இமயமலையின் தாய்மலை என அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் பழைமையான மலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. பல லட்சம் ஆண்டு பரிணாமத்தில் உருவான இந்தக் காடுகள் வன வளம் நிறைந்ததாகக் காணப்படுகிறது.
அரியவகை தாவரங்கள், பாலூட்டிகள், பறவை இனங்கள், பூச்சி இனங்கள், இரு வாழ்விகள், ஓரிட வாழ்விகள் எனப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் உயிர்ச்சூழல் மண்டலமாக உள்ளது.
காட்டுயிர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க இயற்கை அளித்த கொடைகளில் மிக முக்கியமானது சோலை மரக்காடுகள். கடல் மட்டத்திலிருந்து 2,000 அடி உயரத்தில் காணப்படும் இந்தக் காடுகள் மிக தனித்துவமானவை. [shola &grass land] சோலைக்காடுகள் & புல்வெளிகள் இவை இரண்டும் பிரிக்க முடியாத பிணைப்பைப் பெற்றுள்ளன.
இந்தச் சோலை மரங்கள் மழை மேகத்தைக் குளிர்ச் செய்து மழை பொழிவை உண்டாக்கும். இந்த மழை நீரை அருகில் உள்ள புல்வெளிகள் சேகரித்து ஆண்டு முழுவதும் கசியச் செய்து ஓடைகளையும், சுனைகளையும் வற்றாமல் பார்த்துக்கொள்ளும்.
இது மட்டுமல்லாமல் எளிதில் அவிழ்க்க முடியாத பல அதிசயங்களை தன்னுள் வைத்திருப்பதாக ஆய்வாளர்களே அதிசயித்துப் போகின்றனர்.
இத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மழைக்காடுகள் பணப்பயிர்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் அழிக்கப்பட்டன. இது மட்டும் இல்லாது பூர்வீக சோலை மரங்கள் அகற்றப்பட்டு விறகு தேவைக்கும் பிற தேவைகளுக்காகவும் சீகை, யூகலிப்டஸ், பைன் போன்ற மரங்கள் நடப்பட்டன.
நாளடைவில் நன்கு வளர்ந்து பரவிய இந்த அந்நிய மரங்கள் நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சி மற்ற பூர்வீக தாவரங்களின் வளர்ச்சியைக் கடுமையாகத் தடுத்து சூழலியலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இவற்றை அகற்ற வனத்துறை முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இருந்தாலும் இவற்றை முழுமையாக அகற்ற சாத்தியமே இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டி அருகில் உள்ள தொட்டபெட்டா, ஹெல்க் ஹில் போன்ற பகுதிகளில் உள்ள யூகலிப்டஸ், பைன் காடுகளில் தற்போது ஆச்சர்யமளிக்கும் வகையில் சோலை மரங்கள் தாமாக முளைத்து வருகின்றன.
இது குறித்து நம்மிடம் பேசிய காட்டுயிர் ஆய்வாளரும், எழுத்தாளருமான வசந்த் பாஸ்கோ, “300 ஆண்டுக்கு முந்தைய நீலகிரியில் 30 சதவிகிதம் சோலைக்காடுகள், 70 சதவிகிதம் புல்வெளிகள் காணப்பட்டன. தற்போது 15 சதவிகித சோலைக் காடுகள், 7 சதவிகித புல்வெளிகள் மட்டுமே உள்ளன. நீலகிரியில் காணப்படும் இந்த அரிய சோலைக்காட்டில் விக்கி, நாவல், சிறு நாவல், தவிட்டு உள்ளிட்ட 95 மர வகைகள் உள்ளன. அதேபோல் சோலைக் குறிஞ்சி, பாம்பு செடி, ஆர்க்கிட் உள்ளிட்ட 400 -க்கும் அதிகமான செடி வகைகள் உள்ளன.
தற்போது இவற்றின் அழிவுக்குக் காரணமாக இருப்பது களை மரங்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், இந்த பேராபத்தை எதிர்கொண்டு மீண்டு வளர சோலை மரங்கள் தகவமைத்துக்கொண்டன. இது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதே சமயம் பருவ நிலை மாற்றம் இந்தக் காடுகளை நேரடியாகப் பாதிக்கின்றன. எனவே, சுற்றுச்சூலைப் பாதுகாத்து, மீதம் இருக்கும் மழைக்காடுகளைப் பாதுகாத்தால் போதும் எந்த இடர்களையும் தாங்கி வளரும்” என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தொட்டபெட்டா அருகில் உள்ள சுனோடன் காப்புக்காட்டில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்நிய மரங்களின் ஊடாக தற்போது சோலை மரங்களும், செடிகளும் தாமாக துளிர்த்து வருகின்றன. இது இந்தக் காடுகளுக்கு நல்ல அறிகுறியாக உள்ளது. இவை வளர ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றனர்.