சில தமிழ்ப் பத்திரிகைகள், அச்செய்தியை முன்பக்கத் தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தன. ஆனால், சிங்களம், ஆங்கிலம் மொழி பத்திரிகைகள், முன்பக்கச் செய்தியாகப் பிரசுரித்தாலும், பிரதான செய்தியாகப் பிரசுரிக்கவில்லை.
வழமையாக இலங்கையில், பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்த போதோ அல்லது, இனக்கலவரங்கள், வேலைநிறுத்தங்கள் போன்ற தொழிலாளர் போராட்டங்களின் போதோதான் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவசரகாலச் சட்டத்தோடு பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்படலாம் என்ற அடிப்படையிலும், தமது அரசியல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, அச்சட்டத்தை அரசாங்கம் பாவிக்கும் என்பதாலும், எதிர்க்கட்சிகள் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வந்துள்ளன.
ஆனால், 30 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டத்துக்கு, அவ்வாறான கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. அவசரகாலச் சட்டத்தை எப்போதும் கடுமையாக எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணி, இம்முறை அதை நேரடியாக எதிர்த்து, எதையும் செய்யவில்லை.
ஜனநாயகம், நல்லாட்சி ஆகிய விடயங்களின் போது, எப்போதும் குரல் எழுப்பும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமும் அவசரகால சட்டம் குறுகிய காலத்துக்கே அமலில் இருக்க வேண்டும் என்று, ஓர் அறிக்கை மூலம் குறிப்பிட்டு, காரம் குறைந்த எதிர்ப்பையே தெரிவித்திருந்தது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அரசாங்கம், பொதுமக்களின் உரிமைகளைப் பறிக்கும் உள்நோக்கத்துடனேயே அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளதாக, அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில், தடைகள் ஏற்பட்டு இருந்தால், அதற்கு அரசாங்கத்தின் நிர்வாகத் திறனின்மையும் முகாமைத்துவ முறைகேடுகளுமே காரணமாகும். உலக சுகாதார ஸ்தாபனம், கொவிட்- 19 நோயை உலகளாவிய தொற்று என்று பிரகடனப்படுத்தி, 18 மாதங்கள் கடந்திருந்தும் நாட்டில் சுகாதார அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பே, இந்த அவசரகாலச் சட்டத்தை முதன் முதலாக எதிர்த்தது. அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்துள்ளது என்ற செய்தியோடு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், அது தொடர்பாகத் தெரிவித்த கருத்தும், தமிழ்ப் பத்திரிகைளில் வெளியாகி இருந்தது. பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காத நிலைமையில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அவசரகாலச் சட்டத்தின் மூலம், சட்டமாக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளதாகவும் அதன் மூலம், ஜனாதிபதி ஆட்சி நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் கூறும் சுமந்திரன் எம்.பி, கொவிட்-19 நோயின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக, சுகாதார அவசரகால நிலைமையைப் பிறப்பிக்கும் வகையில், தனி நபர் பிரேரணையாக ஒரு சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தில் தாம் சமர்ப்பித்ததாகவும் அரசாங்கம், அதை ஏற்றுக் கொண்ட போதிலும், நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் அண்மைக் காலமாக மிக வேகமாக அரிசி, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. வர்த்தகர்கள், பொருட்களைப் பதுக்கி, விலையை உயர்த்துவதாகவும் அரசாங்கம் அதற்குத் துணை போவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்தப் பின்னணியிலேயே, அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்துக்காகவென அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி பிறப்பித்தார்.
அவசரகாலச் சட்டத்தை பூரணப்படுத்துவதற்காக, பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இரண்டு வர்த்தமானி அறிவித்தல்களையும் 1979 ஆண்டு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஒரு பிரகடனத்தையும் ஜனாதிபதி வெளியிட்டு இருக்கிறார். ‘பாவனையாளர்களுக்கும் மக்களின் நலனுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் சந்தை முறைகேடுகளை ஏற்படுத்தும் வகையில், அரிசி, சீனி உள்ளிட்ட உணவுத் தொகைகளைப் பதுக்கியும் விநியோகத்தை தடுத்தும், மிகக் கூடுதலான விலையை அறவிடுவதைத்த தடுப்பதே’ முதலாவது வர்த்தமானியின் நோக்கம் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் எவ்வாறு செயற்படும் என்பது, அதில் விவரிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள மற்றைய வர்த்தமானி மூலம், அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்துக்காக மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹல்ல அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மற்றைய பிரகடனத்தின் மூலம், எந்தெந்தச் சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகின்றன என்ற விவரம் வழங்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், எரிபொருள் விநியோகம், ரயில், அரச பஸ் சேவைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர்கள், சமூர்த்தி அலுவலர்கள், விவசாய அபிவிருத்தி அதிகாரிகள், அரச வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், சதோச, கூட்டுறவுச் சங்கங்கள், நெல் சந்தைபடுத்தும் சபை, மாகாண சபைகள், இலங்கை சீனிக் கம்பனி ஆகியன அச் சேவைகளாகும். அதாவது, அமைச்சு அலுவலகங்கள் தவிர்ந்த அரச நிர்வாகத்துக்கான சகல நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளாகின்றன.
