இருந்த போதிலும், ஆட்கடத்தல் என்பது தானே ஒருவர் முன்வந்து சட்டவிரோதமாக தமது நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு செல்வதாகும்.சட்டவிரோதமாகச் செய்யப்படும் போதைப் பொருள் வர்த்தகத்துக்கு அடுத்ததாக உலகில் இரண்டாவது மிகப்பெரிய குற்றத் தொழிலாக இந்த ஆட்கடத்தல் கருதப்படுகின்றது.
மனித வியாபாரம் ஒருவர் ஏமாற்றப்படுவதையும் ஆட்கடத்தல் என்பது ஒருவரின் விருப்பத்துடனும் முன்னெடுக்கபடுகின்றது என்றாலும் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புட்டதாகவே காணப்படுகின்றது.
இலங்கையின் இன்றைய நெருக்கடியான சூழலில், பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையானது, இது மனித வியாபாரத்துக்கும் ஆட்கடத்தலுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
மனித வியாபாரம் எனும் சுரண்டலானது, வலுக்கட்டாயமான உழைப்பு, பாலியல் மோசடி, உடல் அவயவங்களை அகற்றுதல், வீட்டு வேலைகளில் அடிமைத்தனம் என பல்வேறு வடிவங்களில் நிகழ்கின்றன.
இதில் சிறுவர்கள் விசேடமாக மனித வியாபாரத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதாவது, இந்த மனித வியாபாரத்தை முன்னெடுக்கும் நபர்கள், சிறுவர்களின் பெற்றோர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி, சிறுவர்களை அழைத்து வந்து,பிச்சை எடுக்க வைத்தல், பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட வைத்தல் என்பவற்றை முன்னெடுக்கின்றனர்.
அதேபோல், மனித வியாபாரத்தில் குறி வைக்கப்படும் மற்றொரு பிரிவினர் தான் பெண்களாகும். அதாவது தொழில் வாய்ப்புகள், திருமண கனவு, கல்வி வாய்ப்புகள் போன்றவை தொடர்பில் போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மோசடிக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக விபசாரம், அடிமைத்தனம் ஆகியவற்றுக்கு பெண்கள் உள்ளாகின்றனர்.
அதேபோல் உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் வீட்டு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புக்கு உள்ளாகின்றனர். வழங்கப்பட்ட உத்தரவாதத்தை மீறும் வகையில் குறைந்த சம்பளத்தை வழங்கி அதிக வேலைகளை வாங்குதல், வீடுகளில் அடைத்து வைத்தல் என்பவையும் இதில் உள்ளடங்குகின்றன. ஏனெனில் மனித வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள், தொழில் திறனற்ற புலம்பெயர் பணியாளர்களை முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதால், அனுப்பபடுவோர் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
அதேபோல் பெண்கள், சிறுவர்கள் மாத்திரமின்றி ஆண்களும் இந்த மனித வியாபாரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.குறிப்பாக வர்த்தக நிலையங்கள், கட்டட நிர்மாண வேலைகள், விவசாய பண்ணைகளுக்கு அழைத்து வரும் ஆண்களுக்கு முறையற்ற கொடுப்பனவு, ஒழுங்கற்ற தங்குமிட வசதி, குறைவான சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மேலும், பாசாங்கு வார்த்தைகளை கூறி உடல் அவயங்களை அகற்றுவது கூட மனித வியாபாரத்தின் ஓர் அங்கமாகும்.
இது இலங்கையின் 2006ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தண்டனைச் சட்ட திருத்தத்தின் கீழ் 2 வருடத்துக்கு குறையாத 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் விதிக்கமுடியும் என்ற போதிலும், இது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வியாபாரமாகவும் அதிக பணத்தை பெற்றுத்தரக் கூடியதாகவும் காணப்படுகின்றது.
