எத்தனை சோதனைகள்? எத்னை துன்பங்கள்? அத்தனையும் கண்டு முள்ளிவாய்கால் வரை சென்று முள்வேலி முகாமில் முடங்கி இன்றும் சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழ முடியாது வாழ்ந்து வரும் எம் உறவுகள் இழக்காத ஒன்று நம்பிக்கை மட்டுமே. துன்பத்தை தொடக்கி வைத்தவர் அகிலம் எல்லாம் தஞ்சம் புகுந்து தம் சொந்த மண்ணில் காணாத சுகம் எல்லாம் சுகித்து முடவன் வாய் தேன் என ருசித்து மகிழ்ச்சியின் உச்ச நிலை அடைந்து சொர்க்க வாசலை தாம் வாழும் நாடுகளில் கண்டவரின் சொந்த நாட்டில் சோகம் சுமந்து வாழும் எம்மவர் துயர் தீர்க்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.
விடுதலை தீயை விதைத்தவர் தம் பிள்ளைகளை படிப்பித்து பாதுகாப்பாய் வெளிநாடு அனுப்பிவிட்டு ஊரவன் பிள்ளயை போர்க்களம் அனுப்பி அதில் கூட சாதியம் பேசி கூறுபட்டு கும்மி அடித்து இளையவர் மோதலை அனுமதித்து அழிவுகள் எதிரிக்கல்ல எம்மவருக்கே என்ற புரிதல் இன்றி அடிப்பவன் புலி அவன் தாழ் பணி என முடிவெடுத்து அவர்களை துதிபாடி அவர் தம் தலைவனை சூரியதேவன் என புகழ்பாடி அவர் படை மாவிலாறு முதல் முள்ளிவாய்கால் வரை பின் வாங்கி ஓடும் வரை தலைவர் உள்ளே வரவிட்டு அடிப்பார் என கூறியவர் ஏமாந்த ஆண்டாக இல்லாமல் எம்வருக்கு விடியல் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.
2016ல் தீர்வு வரும் என சம்மந்தர் கூறியது சாத்திரம் என கொள்ளாது சாத்தியம் ஆக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றுபடும் ஆண்டாக அமைய நாம் நம்பும் தெய்வங்களை பிரார்த்திப்போம். நாத்திகவாதிகள் கூட தாம் நம்பும் கொள்கை மீது நம்பிக்கை வைப்பது போல் எம் இனத்துக்கு தீர்வு தரும் ஆண்டாக புதிய ஆண்டு இருக்க வேண்டும் என எண்ண வேண்டும். அறுபது ஆண்டு பிரச்சனை பன்னிரு மாதத்தில் தீரும் என்பது பகல் கனவு என்போர் கூட தீர்வுக்கான நல் ஆரம்பமாய் புதிய ஆண்டு அமைய வேண்டும் என எண்ண வேண்டும். நல் எண்ணங்கள் நல்ல பலனை தரும். எமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் எழுந்தாலும் அகதியாய் பஞ்சபராரிகளாய் அல்லலுறும் எம்மவருக்காய் ஒன்று பட்டு புதிய ஆண்டு அவர் தம் இன்னல் நீக்கும் ஆண்டாக அமைய எம்மால் இயன்றதை செய்வோம்.
(ராம்)