வாறு தொடங்கியது என்றோ, அது எவ்வாறு பெண்கள் மீதான ஆதிக்கத்துக்கு இட்டுச் சென்றது என்றோ திட்டவட்டமாகக் கூற இயலாது.
எனினும், உற்பத்திச் சாதனங்கள் மீது, (முதலில் மண்ணும் விவசாயக் கருவிகளும் விலங்குகளும்) தனியார் ஆதிக்கத்துக்கு உட்பட்டதோடேயே ஆணாதிக்கம் தொடங்கியது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அதன் பின்பு, அடிமைகளையும் உற்பத்திக் கருவிகளையும் போன்று, பெண்களும் ஆணின் உடைமையாக நேர்ந்தது.
பெண்களின் சமூக உற்பத்தி மூலம், அவர்களுக்குப் பொருள் மீது, முக்கியமாக உற்பத்திச் சாதனங்கள் மீது, ஆதிக்கம் ஏற்படாதவாறு, சொத்துடைமை ஆண்களின் வசமாக்கபட்டது. இவ்வாறு, பெண்களின் உற்பத்திப் பங்களிப்பு, ஆணுக்குச் சேவையாற்றுவதும் அடுத்த தலைமுறையின் தோற்றமும் பராமரிப்பும் என முதன்மை பெற்றன.
முதலாளித்துவத்தின் வருகை, பெண்ணை ஓர் உற்பத்திக் கருவியாக மட்டுமன்றி, பன்முகப்பட்ட நுகர்பொருளாகவும் வடிவமைத்தது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில், பெண்கள் மிகுந்த அடக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம், பெண்களை ‘நவீனமாக்கி’, அவர்களுக்கு விடுதலை அளிப்பது போல தோற்றம்காட்டி, பெண்களை அடிப்படையான நிறுவனமயப்பட்ட அடக்குமுறைகளுக்குள் பேணுகிறது.
பெண்கள் மீதான ஒடுக்கு முறை என்பதை விரித்து நோக்கின், பல்வேறு தளங்களில் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளையும் அவற்றின் சமூகத் தாக்கங்களையும் காணலாம்.
தென்னாசியச் சமூக அமைப்புச் சூழலில், பெண்களது வாழ்நிலையை வழிநடத்தும் கருத்தியல் சிந்தனை, நடைமுறைகளில் நிலவுடைமைக் கண்ணோட்டமே முன்னுரிமை வகித்து நிற்கிறது. ஆணாதிக்கச் சிந்தனை என்பதும் மேற்படி நிலவுடைமைக் கருத்தியலின் வழிவந்த ஒன்றேயாகும். அதன் காரணமாகவே, பெண்கள் இன்றும் ஆண்களை விடக் குறைவானவர்களாகக் கொள்ளப்பட்டு, சமத்துவமின்மைக்கு உள்ளாகிறார்கள். இதன் வெளிப்பாடுகளே, சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதல்களின் அடிப்படையாகும்.
இலங்கையில், பெண்களுக்கான பொதுவெளிகள் இன்னமும் விரிவடையவுமில்லை; ஜனநாயகப்படவுமில்லை. இதில் கவனிக்க வேண்டிய விடயம், உலகின் முதலாவது பெண் பிரதமரைத் தந்த நாடு இலங்கை. இங்குதான், ஒரு பெண் ஜனாதிபதியாக 11 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார். ஆனால், இலங்கையில் பெண்களுக்கான உரிமைகள் உறுதிசெய்யப்படவில்லை.
ஏனெனில், வெறுமனே பதவிகளுக்குப் பெண்கள் தெரிவாவது, பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் சமூகத்தில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கருத்தியல் ரீதியான ஒடுக்குமுறைகளைக் களைவதன் மூலமே, பெண்களின் விடுதலை சாத்தியமாகும்.
இன்று சமூக ஊடகங்களில், பயனர்களாக பலர் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், இத்தளங்களில் நடப்பதைப் பலர் பார்க்கிறார்கள். அவர்களில் பலர், அதற்கெதிராகக் குரல் கொடுக்காமல் அப்பால் நகர்கிறார்கள். இன்னும் சிலர், அக்கருத்துக்கு ஆதரவு சேர்த்து, வன்முறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார்கள்.
இவ்விடத்தில் இரண்டு உதாரணங்களை இங்கு சுட்டிக் காட்டல் தகும்.