ஒருவரின் பொருளாதார நிலை, குடும்ப பிரச்சினைகளைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஏமாற்றி தமக்குத் தேவையானதை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு நிலையையே மனித விற்பனை என்று கூறுவதில் தவறில்லை
இது நவீன அடிமைத்தனத்தின் வடிவம் என்பதுடன், வருடாந்தம் 1.2 மில்லியன் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, 40.3 சதவீதமானோர் உலகில் அடிமைத் தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் கால்வாசியினர் புலம்பெயர்ந்தவர்கள் என 2017ஆம் ஆண்டு நவீன அடிமைத்துவம் பற்றிய உலக மதிப்பீட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத பெண்கள் பாதிக்கப்படும் அதேவேளை 70 சதவீதமானவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையானது மனித வியாபாரத்துக்கு உட்படும் முக்கிய மற்றும் ஆரம்ப இடமாகவும் மனித வியாபாரத்துக்காக நியமிக்கப்பட்ட இடமாகவும் இருந்து வருகின்றது.
குறிப்பாக இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் வீட்டு பணியாளர்களாக அல்லது ஆடைத்தொழிற்சாலை, கட்டுமானப் பணிகளுக்கு செல்லும் பலர் பல்வேறு சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இது வெளிநாடுகளில் மாத்திமல்ல இந்த மனித வியாபாரமானது உள்நாட்டிலும் நடைபெற்றாலும் இதனை மனித வியாபாரமாக நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது இலங்கையின் மலையகம் அல்லது கிராம புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கு பல்வேறு தொழில்களுக்காக அழைத்து வரப்படும் பெண்களும் யுவதிகளும் பாலியல் தொழில் இடம்பெறும் இடங்களில் விற்கப்படுவதும் மனித வியாபாரம் தான்.
அதுமாத்திமரல்ல சிறுவர்கள், ஆண்கள். இளைஞர்களும் பல ஆசை வார்த்தைகளை காட்டி அல்லது விளம்பரங்களில் கவர்ச்சியை ஏற்படுத்தி தொழிலுக்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் அங்கே உண்ண சரியான உணவு, உறங்குவதற்கு இடமின்றி அல்லலுறுவதும் ஒரு வகையான அடிமைத்தனமான மனித வியாபாரமேயாகும்.
இதேவேளை, மனித வியாபாரத்தை தடுப்பதற்கான விசேட சட்டங்கள் எதுவும் ஆட்கடத்தல் தொடர்பான குற்றத்துக்காக இல்லையென்றாலும் 1948ஆம் ஆண்டு 20ஆம் இலக்க குடிவரவு- குடியகல்வு சட்டமானது, ஆட்கடத்தல் என ஊகிக்கும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் சட்டவிதிகளைக் கொண்டுள்ளது.
இலங்கையில் இந்த மனித வியாபாரத்துக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டு, ‘தேசிய மனித வியாபார தடுப்பு படையணி’ உருவாக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்கிடையில் உறுதியான ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட்டது. இப்படையணியானது மனித வியாபாரத்தில் பாதிப்புற்றவர்களை இனம் கண்டு, அவர்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
அதேபோல் புலம்பெயர்வுக்கான சர்வதேச IOM அமைப்பானது, ஒரு தசாப்தத்துக்கும் மேலாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, மனித வியாபாரம் மற்றும் விசேடமாக ஆட் கடத்தல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களை தேடி அறிந்து அவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், இந்த அமைப்பின் தகவலுக்கமைய 2020ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த 4,470 பேர் தமது இலக்கு நாட்டை சென்றடையும் முன்னர் மரணமடைந்துள்ளதுடன் கடந்தாண்டு 4,236 பேர் மரணமடைந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்தச் சட்டவிரோத ஆட்கடத்தலை தவிர்ப்பதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமானது அனுமதிப்பத்திரம் இல்லாத முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு ஆட்சேர்ப்பதை தடைசெய்துள்ளதுடன், இது தொடர்பான முகவர் நிலையங்களை உறுதிப்படுத்திக்கொள்ள www.slbfe.lk என்ற இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தவிரவும் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாகவும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, எமது கண்முன்னே நிகழும் அல்லது வேறு ஒருவர் வாயிலாக அறிந்து கொள்ளப்படும் மனித வியாபாரம், ஆட்கடத்தல் என்பவற்றிலிருந்து சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாக்க சிறுவர்களாயின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (1929), அருகிலிருக்கும் பொலிஸ் நிலையம், ஆட்கடத்தல் தொடர்பான விடயமெனின் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (1989) மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (0766 588 688) என்பவற்றுடன் தொடர்புகொண்டு மனித வியாபாரம், ஆட்கடத்தலுக்கு எதிராக செயற்படுவோம் என புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.