நடந்து கொண்டிருந்த இயல்பான கொண்டாட்டங்களை துறந்து புதிய இடத்திற்கு புடுங்கி, புதிதாக நாட்டியது போல் அல்லாது, பூச்சட்டியிற்கள் கொண்டு வந்து வைத்தது போன்ற புது வாழ்க்கை இந்த நகரத்து வாழ்க்கை…, உறவுகளைப் பிரிந்து வாழ்க்கை.
அந்தக் கோயில் கோபுரங்களின் பின்புலமும், அந்த கோவில் வீதியும், வாய்க்கால் வரப்புகளும், நாம் கடந்து வந்த பாதைகள்தான்…!
பலரும் படுத்துறங்கிய திண்ணை, ஓடி ஆடிய வீதிகள், கடக்க முற்பட்ட வாய்கால், வரப்புகள், ஒழுங்கைள், அந்த காலத்து சயிக்கிள்கள் என்றாக….
மச்சாள், மச்சான், அண்ணன், தங்கை, மாமா, மாமி, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, தாத்தா, பாட்டி என்றாக வாழ்ந்து வாழ்க்கையில் ஒரிருவர் தனியாக வெளியெறி வேறு இடத்திற்கு சென்றுவிடுவர்…. எதோ ஒரு பிரிதலுக்கான காரணமாக…?
இதில் உறவுகளுடன் பகைக்காமலும்…?, பகை வரக் கூடாது என்பதாகவும், ஏன் சொந்த வீட்டை விட்டுக்கொடுக்க வேண்டும் அது சொந்தந்திற்காக சொத்து பிரிப்பாக பிரிந்து சென்று இந்த பிரிதல்…..
கிராமத்து வீட்டை விட்டு வெளியேறும் போது நிலத்தில் இறுகியிருக்கும் அந்த அம்மியை அலவாங்கு(கடப்பாறை) கொண்டு கிளப்பும் அந்தக் காட்சி வலியின் உச்சம்…. இடம்பெயர்வு வலியின் உச்சம்
இதனையும் நாம் கடந்துதான் வந்திருக்கின்றோம்
நம்மில் பலர் அம்மியைக் கிளப்பாமலே விட்டு வந்த கதைகளும் உண்டு.
சில காலம்தான்….! இன்னும் சில காலம்தான்…!! மீண்டும் இணைவோம் என்ற எண்ணத்தில் பிஞ்சு உள்ளங்கள்…
கால ஓட்டத்தில் பல ஆண்டுகள் ஆகியும் தமது பால்ய வாழ்வின் ஊருக்குச் சென்று உறவுகளுடன் இணையை வாய்ப்புகள் ஏற்படாமல் கடந்து போன கோலங்கள்
இந்த பிரிந்த உறவுகளில் ஒருவரை எங்கு சென்றாலும் மறக்க முடியாத அண்ணன், தங்கையாக; மச்சாள், மச்சானாக எதோ ஒரு வகையில் தொடரும் உறவால் மனித வாழ்வி;ல் நடைபெறும் திருமண வாழ்வில் மற்ற எந்த சந்தோஸங்களையும் விட இதற்கு அழைப்பு விடுக்கும் போது மறுக்க முடியாமல்…..
சற்று நெருங்க முடியதாக ஊராக, உறவாக மனதில் தோன்றினாலும் மனச் சஞ்சலத்துடன் ஒரு முறை போய் பார்த்துவிட்டு கல்யாணத்தில் மண்டபத்தில் கலந்துவிட்டு உடன் திரும்பி வருவோம் என்று சென்ற வந்த அனுவபங்கள் எம்மில் பலருக்கும் உண்டு…..
இங்கு சிறு வயத்தில் கண்ட பழகிய உறவுகளில் பலரை அடையாளம் காண முடியாமலும், அடையாளம் கண்டாலும் உடனடியாக உறவாட முடியாமலும், உறவு சொல்லி அழைக்க முடியாமலும், உள்ளத்திற்குள் குமுறும் உணர்வாய் நாம் தத்தளித்தது பலருக்கும் அனுபவங்களாக உண்டு.
ஊரில் வாழ்ந்த காலங்களில் நாம் திரிந்த தெருக்கள் கோவில்கள் படிச்ச பாடசாலை புடுங்கி தின்ற மாங்காய், இளநீர், குளித்த நீரோடை, செய்த குழப்படிகள், விளையாடி விளையாட்டுக்கள் என்பன அந்த ஒரு நாளில் எமது நினைவலைக்குள் பசுமரத்து ஆணி போல் உள்ளே எழும்பி வர..
