அவை தமிழ் சொற்களாகவும் உள்ளன. ஆங்கிலச் சொற்களாகவும் உள்ளன. சொற்களைப் பார்ப்போம். அரசியல் விஞ்ஞானம் கற்ற மாணவர்கள் மட்டுமறிந்த மிதவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம், பாசிசம் போன்ற சொற்கள் யாவும் அன்றாடம் தெரியும் சொற்களாகி விட்டன.
இவற்றின் தத்துவார்த்த கருத்துக்களை விபரிக்கப் புகுந்தால் இப்பந்தியின் திசையும் மாறிவிடும். பத்தியின் சுவையும் கெட்டுவிடும்.
அராஜகம் என்ற சொல் தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களிடையே உபயோகிக்கும் சொல்லாகிவிட்டது. இச்சொல்லின் கருத்து நீதிக்குப் புறம்பான செயலெனச் சுருக்கமாகக் கூறலாம்.
பொலிஸ் என்ற சொல்லைமட்டும் தெரிந்த பொதுமக்கள் ஆமி(Army) நேவி (Navy ), எயார்போர்ஸ் (Air Force – விமானப்படை) ஊர்காவல்ப்படை, துணைப்படை, எல்லைப்படை, கூலிப்படை, உளவுப்படை என்ற சொற்களை மிகச் சாதரணமாகவே சொல்லத் தொடங்கினார்கள்.
விடுதலைப் போராட்ட அமைப்புக்களைப் குறிக்கும் இயக்கம், பெடியள் என்ற சொல் வட மாகாணத்தில் புழக்கத்திற்கு வந்தது. கிழக்குமாகாணத்தில் பார்ட்டி (Party) என்ற சொல் பாவனைக்கு வந்தது. Round up எனும் சொல் சுற்றி வளைப்பைக் குறிக்கின்றது. இது சாதரணமாகவே எல்லோர் வாயிலும் வந்தது.
Centry எனும் சொல் காவலுக்கு நின்று தகவல் அனுப்புகுதல் என்ற கருத்தைத் தருகின்றது. சென்றிக்கு நிற்கிறார்கள் என்பது கருத்து தெரியாமலே பலராலும் உச்சரிக்கப்படும் சொல்லாகியது.
விமானக்குண்டு வீச்சு நிகழ்ந்த காலங்களில் அதிலிருந்து தப்புவதற்காக பதுங்கு குழி அமைப்பது வழக்கத்திற்கு வந்தது. அப்போது பதுங்கு குழி என்ற சொல்லும் அதைக் குறிக்கும் பங்கர் (Bunkar ) என்ற ஆங்கிலச் சொல்லும் சாதாரண சொற்களாகின.
தாக்குதல் என்ற சொல்லைக் குறிக்க அற்ராக் (Attack) எனும் சொல்லும் மிகச் சாதாரண சொல்லாகியது.
1987 ஜுலை30ஆம் திகதி முதல் 1990 மார்ச் மாத இறுதிவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்தன. இந்தியப்படைகள் IPKF- Indian Peace Keeping Forces) என அழைக்கும் வழக்கம் இருந்தது. IPKF என்பதற்கான ஆங்கில நகைச்சுவை வியாக்கியானங்களும் இருந்தன.
யுத்தம் தந்த புதிய வரவாக ஊரடங்கு சட்டம் என்னும் சொல்லும் இருந்தது. இதனை Curfiew எனும் ஆங்கிலச் சொல் கொண்டு அழைப்பதும் பாமர மக்கள் படித்தோர் ஈறாக இருந்தது.
போர் நடைபெற்ற காலங்களில் இடையிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைக் குறிக்கும் Cease Fire எனும் சொல்லும் யாவர் வாயிலும் மிகச் சாதாரணமாகவே உச்சரிக்கப்பட்டது. இயக்கத்தினர் பேஸ் ( Base), இயக்கத்தினரை காம்ப் ( Camp), ஆமிக் காம்ப்(Army Camp ) என்ற சொற்களும் சாதாரண வழக்கிலுள்ள ஆங்கிலச் சொற்களாயின.
நடப்பீர் கதைப்பீர் என்றால் என்னவென புரியாது. வோக்கிரோக்கி (Walky Talky ) எனும் சொல் மக்கள் தெரியும் புதுச் சொல்லாகி விட்டது.
அதற்குரிய தூய தமிழ் தான் முற்சொன்ன நடப்பீர் கதைப்பீர்.
