இக்கலைஞனின் மேடை நாடகங்களான….நலமே புரியின் நலமே விளையும் அன்பின் வெற்றி இதுதான் முடிவு சிங்ககிரி செல்வி தீர்ப்பு காலங்கள் அழிவதில்லை களங்கம் போராட்டம், ஒரு சக்கரம் சுழல்கிறது எனவும் குடும்பம் ஒரு கதம்பம் காலங்கள் எனும் தொலைக் காட்சி நாடகங்கள் என்ற சிருஷ்டிகளையெல்லாம் எமக்களித்தவர் “அவள் ஒரு ஜீவ நதி” என்ற திரைக் கதையை எழுதி தயாரித்து வெளியிட்டப் பெருமை கண்டவர்.
இவரின் “வழி பிறந்தது” என்ற நெடுங் கதையை மறக்க முடியாது.. “மரணச் சடங்கு” என்ற நூலும்¸ “மாத்தளை முத்துமாரி அம்மன் கோவில் வரலாறு” என்ற நூலும் கார்த்தியின் சமயம் சார்ந்தப் படைப்புக்களாகும்.குறிஞ்சி வெளியீட்டகம் இவருடையது. 1992 களில் சுபைர் இளங்கீரனின் மூன்று நாடகங்களை ‘தடயம்” என்ற நூல் தொகுதியாக தமிழ் நாடு இளவழகன் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார்.
இதே பதிப்பகத்தில் இதே ஆண்டில் நா.சோமகாந்தனின் “நிலவோ நெருப்போ” என்ற சிறுகதை தொகுப்பும்¸ மு.சிவலிங்கத்தின் “மலைகளின் மக்கள்” என்ற தொகுப்பும்¸ மாத்தளை ரோகினியின் (தொழிற்சங்கவாதி தவசி ஐயாதுரை) நாவல் ஒன்றும் (பெயர் ஞாபகமில்லை) வெளியிட்டுள்ளார். கார்த்தி¸ படைப்பாளர் எஸ்.பொ. வீரகேசரி கார்மேகம் அண்ணர்¸ தெளிவத்தை ஜோசப்¸ மு.நித்தியானந்தன் ஆகியோரின் நெருங்கிய நண்பராவார்.
மலை நாட்டு எழுத்தாளர் மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் ஆவார். இம் மன்றம் 64¸ 66 களில் வீரகேசரியுடன் இணைந்து நடாத்திய நான்கு சிறுகதை போட்டிகளின் மூலம் மலையக எழுத்தாளர்களை உருவாக்கியப் பணியில் கார்த்திக்கு முக்கிய பங்குண்டு இலக்கியத் தம்பதிகளான திரு.மு.தயாபரன்¸ திருமதி வசந்தி தயாபரன் ஆகியோருடன் “தகவம்” இலக்கிய அமைப்பில் இணைந்து தலைவராகவும் பணி புரிந்துள்ளவர்.
“கார்த்தி மாத்தளையின் ஜீவநதி” என்று அவர் வாழும் போதே மு.நித்தியானந்தன் (லண்டன்) இவரைப்பற்றிய ஓர் பெறுமதி மிக்க வரலாற்றுக் கட்டுரையை இலங்கைப் பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதி வந்தார். எழுத்தாளர் தி.ஞானசேகரன் தனது ஆகஸ்ட் ஞானம் இதழில் அட்டைப் பட அதிதியாக மகுடமிட்டு வெளியிட்டிருக்கிறார். கார்த்தி¸ மாத்தளையில் ஊற்றெடுத்த ஜீவநதியாகி கலை¸ இலக்கியக் கடலில் இன்று சங்கமமாகி விட்டார். இப் பெரு மகனுக்கு இலங்கை கலை இலக்கிய உறவுகளுடன் அஞ்சலி செய்து….இறுதி வணக்கம் செலுத்துவோம்.
(Murugan Sivalingam)