அதனை கொண்டாட எம்முடன் ‘….என்ன மச்சான் கறுத்துப் போனாய்….., எங்கே அந்த சுருட்டை தலைமயிர்….’ என்றாக நீங்க போங்க வாங்க என்று வாஞ்சையுடன் அழைத்து மரியாதை செய்ய
‘…. என்ன…. வாங்க போங்க அடி வாங்குவாய்…. நீ மட்டும் என்ற இப்படி ஆகிவிட்டாய் என்று அவளின் மூப்பை சொல்ல
‘….என்ன எப்போதும் குமரியா…’ என்று சிணுங்க
திருமண விழாவில் செய்ய வேண்டி வேலைகளை ஒரு பக்கம் சற்றுத் தள்ளிவிட்டு தேநீர் கொடுத்தல், பலகாரம் கொடுத்தல், சாப்பாட்டுப் பந்தியிப் பரிமாற்றத்தில் விசேடமாக கவனித்த பரிமாறும் கணங்களில் கண்களின் அன்பை, அக்கறையை வெளிப்படுத்திய தருணங்களை நாம் பந்தியில் பரிமாறாமலா இருந்திருப்போம்….
கடந்து போகும் போது தடவியும், தழுவியும், அன்பை, அரவணைப்பை அந்த உள் காதலை தெரிவிக்கும் நுண் உணர்வுகளை அழகாக்கும் உண்மைகள் அபாரம் இந்த ஸ்பரிசம் எமக்கு புதிதானவை அல்ல மனித வாழ்வியலை அழகாக்கியவை இவை…
இதற்குள் தனது சோகக் கதையை கூறி உன்னோடு வாழ்ந்திருக்கலாம் என்ற உறவை கூறுவதும் நாம் எல்லோரும் சந்தித்து கண்ணீரு விடும் உறவுகள்தான்…
உண்மைகள் தான் இடப்பெயர்வுகளால் இவை பலவற்றை இழந்துதான் விட்டோம்
பாடசாலை, பல்கலைக் கழக வாழ்வுப் பிரிவுகளால் இதனைத் தொலைத்துத்தான் விட்டோம்
உறவுகளின் பிரிவில் அதுவும் பால்ய, குழுந்தைப் பிராய வயது வெள்ளத்திச் செய்கைகள் எம்மை இடம் பெயர வைத்து தனியாக்கிவிட்டன என்றாக கொத்தளிக்கும் போது உள்ளுக்கும், வெளியேயுமாக வெம்பி அழும் அழுகையாக வெளிவருதை நாம் கண்டுதான் வந்திருக்கின்றோம்….
இவை அத்தனையையும் ஒரு ‘மெய்யழகன்’ திரைப்படத்தில் நெறியாளர் தனதும் தனது நண்பனின், சொந்த அனுவங்களை திரைக்கதை அமைத்து வெளியிட்டு உள்ளார்
இதில் கார்த்திக் கலகலவென அ(ஐ)த்தான்….. அ(ஐ)த்தான்….. என்று வாய்க்கு வாய் அழைக்கும் வெள்ளந்தி கிராமத்தவனாக நகரத்திற்கு இடம்பெயர்ந்து நகர்த்து வாழ்விற்குள் புதைந்து ‘கௌரவம்’ என்பதாக தன்னை மாற்ற முயன்றும் மீண்டும் அதே கிராமத்திற்குள் ஒரு இரவு தங்கும் சூழ்நிலையில் நிலை குலைந்து போய் சொல்லி விட்டுப் பிரிய முடியாமல் உறக்கத்தில் மற்றவர்கள் இருக்கும் போது பட்டணத்திற்கு கிளம்பும் மனிதராக அரவிந்தசாமியும் வாழ்ந்திருக்கின்றார்கள்.
இதில் எம்மில் பலர் கார்த்திகாகவும், அரவிந்தசுவாமிகளாகவும் தான் வாழ்ந்து வந்திருக்கின்றோம்
அரவிந்தசுவாமியின் உணர்வுக் கொந்தளிப்புக்களை புரிந்து கொண்ட நல் வாழ்க்கைத் துணையாக தேவதர்சினி என்றாக
சொல்லும் வரை கூடிப் பிறந்த தங்கச்சியாக உணரவைக்கும் அந்த புதுமண மகளாகட்டும் அவள் காட்டும் அண்ணன், மச்சான், தன் கரப்பிடிப்பவனுடனான உறவாகடடும் எல்லாம் அருமை
பந்தியில் பரிமாறுதல், வரவேற்றபில் உள்ள நிகழ்வுகளை பாடல் ஒன்றால் இணைத்தது வெளிப்படுத்தியிருப்பது மிகவும் அருமை.