முதலாவது, அண்மைக் காலமாகப் பொதுவெளிகளில் இயங்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக, முகநூலில் நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதல். மிக மோசமான பாலியல் வசவை, வெளிப்படையாக இவர்களால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ள முடிகிறது; அதை அச்சமின்றித் தொடரவும் முடிகிறது.
இது, நாம் வாழும் சமூகம் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. நாம் வாழும் உலகு மட்டுமன்றி, மெய்நிகர் வெளிகளும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதனவாக மாறிவிட்டன என்பது, கவலை தருகிறது.
இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களில் பலர், சமூக வலைத்தளங்களில் பயனர்களாக இருப்பவர்கள். நீங்கள், நிச்சயம் பெண்களுக்கு எதிரான வசவுகளை, பாலியல் தொல்லைகளை, சமூக வலைத்தளங்களில் தரிசித்திருப்பீர்கள். ஆனால், அதற்கும் எனக்கும் தொடர்பில்லை என்று, அப்பால் நகர்ந்திருப்பீர்கள். உங்களுக்கு, மார்ட்டின் நெய்மோலரின் ‘அவர்கள் என்னைத் தேடி வந்தபோது’ என்ற கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன்.
இரண்டாவது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்கள், பகடிவதை என்பதன் பெயரால், நிகர்நிலையில் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டமையும் அதற்குப் பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கையும் கவனிப்புக்குரியது. பகடிவதையின் பெயரால் இவ்வாறான நடத்தைகள், புதிய கட்டத்தைத் தொட்டுள்ளன. பல்கலைக்கழகங்களோ, “எமது வளாகத்தில் பகடிவதை இல்லை” என்று தொடர்ந்து சாதித்தாலும், சம்பங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இவ்விரண்டு உதாரணங்களும், எமது சமூகம் அவசரமாகக் கணிப்பில் எடுக்க வேண்டிய சில விடயங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
தென்னாசியச் சமூகங்களில் ஆணாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த ஒடுக்குமுறை, பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.
பெண் என்பவள் அடித்தோ, விரட்டியோ, துன்புறுத்தியோ ஆணால் அடக்கியாளப்பட வேண்டியவள் என்பதை, திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் சொல்லிக் கொடுக்கின்றன. வன்முறைக்கு ஆளாகும் பெண், வீட்டிலோ வெளியிலோ அது குறித்து நம்பிக்கையுடன் பேசுவதில்லை. தன்னுடைய குரல் நிராகரிக்கப்படக்கூடும்; தான் அவமானப்படுத்தப்படக்கூடும்; அதை வைத்து, மற்றவர்கள் தவறாக நடக்கக்கூடும் என்கிற காரணங்கள் அதன் பின்னணியில் உள்ளன.
வன்முறை, அச்சுறுத்தல் என்கிற ஆயுதங்கள், பெண்களை அதே இடத்தில் இருத்தி வைக்கின்றன. இந்த ஆயுதங்களை ஏவுகிறவர்கள், ஆண்களாகவே உள்ளனர். இதன் வடிவங்களும் களங்களும் மாறியுள்ளனவே தவிர வன்முறை தொடர்கிறது.
இன்றும் பெண்களுக்கு எதிரான எல்லாக் கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, என்பதுதான் பொதுப்புத்தி மனநிலை. ஆனால், மேற்கண்ட உண்மைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கௌவிக் கொண்டிருக்கும் தீராத நோயின் அறிகுறிகள் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
பெண்களின் ஜனநாயக வாழ்வுரிமைகளை மதிக்கும் உணர்வுகள் ஒவ்வொரு மனிதனிலும் உட்பொதிந்திருக்க வேண்டும். ஆணையும் பெண்ணையும் சரிசமமாகப் பார்க்கும் மனோநிலையை பாடசாலைகள், சிறுவயது முதலே உருவாக்க வேண்டும். இதை, ஒரு வளமான எதிர்கால சந்ததியை உருவாக்க விரும்பும் சமூகம் நிச்சயம் செய்யும்.
இன்று பொதுவெளியில் செயற்படும் கருத்துரைக்கும் போராடும் பெண்கள் அனைவரும், போற்றுதலுக்கு உரியவர்கள். அவர்கள் அனைவருக்குமாகப் போராடுகிறார்கள். அவர்கள் மீதான தாக்குதல், மறைமுகமாக எம்மீதானதும் எம்சமூகத்தின் வளமான எதிர்காலத்தின் மீதானதுமான தாக்குதல் என்பதை, நாம் உணர வேண்டும்; எதிர்வினையாற்ற வேண்டும்.