மண்முனை தென் எருவில் பற்று பிரசேத்திலுள்ள களுவாஞ்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்தான் கந்தசாமி கோகுலரஞ்சன். சிறிய வயதிலிருந்தே தொழில் நுட்பத்துறையிலும், இலத்திரனியல் துறையிலும், ஆர்வமானவர். மத்திய கிழக்கு நாடுகளில் கணினி திருத்துநராக தகுந்த வேதனத்துக்கு தொழில் புரிந்து வந்துள்ளார்.
தற்போது, பல கம்பனிகளுக்கும் நிறுவனங்களுக்குமுரிய கணினிகளைப் பழுது பார்த்துக் கொடுத்து வருகிறார். கொவிட் – 19 காலத்தில் கணினி திருத்தும் வேலைகள் குறைவடைந்துள்ளதால், 45 நாள்களில், சுமார் நான்கு இலட்சம் ரூபாய் செலவு செய்து, கழிக்கப்பட்ட உதிரிப்பாகங்களைக் கொண்டு, புதிய ரக உழவு இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
விவசாயக் கிராமத்தில் பிறந்ததாலும், விவசாயத்தில் அதிக நாட்டமுள்ளதாலும், தாம் எவரிடமும் கையேந்தாமல் விவசாயிகளுக்கு புதிய உழவு இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டுத்தான் இவ்வுழவு இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளதாகவும், இதற்கு அரச அங்கிகாரம், பதிவுச் சான்றிழ் போன்றவற்றைப் பெற்றுத்தர அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.
கோகுலராஞ்சன் புதிதாக வடிவமைத்துள்ள சிறியரக உழவு இயந்திரத்தை அப்பகுதி மக்கள், விவசாயிகள் அனைவரும் பார்வையிட்டு வருகின்றனர்.
தனது முயற்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, கோகுல ரஞ்சன் மேலும் கூறியதாவது:
நான், பொது எலக்றிசிற்றி டிப்ளோமா கற்கை நெறியைப் மட்டக்களப்பு இ.ரி.ஐ. நிறுவனத்தில் பூர்த்திசெய்தேன். சிறிய வயதிலிருந்தே ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் எனக்குள் இருந்து வந்தது. 2001ஆம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளைப் புதிதாக உருவாக்கினேன். அக்காலத்தில் அதனை வெளியில் ஓடமுடியாமலிருந்தது. பின்னர், அப்போது எதுவித வேலைவாய்ப்பும் இன்மையால் 2003ஆம் ஆண்டு, கணினி திருத்துனராக வெளிநாட்டுக்குச் சென்றேன். 2016ஆம் ஆண்டு வரைக்கும் அங்கு தொழில் புரிந்துவிட்டு, மீண்டும் நாட்டுக்கு வந்துவிட்டேன்.
தற்போது களுவாஞ்சிகுடியிலுள்ள எனது வீட்டிலிருந்தபடியே பல தனியார் கம்பனிகளுக்கும், நிறுவனங்களுக்கும் கணினி பழுதுபார்த்துக் கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வருகின்றேன்.
எனினும், தற்கால கொவிட் – 19 காலத்தில் எனக்குரிய தொழில் ஓடர்கள், மிக மிகக் குறைந்தமையால், வீட்டில் வீணாகப் பொழுதைக் கழிக்காமல் அதனைப் பிரயோசனமாக்கி எனக்குள்ளிருந்த கண்டுபிடிப்பு அல்லது புத்துருவாக்கம் வெளிப்பட வேண்டும் என்ற நோக்குடன் புதிய ரக உழவு இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். எனத் தெரிவிக்கின்றார்.
எனக்கு ஐ.ரி துறையைக் கற்றாலும் விவசாயத்துறையில் அதிக ஈடுபாடும் உள்ளது. தற்கால நவீன உலகில் ஆட்களைக் கொண்டு செய்யும் வேலைகளை இயந்திரங்களைக் கொண்டுதான் செய்கின்றார்கள். அந்த வகையில் விவசாயத்திற்கு நிலத்தைப் பண்படுத்துதல் இன்றியமையாத ஒன்றாகும். நிலத்தை உழுதல், சமப்படுத்துதல், போன்றவற்றிற்கு என்னிடமுள்ள அறிவுத்திறனை எவ்வாறு பயன்படுத்தலாம் என சிந்தித்துத்தான் நான் இந்த சிறியரக புதிய வடிவிலான உழவு இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன்.
இதற்கு சுமார் 4 இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இதனை உருவாக்குவதற்கு 45 நாள்களில் முழு வடிவத்தையும் பூர்த்தி செய்தேன். எலக்றிக்கல், எலற்றோனிக், மெக்கானிக்கல் ஆகிய மூன்று துறைகளும் எனக்குத் தெரித்திருப்பதால், இன்னும் வசதி வாய்ப்புகள் வரும் பட்சத்தில், இதனை மேலும் மெரூகூட்டி முழு எலக்ரோனிக் கொன்றோளுக்குக் கொண்டு வரலாம்.