காட்சிகள் ஒன்று, இரண்டு ஆனாலும் அந்த அரவிந்தசாமி அவரின் முறைப்பொண் உடனான உறவு உணர்வு, அன்பு, உரையாடல், அக்கறை இதனை விடச் சிறப்பாக உண்மையாக யாராலும் வெளிப்படுத்த முடியாத பெண்பாத்திரம் நடிப்பில் உச்சத்தைத் தொண்ட காட்சிகள் இவை,
கண்டவுடன் தன் கணவனின் அ(ஐ)த்தானை அண்ணை என்று அழைத்து தன் கணவனை எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றார் என்பதாக இணைந்து உருகி வாழும் இணைவாழ்வின் இணைப்பாக கார்த்திக் ஊதாக் கலர் ரிப்பன்(சிறீதிவ்வயா)(Sri Divya)
இறுதிவரை இந்த அ(ஐ)த்தான் அ(ஐ)த்தான் என்று அழைக்கும் இவர் யாரோ என்று அரவிந்தசாமி குழம்புவதும் இறுதி வரை அவரை அடையாளம் காண முடியாவிட்டாலும் தனக்கும் தன் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையிற்கு ‘அருள்மொழி’ என்ற இரு பாலருக்கும் பொதுவான பெயரை சூட்ட இருப்பதாகவும் அது அரவிந்தசாமியின் பெயரான அருள்மொழி என்பதான உச்சம் தொட்ட உறவும் யார் இவன்…? இந்த அன்பு எவ்வாறு ஏற்பட்டது….? என்பதற்கு…..
அரவிந்தசாமி இருபது வருடங்களுக்கு முன்பு பட்டணம் கிளம்பும் போது விட்டுச் சென்ற ஒரு சயிக்கிள் இந்தளவிற்கு ஒரு மனிதரின் வாழ்வை மாற்றி உயர்த்தி மறக்க முடியாத ஐத்தான் ஆக மாற்றிய அந்த கதைகள் எம்மில் பலருக்கும் உண்டுதான்
கமலஹாசன் குரலில் அந்த பாடல் சொல்லாமல் உறவுகளின் இனிமைகளைச் சுமந்த வண்ணம் அரசவிந்தசாமி சென்னை கிளம்பும் அந்த சூழல் பலரையும் கண்கலங்க வைத்துவிட்டது….?
இது பலருக்கும் வாழ்வில் ஏற்பட்ட உண்மைதான்
சிறப்பாக புலம்பெயர் தேசத்தில் இருந்து உறவுகளைப் பார்க்க போருக்கு பின் ஊர் சென்று மீண்டும் திரும்பும் வேளைகளில் இது அதிகம் எனக்கு எப்போதும் ஏற்படுதுண்டு.
நகரத்தில் சொத்தமாக வீடு வாங்க பணம் தேவை என்றான போது நகரத்து நட்புப்களும் கடனாக பணம் கொடுக்க முன் வர தம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எந்த கேள்வியும் இல்லாமல் திரட்டிக் கொடுக்க முன் வரும் ஐத்தான் உறவாக வெளிப்படுத்தியிருக்கும் கிராமத்து உறவுகளின் வாழ்வு உண்மையானது எம்மில் பலரும் தற்போது இவற்றை அனுபவத்தில் கண்டுதான் வருகின்றோம்.
இறுதி வரை தன்னை ‘அ(ஐ)த்தான்’ என்று அழைக்கும் காரத்திக் யார் என்பதை அறிய முடியாமல் அரவிந்தசாமி மட்டும் அல்ல அவரின் புத்திசாலத்தனமான நிதானமான தேவதர்சியினும் குழநம்பி நிற்கும் அந்த காட்சி அமைப்பும்….
இறுதிக் காட்சியிற்கு அண்மையாக அதனை மறைமுகமாக உடைத்து அதனை அரவிந்தசாமியின் நினைவலைகளை… 20 வருடத்திற்கு முந்தைய நினைவலைகளை… மீட்டெடுக்கும் அந்த காட்சி கதாகலாட்சமானது…
என்னைப் போன்ற சிலர் இந்த மண் விளையாட்டில் இருந்து இன்றுவரை பல வாழ்க்கை உறவுகளை நடப்புகளை மறக்கவில்லை என்பது இங்கு விதிவிலக்காக இருந்தாலும் இந்த புதிய வேக வாழ்க்கையில் பலரும் மறந்த மலரும் நினைவுகளாக இவை உள்ளிருப்பது உண்மையே
ஒரு முறை மெய்யழகன் திரைப்படத்தைப் பார்த்துவிடுகள்.
உறவுகளுடன் உண்மைகளுடன் குழந்தைப் பருவத்துடன் பால்ய வயதுகளுடன் முதுமையிலும் கண்கலங்கும் ராஜ்கிரண்களையும் பார்த்துவிடுங்கள்.
விம்மலாக விசும்பலாக எனக்குள்ளும் பலதடவை ஏற்பட்டது இந்த படத்தை பார்த்த போது…… இது வலியில் சிந்தும் கண்ணீர் அல்ல வசந்தத்தை எண்ணி விடும் கண்ணீர் அழுகை இது
இது இன்னொரு தடவை இந்த படத்தைப் பார்த்தால் என்ன..? என்று உங்களை திரைக்கு முன்னால் தரையில் குந்த வைத்துவிடும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
(இது திரைப்படத்திற்கான விமர்சனம் அல்ல என் உணர்வலைகள். நினைவுகளின் நா தழுதழுவல்கள் கண்ணில் நீரை வரவழைத்து உண்மைகள் உறவுகள் உணர்வுகள் ஏன் கொண்டாட்டங்கள் கூட)