மம்மூட்டி

மூன்றுமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் – நான்கு முறை மாநில விருதுகள் – எட்டுமுறை பிலிம்பேர் விருதுகள் – பெரிதினும் பெரிதாக இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது,
இந்த நிறைகுடம் தளும்புவதேயில்லை.
சுயதம்பட்டம் முழங்குவதேயில்லை.
‘மதிலுகள்’ படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனிடம். “எங்கேயப்பா பிடித்தாய் இந்த நடிகனை!” என்று சத்யஜித்ரே வியந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
மலையாளம், தமிழ், இந்தி, தெலுகு என நடித்திருக்கும் இவருக்கு, ‘மலையாள நடிகர்’ என்று சொன்னால் கோபம் வருகிறது. கலைஞனுக்கு மொழி, வட்டாரம் என்று எல்லைகள் கிடையாது என்கிறவர்.
“இந்திய சினிமா என்றாலே பாலிவுட்தான் என்று நினைக்காதீர்கள். தென்னிந்திய சினிமாவை ஓரங்கட்டமுடியாது!” என்று மும்பை படவிழா ஒன்றில் பேசிய மம்மூட்டி தன் கோபத்தைக் காட்டத் தயங்குவதே இல்லை.
‘சிபிஐ டைரிக்குறிப்பு’ திரைத் தொடர்கள், நியூ டெல்லி, வார்த்தா போன்ற கமர்ஷியல் சினிமாகள் அவரை வசூலின் உச்சத்தில் நிறுத்தினாலும்,
அடூரின் ‘மதிலுகள்’, ‘விதேயன்’,
எம்டி.வாசுதேவன் நாயரின் திரைக்கதையில் ஹரிஹரனின் ‘ஒரு வடக்கன் வீர கதா’,
பரதனின் ‘அமரம்’,
லோகிததாஸின் திரைக்கதையில், சிபி மலயிலின் ‘தனி ஆவர்த்தனம்’ ( இதன் க்ளைமாக்ஸைத்தான் நந்தாவில் பாலா பயன்படுத்தினார்! ),
பத்மராஜனின் ‘கூடெவிடே’,
பாலு மகேந்திராவின் ‘யாத்ரா’, டிவி.சந்திரனின், ‘பொந்தன்மாடா’,
கே.விஸ்வநாத்தின் ‘ஸ்வாதி கிரணம்’. ஐவி.சசியின் ‘ம்ருகயா’, ‘மஹாயானம் ‘போன்ற பல திரைப்படங்கள் மம்மூட்டியின் மகுடத்தில் ஒளிரும் ரத்தினங்கள்.
விடுபட்ட படங்களின் பட்டியல் நெடியது, ஆமாம்.
என்னைப் பொருத்தமட்டில். ‘அமரம்’ ஒன்று போதும்.
நின்று பேசும், அவரது வாழ்நாள் சாதனையை!
அதில் – உயிராய் வளர்த்த மகள் காதலனுடன் போய்விட்டாள், நேசித்த காதலி வேறொருத்தனுக்கு வாழ்க்கைப்பட்டுப் போகிறாள் என்று கடற்கரை மணலைக் கூட்டி முகம் புதைத்து அழும் பாமர மீனவன் அச்சூட்டியை என்னால் மறக்கவே ஏலாது.
‘பாபா சாகேப் அம்பேத்கர்’ அவரை உலகெங்கும் கொண்டு சென்ற படம். ஆனால், ஏது காரணம் பற்றியோ, அந்தத் திரைப்படம் வெகுமக்களின் கவனத்துக்குப் பெருவாரியாகக் கொண்டுசெல்லப்படவில்லை.
இவர் ஒரு வழக்குரைஞர் என்பது பலருக்கும் தெரியாத செய்தியாக இருக்கலாம்.
சமூகப்பணிகளிலும் பெரும் ஆர்வம் காட்டும் மம்மூட்டி, அவை குறித்து வாய் திறப்பதில்லை.
மலையாள முஸ்லிம்கள் சகோதரனை ‘இக்கா’ என்று அழைப்பார்களாம். கேரளத்தில் மம்மூட்டியை ‘மம்மூக்கா’ என்றுதான் அன்புகொண்டோரும் ரசிகர்களும் விளிக்கிறார்கள் .
இன்று எழுபது வயதைத் தொடும் மம்மூக்காவுக்கு –
முகநூல் நண்பர்களோடிணைந்து –
ஒரு தமிழ் சினிமாக்காரனின், ஒரு ரசிகனின்
பிறந்தநாள் வாழ்த்து.