விடுதலைப்புலிகள் இயக்கம் யாழ்மாவட்டத்தின் நிலப்பரப்பின் பெரும் பகுதியைத் தமது ஆளுகைக்குள் வைத்திருந்த போது வெளிமாவட்ட போராளிகள் முகாமைக் குறிக்க புதிய சொல்லொன்று பாவனையில் இருந்தது. மட்டக்களப்பு – அம்பாறை Empasy (எம்பஸி) றிங்கோ எம்பஸி (Trinco Empasy), மன்னார் எம்பஸி போன்ற சொற்கள் பயன்பட்டன.
Empasy என்றால் தூதரகம் என்ற கருத்தை தருகின்றது. இங்கு அந்தந்த மாவட்ட மக்களுக்கான போக்குவரத்துப் பாஸ் வழங்கும் நிலையமாக இந்த முகாம்கள் தொழிற்பட்டதால் இவ்வாறு அழைக்கப்பட்டது. Pass (பாஸ்) பெறுதல் என்ற சொல்லும் சாதாரண சொல்லாகியது.
விமானங்கள் தொடர்பான சொற்களும் புழக்கத்திற்கு வந்தன. குறிப்பாக குண்டுவீச்சு விமானங்களான சியாமார் செட்டி, புக்காரா, கிபீர் போன்றவை யாவரும் உச்சரிக்கும் சொற்களாயின.
அவ்ரோ பிளேன், சீப்பிளேன்(Sea Plan) என்பவையும் யாவராலும் சாதாரணமாக உச்சரிக்கப்பட்டன. சீபிளேனை வண்டு, கோள்மூட்டி என்ற சொற்கள் கொண்டு அழைத்தனர்.
செல் அடித்தல் , ஆட்லறி தாக்குதல், மிசின் கண்சூடு, கிரனைட் தாக்குதல், பிஸ்ரல் தாக்குதல், 50 கலிபர் தாக்குதல், கிளைமோர் தாக்குதல், மிதிவெடி, கண்ணிவெடி போன்றவை யாவரும் சாதாரணமாகக்கூறும் சொற்களாயின. வேவு பார்த்தல் என்ற சொல்லை றெக்கி எடுக்கினம் என்ற சொல்கொண்டு அழைப்பது சாதாரண ஒன்றாகியது.
எதிராளி ஒருவரைச் சுட்டுக்கொல்வதை மண்டையில் போடுதல் என அழைக்கப்பட்டது. பிஸ்ரல்குழு என்பதும் சாதாரண சொல்லாகியது.
விடுதலைப் புலிகளால் தூய தமிழ்ச் சொற்கள் குறித்த விழிப்புணர்வு உருவாகிய காலம் ஒன்று வந்தது. அப்போது நடுவப்பணியகம், வட்ட அவை, கோட்டச் செயலகம், பொறுப்பாளர், வெதுப்பி (பாண்), இனிப்பு வெதுப்பி (பணிஸ்) குதப்பி ( கேக்). மாட்டு உருளை ( Beef Roll), ஆட்டு உருளை (Mutton Roll), வண்ணச்சோலை (புடவைக்கடை), நகையகம், குளிரோடை, குளிர்க்கிளி, வைப்பகம் (வங்கி). தெரு, சாலை போன்ற சொற்கள் ஏராளம் நடைமுறைக்கு வந்தன. அவற்றில் பல இன்னும் உயிர் வாழ்கின்றன.
பொது நிகழ்வுகளில் “நிகழ்வொழுங்கு, அகவணக்கம், சுடரேற்றல்” போன்ற சொற்கள் அறிமுகமாகின. “சாவு அறிவித்தல், துயர்பகிர்வு, இரங்கல் உரை, ஈகைச்சுடரேற்றல்” போன்ற சொற்கள் அமங்கல நிகழ்வுகளில் எம்மிடையே புது வரவாக நிகழ்ந்தன.
பயண இடங்களில் சோதனைச் சாவடி எனும் சொல் அறிமுகமாகியது. இராணுவ நோக்கில் முன்னரங்கநிலை. காப்பரண் போன்ற சொற்கள் புதிதாக வந்தன.
இந்தியப் படைகள் இருந்த காலத்தில் அவர்கள் போங்கள் என்பதற்கு “சலோ” எனும் சொல்லை பயன்படுத்தினார்கள். அச்சொல் இன்று வரையிலும் ஓரளவிற்கு புழக்கத்தில் இருக்கின்றது.
