“பெண் என்ற காரணத்துக்காகவோ, விதவை என்ற காரணத்துக்காகவோ என்னை அடக்கி, ஒடுக்க முடியாது. என் விருப்பப்படி நடந்துகொள்ள எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. எனக்காகப் பிறர் முடிவெடுப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது’’ என்று வசை பாடியவர்களை வாயடைக்கச் செய்த வீரப் பெண்மணி இவர்!மணலூர் மணியம்மாள் என்கிற வாலாம்பாளுக்கு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குஞ்சிதபாதம், தன்னைவிட 25 வயது மூத்தவரை தனது 10ம் வயதில் இரண்டாவதாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. செல்வந்தரான குஞ்சிதபாதம், மணியம்மாளுக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்தார். ஓர் ஆங்கிலப் பெண்மணி மூலம் ஆங்கிலமும் கற்றுத்தரப்பட்டது.
17 ஆண்டுகளிலேயே மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடித்து, வெள்ளை உடை அணிவிக்கும் முறை வழக்கத்தில் இருந்த காலம் அது. மணியம்மாளும் இத்தகு கொடுமைக்கு ஆளானார். பேராசை கொண்டவர்களான கணவனின் உறவினர்கள் முன்னால் சீமானான கணவனின் சொத்தில் சல்லிக்காசும் வேண்டாமென தூக்கி எரிந்துவிட்டு வந்தாள். கற்ற கல்வியும் தீவிரமான சிந்தனையும் அவரை மற்ற பெண்கள் போல முடங்கிக் கிடக்க விடவில்லை. கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு, சமூகம் இழைக்கும் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தார்.
இவற்றை எல்லாம் வெறுத்து ஒதுக்க முடிவு செய்தார். தனக்கே உரித்தான ஈர மனமும், எதையும் சீர்தூக்கி ஆராயும் கூர்மையான அறிவும் மெல்ல மெல்ல விதவை எனும் கொடுங்காட்டிலிருந்து அவரை வெளியே கூட்டிவந்தன. காந்தியின் தேசிய இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை காந்தி தஞ்சைப் பகுதிக்கு வந்த போது அவரைச் சந்தித்து காங்கிரசில் இணைந்தார். மாகாணக் கமிட்டி உறுப்பினர் பதவிவரை உயர்ந்த அவர் இதர காங்கிரஸ் காரர்களைப் போலல்லாமல் பண்ணை அடிமை முறையை எதிர்த்து தனது சொந்தப் பகுதியில் உறுதி வாய்ந்த போராட்டம் நடத்தினார்.
ஜஸ்டீஸ் கட்சிக்காரர்களைப் போலவே காங்கிரஸ்காரர்களும் பதவிமோகம் கொண்டவர்கள் என்றும் பண்ணையார்களுக்கே காங்கிரசில் பெரு மதிப்பு என்றும் அவர் தனது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டார். மெல்ல மெல்ல ஜனசக்தி இதழ் மூலம் பொதுவுடைமை கொள்கைகளின்பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை; ஒரு முழுநேர கம்யூனிஸ்ட் ஆனார். சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற முன்னோடி போராளிகளின் தொடர்பின் மூலம் தனது அரசியல் அறிவை வளர்த்துக் கொண்ட அவர் பெரும் அமைப்பாளராகவும், செல்வாக்கு மிகுந்த தலைவராகவும் உயர்ந்தார்.
அவரின் பண்ணை அடிமைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணிதிரட்டலாலும் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கம் அவரை கொல்ல முயன்று கொடும் தாக்குதல் நடத்தியது அதிலிருந்து அவர் உயிர் தப்பினார்.பெண்மையின் உடை, கூந்தல் உள்ளிட்ட பல்வேறு குறியீட்டு அம்சங்களை அடிமைத்தனத்தின் அடையாளம் எனக் கருதிய அவர் அவற்றைத் துறந்து தனது கூந்தலை வெட்டிக் கொண்டார்.
கிருதா வைத்துக்கொண்டு ஆண்களைப் போலே வேட்டி சட்டை அணிந்து கொண்டார். மேலும் தற்பாதுகாப்புக்கென சிலம்பமும் கற்றுத் தேர்ந்தார். கையில் சிலம்பத்தோடும் வேட்டி சட்டையோடும் தனி ஒருவராகவே தஞ்சைப் பகுதியெங்கும் சென்று விவசாய இயக்கங்களைக் கட்டி வளர்த்தார்.எண்ணிலடங்கா விவசாய போராட்டங்களில் பங்கெடுத்த அந்த இரும்புப் பெண்மணி தொழிலாளர் மத்தியில் வேலை செய்யவும் தயங்கவில்லை.
கொடும் சிறை வாசத்துக்கும் அஞ்சவில்லை. அதேபோல திராவிட மற்றம் நீதிக்கட்சிகளின் ஒருசார்புத் தன்மையையும் தோலுறிக்கத் தயங்கவில்லை. அந்த காலத்தில் கம்யூனிஸ்டு கட்சியே மக்களிடத்தில் மணியம்மாள் கட்சி என்று அழைக்கும் அளவுக்கு பிரபலம் அடைந்திருந்தார்.தன் வாழ்நாள் பூராவும் மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மாபெரும் பெண்மணி கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பயன்பாட்டு வாதத்தாலும், ஆணாதிக்க சிந்தையாலும் , அதிகார போதையாலும் கடைசீ காலத்தில் கட்சியால் சரிவர நடத்தவில்லை என எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணண் தனது மணியம்மையின் வரலாறு தொடர்பான நாவலான “பாதையில் பதிந்த அடிகளில் ” குறிப்பிடும் அம்சம் நிச்சயம் ஆராயத்தக்கது.
வழக்கமான சுதந்திரப்போராட்ட வீராங்கணை போலல்லாமல் சாதித் தீண்டாமை, பெண்ணடிமை, தேச விடுதலை, வர்க்கப் போராட்டமென ஓர் தலைமைக்கான சகல அம்சங்களோடு போராடியதால் தான் மணியம்மை முக்கியத்துவமானவராகிறார். 1953 ஆம் ஆண்டு மான் முட்டி அன்னை மரிக்கும் வரை உறுதி மிகுந்த கம்யூனிஸ்ட்டாவே இருந்தார்.மக்களுக்காகவே. வாழ்ந்து மடிந்த பலரின் வரலாறுகள் இன்று மறக்கடிக்கப்பட்டு விட்டன. அவற்றில் ஒன்றுதான் மணலூர் மணியம்மையின் வாழ்வும்.
(Prasanna Ramaswamy)