சுருக்கமாகக் கூறின், மொத்த அரச இயந்திரமே அத்தியாவசிய சேவைகளாகும். வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட சகல தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்துக்கு தடையாக அமையக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடும் எவரையும், உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய இதன் மூலம் அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் சீரான விநியோகத்துக்குத் தடையாகும் வகையில், பொருட்களைப் பதுக்கும் களஞ்சியசாலைகளை அரசுடமையாக்கவும் கைப்பற்றப்படும் களஞ்சியசாலைகள், வாகனங்களில் இருந்த பொருட்களைக் கையகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனால் பொருட்களைப் பதுக்கும் மேசடிக்கார வர்த்தகர்களுக்கு எந்தவித நட்டமும் ஏற்படுவதில்லை. ஏனெனில், அந்தப் பொருட்களை அரசாங்கம் கைப்பற்றினாலும் பறிமுதல் செய்யாது. மாறாக, அப்பொருட்களுக்கு சுங்கத் திணைக்களம் விதித்த விலையைக் கருத்திற் கொண்டு, அப் பொருட்களைக் கையகப்படுத்தி, நியாயமான விலைக்கு மக்களிடையே விநியோகிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு விலையைக் கருத்திற்கொண்டு, ஒரு பொருளை அரசு பறிமுதல் செய்வதாக இருந்தால், அது விலை கொடுத்து வாங்கப்படும் என்பதே அர்த்தமாகும்.
அதன் பிரகாரமே, அண்மையில் ஊடகங்கள் அம்பலப்படுத்திய கம்பஹா மாவட்டத்தில் அமைந்திருந்த அனுமதியற்ற களஞ்சியசாலைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை, அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்தன. அதுவும், இந்தப் பொருட்களை வர்த்தகர்கள் பதுக்குவதற்கு முன்னர், அவற்றை விற்க வேண்டும் என, 2020 நவம்பர் மாதம் அரசாங்கம் விதித்த ஒரு கிலோகிராம் 85 ரூபாய் என்ற விலைக்கன்றி, ஒரு கிலோகிராம் 115 ரூபாய்க்கே, அரச நிறுவனங்கள் அந்தச் சீனியைக் கொள்வனவு செய்தன. அதாவது, பதுக்கலுக்குத் தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, கிலோகிராமுவுக்கு 30 ரூபாய் மேலதிகமாகக் கொடுத்தே அரச நிறுவனங்கள் அந்த சீனியை கொள்வனவு செய்துள்ளன.
உண்மையிலேயே, இந்த அவசரகாலச் சட்டம் இல்லாவிட்டாலும், பதுக்கப்பட்ட பொருட்களை கண்டுபிடிக்கவும் அப்பொருட்களை அரசுடமையாக்கவும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு அதிகாரம் இருக்கிறது.
இந்த அவசரகாலச் சட்டத்தால், சில பாதிப்புகளில் இருந்து வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சாதாரண சட்டத்தின் கீழ், பதுக்கப்பட்ட பொருட்களை அரசாங்கம் நட்டஈடோ விலையோ கொடுக்காமல், பறிமுதல் செய்யலாம். ஆனால், இந்த அவசரகாலச் சட்டம், அவற்றை விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டும் என்கிறது.
2020 நவம்பர் மாதம் அரசாங்கம், ஒரு கிலோகிராம் சீனிக்கு 85 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையை விதித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. ஆனால், வர்த்தகர்கள் அதைத் தூசுக்கும் மதிக்காமல், சீனியை ஒரு கிலோ 120 ரூபாய், 130 ரூபாய் என விற்றனர். அப்போதே, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தலையிட்டு, இதைத் தடுத்து இருக்கலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. எதையும் செய்ய முடியாது என நுகர்வோர் பாதுகாப்புக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன கூறினார்.
பின்னர், சீனி விலை கிலோகிராமுக்கு 220 ரூபாய்வரை ஏறி, சீனி பதுக்கப்பட்ட களஞ்சியசாலைகளைத் தேடி, ஊடகங்கள் அம்பலப்படுத்தவே அரசாங்கம் இந்த அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தது.
இப்போது, கைப்பற்றப்பட்ட சீனி அரசாங்கத்தின் சதோச, கூட்டுறவு கடைகளில் கிலோகிராம் 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தாம் சீனி விலையை 220 ரூபாயிலிருந்து 125 ரூபாய்க்குக் குறைத்துள்ளளோம் என இப்போது அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால், இது 85 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று அரசாங்கமே விலை நிர்ணயித்த சீனியாகும்.