எதிர்காலத்தில், புதிய புதிய இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடத்தில் உள்ளது. குறிப்பாக அடுத்தாக, பெற்றறியிலும், அந்த பெற்றறியில் சேமிக்கப்படும் மின்சாரம் குறைவடைந்ததும், சூரிய சக்தியிலும் இயங்கும் ஓட்டோ ஒன்றை உருவாக்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன். எனது படைப்புகளுக்கு அரச அங்கிகாரமும் அதற்குரிய சான்றிதழ்களும் கிடைக்கப்பெறும் பட்சத்தில், நான் இன்னுமின்னும், மென்மேலும் எனது புத்துருவாக்கங்களை முன்கொண்டு செல்ல வாய்ப்பாக அமையும்” எனத் தெரிவிக்கின்றார் புத்துருவாக்குநரும், கண்டுபிடிப்பாளருமான கந்தசாமி கோகுலரஞ்சன்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மனிதன் ஏதோ ஒரு விதத்தில் பல்துறைசார்ந்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றான். தற்போதைய கொவிட் – 19 காலத்திலும் சில முயற்சியுடையோர் வீட்டில் முடங்கிக் கிடக்காமல், தமது பொழுதை வீணாகக் கழிக்காமல், அவற்றை மிகுந்த பிரயோசனமாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எனினும், கண்டு பிடிப்புகளுக்கும் புதிய உற்பத்திகளுக்கும் இறக்குமதிகளுக்கும் சர்வதேசத்தையே நம்பியிருக்கும் இலங்கையில், ஆங்காங்கே எங்கேயே மூலை முடுக்குகளில், தத்தமது திறமைகளைக் காண்பித்து, புதிய கண்டு பிடிப்புகளையும் உற்பதிகளையும் வெளிக்காட்டுபவர்களாக நம்நாட்டுக் கண்டுபிடிப்பாளர்களும் புத்துருவாக்குநர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
தற்கால அவசர யுகத்தில், மனிதன் தான், தான் முன்னேறுகின்ற துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்ற போதிலும், கொவிட் – 19 காலத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கின்ற போதிலும், இவ்வாறு ஆங்காங்ககே தத்தமது திறைமைகளை வெளிப்படுத்துகின்றபோது, அவற்றைத் தட்டிக் கொடுக்கவும் அவ்வாறானவர்களை மேலோங்கச் செய்துவிடவும், துறைசார்ந்த அரச நிருவாத்தினரும், ஏனைய அரச சார்பற்ற அமைப்புகளும் அவர்சார்ந்த சூழலும் சமூகமும் முன்னின்று செயற்படல் வேண்டும்.
அதுபோன்றுதான், மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி கிராமத்திலுள்ள இளம் கண்டுபிடிப்பாளர், புத்துருவாக்குநர் என்ற தகுதியுடன் திகழும் கந்தசாமி கோகுலரஞ்சன், தனது அயராத முயற்சியின் பலனாக 2001 ஆம் ஆண்டு, உருவாக்கிய மோட்டார் சைக்கிள், தற்போது உருவாக்கியுள்ள உழவு இந்திரம், அவர் எதிர்காலத்தில் உருவாக்கத்திட்டமிட்டுள்ள பெற்றறி, சூரிய சக்தியில் இயங்கும் ஓட்டோ, விவசாயத்துக்குத் தேவையான ஏனைய இயந்திரங்கள் என, அவரது புதிய கண்டுபிடிப்புகளை, பொருளாதார ரீதியில் வீடும் நாடும் பயன்பெறக்கூடயவாறு, இதுவரையில் யாரும் உதவியிருக்கவில்லை.
‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற கோட்பாட்டுக்கு இணங்க, இலங்கையின் ஒரு மூலையில் இருந்து கொண்டு, தனது திறமையை வெளிஉலகுக்கு வெளிக்காட்டியுள்ளார். இவ்வாறானவர்களை மேலும் ஊக்கப்படுத்தல் வேண்டும். பழுதடைந்த வெவ்வேறு வாகனங்களின் உதிரிப்பாகங்களை எடுத்து, புதிதாகப் படைத்துள்ள இந்த உழவு இயந்திரம், வீதியில் பயணிப்பதற்குதிய அரச அங்கிகார ஆணை, அதாவது வழங்கமாக வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற வாகன பதிவுச் சான்றிதழ், அனுமதிப்பத்திரம், காப்புறுதி போன்றவற்றையும் பெறுவதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், கந்தசாமி கோகுலரஞ்சனால், எதிர்காலத்தில் அவர் திட்டமிட்டுள்ள புதிய வாகனங்களை உருவாக்கவும் மக்கள் அதனை கொள்வனவு செய்யும் அளவுக்கு வளர்ச்சியடைந்து, அது ஓர் உற்பத்தி நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.