மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்

குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது.

வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று, 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்துக்குத் திரும்ப முடியாத நிலையில், பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு பகுதிகளிலும், பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், உயர்பாதுகாப்பு வலயங்கள், நிலச் சுவீகரிப்புகள், வெடிபொருள் அச்சுறுத்தல்கள் என்பன, இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குறியேறாமைக்கான காரணங்களாக அமைகின்றன.

வடபகுதியில், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாது, பலகஸ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த காலம் வரையும், அதன்பின்னர் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில், யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புகளும் பரஸ்பரம் மோதிக்கொண்ட, கிளாலி முதல் முகமாலை, நாகர்கோவில் வரையான முன்னரங்க நிலை காணப்பட்ட பகுதிகளில், தினமும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் பலர் அங்கவீனர்களாகியும் இருந்தனர். இந்தப்பகுதிகள், போரிட்டோரின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் களமாகவும் காணப்பட்டன.

எறிகணைகள், துப்பாக்கி ரவைகள் என்பவற்றால் சல்லடை போடப்பட்டு, எண்ணற்ற உயிர்கள் பறிக்கப்பட்ட ஓர் இடமான முகமாலையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாகவும் சின்னாபின்னமாகவும் வெடிபொருட்கள் விதைக்கப்பட்டன.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளவும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வகையில், முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கண்ணிவெடிகளை அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால், 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை, பெரும் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து இடம் பெயர்ந்து, இதுவரை மீள் குடியேறமுடியாமல் வாழ்ந்து வருவோரின் ஒருமித்த குரலாக ஒலிப்பது, “எங்களது சொந்த வீடு இல்லாத துன்பத்தை, கடந்த 25 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம். 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், முகமாலை, இத்தாவில், இந்திராபுரம் ஊர்களில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, தற்போது யாழ்ப்பாணத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றோம்.

நாங்கள் நிம்மதியாக வாழவில்லை அடிக்கடி வேறுவேறு வீடுகளுக்கு மாறிக்கொண்டுதான் இருக்கின்றோம். இப்போது, இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, நாலாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கின்றோம். 12 ஆண்டுகளாகியும் சொந்த காணிக்குள் கால்பதிக்க முடியாது இருக்கின்றோம். எங்களுடைய காணியை பார்க்க வேண்டும்; எங்களது வீட்டில் குடியிருக்க வேண்டும்” எனத் தமது அவாக்களையும் அபிலாசைகளையும் உணர்பூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.

அவர்கள், மேலும் விவரிக்கையில், “நாங்கள், உறவினர்களின் காணியில் வசித்து வந்த காலப்பகுதியில், பல துன்பங்களை அனுபவித்து விட்டோம். ‘இரவானால் கிணற்றில் தண்ணீர் அள்ளாதீர்கள்’ என்பார்கள். எங்களது பாவனைக்கு செடிகொடி வைக்கேலாது; ஆடு, மாடு வளர்க்க முடியாது! இப்படி எத்தனையோ கஸ்ரங்களை அனுபவித்து விட்டோம். எனவே, எங்களது காணிகளில் வெடிபொருட்களை அகற்றி எங்கள் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்” என இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களின் ஆதங்கங்கள் தொனித்தன.

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலையின் கிழக்கு பகுதி, இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிக ஆபத்தான பகுதியாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், மீள்குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டு, மக்கள் மீள்குடியேறிய பகுதி தவிர, ஏனைய பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தடைசெய்யப்பட்ட பகுதிகள் மிக ஆபத்தான பகுதிகளாக இருப்பதால், அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்வதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் உரியஅதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்ற போதிலும், அந்த அறிவுறுத்தல்களை மீறி, பலர் உட்சென்று விபத்துகளில் சிக்கி, உயிரிழப்புகளை எதிர் கொண்டதுடன் அங்கவீனர்களாகவும் ஆகியுள்ளனர்.

2010ஆம் ஆண்டு, யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், ‘இலங்கையின், வடக்கில் 640 கிராமங்களில், 105 மில்லியன் வரையான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும், இன்னும் சில பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக, வடபகுதியில் தற்போது மிக ஆபத்தான பகுதியாக, கிளாலி தொடக்கம் முகமாலை, நாகர்கோவில் வரையான பகுதிகள் காணப்படுகின்றன. இதில், முகமாலைப் பகுதியே மிக ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த மக்கள் தமது சொந்த ஊரில் மீள்குடியேறுவதற்குக் காணப்படும் சகல தடைகளும் நீக்கப்பட்டு, குறிப்பாக, வெடிபொருட்கள் அகற்றப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக வாழ வழிசமைக்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானம் படைத்த எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.