அதுபோல“மல்லி, மாத்தையா, கொய்தயன்ன, ஒக்கொம, நமமொகக்த” போன்ற சிங்களச் சொற்களும் சாதாரண சொற்களாக வழங்கத்திற்கு வந்தன. படையினருடனான தொடர்பாடலால் சிங்கள மொழிகற்க வேண்டிய தேவையும் வந்தது.
செஞ்சிலுவைச் சங்கம் , INGO நிறுவனங்கள் NGO, LNGO, NGO போன்ற சொற்களும் பொது மக்களுக்கு அறிமுகமாகின.
வடமாகாணத்தில் முன்பு ஊர்ப் பெயரைச் சொல்லித் தான் தாம் அங்கு போகின்றோம் என்பார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவர் தான் கரவெட்டிக்கு போகிறேன் என்பார். ஒரு சமயம் மீசாலை போகிறேன் என்பார்.
போர்க்காலத்தில் நிலப்பிரதேச ரீதியாக நிர்வாகம் வந்த பின்னர் இம் மரபிலும் மாற்றம் வந்தது. முன்பு கரவெட்டிக்கு போகிறேன் என்றவர் இப்போது வடமராட்சிக்கு போகிறேன் என்று பெரிய நிலப்பரப்பைக் குறித்துச் சொல்லுவது சாதாரண ஒரு முறையாகியது.
அதுபோலவே தென்மராட்சி, வலிகாமம், தீவகம். வன்னி என அழைக்கும் புதுமரபொன்று விருத்தியாகி நிலை பெற்று விட்டது.
புலம்பெயர் பயணங்கள் வந்த போது “ஏஜன்ஸி, அந்த றூட்டால் போவது. றூட்அடிபட்டுப் போயிற்று, உண்டியலில் காசு போட்டு விடுகின்றன” போன்ற சொற்களும் பலரது நாவில் தவழ்ந்தன.
இடம்பெயர்வு, அகதி, மீள்குடியேற்றம், நிவாரணம், குடும்பஅட்டை, பெயர்பதிதல், விடுவிக்கப்பட்ட பிரதேசம், உயர் பாதுகாப்பு வலயம் போன்ற சொற்களும் மிகச் சாதாரண சொற்களாகின.
புலம்பெயர் நாட்டிலுள்ள நமது இளைஞர்கள் மணப்பெண்ணை இங்கிருந்து வரவழைப்பதைப் பார்சல் ஒன்று வருகுது என்ற சிலேடைச் சொல்லால் அழைத்தனர். அதேபோல மணமகன் வெளிநாட்டிலிருக்க மணமகளை இங்கு வைத்து அலங்கரித்து திருமணம் செய்வது பொன்ற ஒரு விழாவை நடத்துதலை நட்டுப் பூட்டுதல் என்ற சொல் கொண்டழைத்தனர்.
1996 இல் யாழ்குடாநாட்டில் யாழ்ப்பாணம், வலிகாமப் பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியேறிய போது மண் அணைகள் போடப்பட்டு நிலப்பரப்புக்கள் இரண்டாக பிரிகன்கப்பட்டுச் சிலகாலம் இருந்தது. அப்போது மண் அணைகளை (BUND) பண்ட் என மக்கள் அழைக்கும் மரபொன்று உருவாகியது.
பட்டியல் இட்டவற்றில் அகப்படாது தப்பிய சொற்கள் பலவும் எம்முள் புழக்கத்தில் இருக்கலாம். மிக நீண்ட போர்க்கால வாழ்க்கை எமது மொழியில் மட்டுமல்ல, பண்பாடுகள் பலவற்றிலும் புதுவரவுகளை ஏற்படுத்தி விட்டது.
இவையும் எமது வாழ்வியல் ஆவணங்களாகப் பதிவிற்குட்படுத்த வேண்டியவையே, இத்துறை தொடர்பாகவும் பொருத்தமான ஆய்வுகளையும் ஆவணங்கள் உருவாக்குதலையும் செய்ய வேண்டும் என்பது என் கோரிக்கையாகும்.
ஆக்கம் – வேதநாயகம் தபேந்திரன்
நன்றி. தினக்குரல் வார வெளியீடு 2012.05.27
யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 1 இல் இந்த ஆக்கம் இடம் பெற்றுள்ளது.27.07.2014 இல் இந்த நூல் வெளியிடப்பட்டது.