பஸ்- ரயில் மோதிய விபத்துச் சம்பவம் மன்னாரில் முதல்முறை இடம்பெற்றமையால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
குறித்த விபத்துக்கான காரணம் பல கோணங்களில் ஆராயப்பட்ட நிலையில், இரண்டு தரப்பினருடைய அசமந்தப் போக்கே, இந்த விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
விபத்துச் சம்பவித்த இடத்தின் ரயில் பாதையில் வீதித் தடை காணப்படுகின்றது. ரயில் பாதைக்கும் பிரதான வீதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பஸ் தரிப்பிடம் ஒன்றும் உள்ளது.
கொழும்பில் இருந்து காலையில் புறப்படும் ‘யாழ் தேவி’, முற்பகல் 10.30 மணிக்கு அநுராதபுரத்தை வந்தடைந்து, அங்கிருந்து 11 மணிக்கு தலைமன்னாருக்கு இணைப்புச் சேவையாகப் புறப்பட்ட ரயிலே இவ்வாறு நண்பகல் இரண்டு மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
தலைமன்னார் பியர் ரயில் நிலையமே, கடைசி ரயில் நிலையமாகும். தலைமன்னார் கடற்கரை இறங்குதுறையுடன் காணப்படும் இந்த ரயில்நிலையத்தில் இருந்தே, இந்தியாவில் இருந்து கப்பலில் வருபவர்கள், நாட்டின் பலபகுதிகளுக்கும் ரயில் ஏறுவார்கள்.
விபத்து நடந்த இடத்துக்கும் பியர் ரயில் நிலையத்துக்கும் 300 மீட்டர் தூரம் இருந்தமையால், ரயிலின் இயந்திரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டு, குறைந்தளவு வேகத்திலேயே ரயில் பயணித்திருந்தது. இயந்திரம் நிறுத்தப்பட்டிருந்ததால், ‘ஹோர்ன்’ அடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பவித்த இடத்திலுள்ள ரயில் கடவை, தலைமன்னார் பொலிஸாரின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவருகின்றது. தலைமன்னார் பொலிஸாரே, குறித்த ரயில் கடவைக்கு பாதுகாப்பு ஊழியர்களை நியமித்துள்ளனர். எனினும், முதியவர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தலைமன்னார் பியர் ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வந்தபோது. குறித்த ரயில் கடவையில், கடமை நேர பாதுகாப்பு காவலாளி கடமையில் இருக்கவில்லை. ரயில் கடவைக்கான தடை, குறித்த நேரத்தில் இடப்படவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த விபத்து இடம்பெறுவதற்கு வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.
விபத்து சம்பவித்த இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திலேயே, தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. இந்தப் பாடசாலையில் இருந்து பஸ்ஸில் ஏறிய மாணவர்களே விபத்தைச் சந்தித்துள்ளனர். ஒழுக்க நடவடிக்கைக்காக காலையில் ஐந்து மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்ததுடன், பாடசாலை முடிந்த பின்னர் 50 ற்கும் மேற்பட்ட மாணவர்களை பாடசாலை சிரமதானத்துக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தெய்வாதீனமாக இந்தநிகழ்வுகள் இடம்பெறாதிருந்து, குறித்த மாணவர்களும் குறித்த பஸ்ஸில் பயணம் செய்திருந்தால் எதிர் பார்க்க முடியாத சேதத்தை சந்தித்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த பஸ், ரயிலுடன் மோதிக்கொண்ட போது, மாணவர்கள் பொதுமக்கள் என 30 பயணிகள் பயணித்துள்ளனர். இவர்களின் மாணவர்கள் உட்பட 25 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். குறித்த பஸ்ஸின் சாரதி, இதுவரை விபத்து எதையும் சந்திக்காத திறமையான சாரதி என ஊர் மக்களால் பேசிக்கொள்ளப்படுகின்றது.
விபத்து சம்பவிப்பதற்கு முன்னர், ரயில் கடவையில் பஸ்ஸின் எதிர்த்திசையில் பட்டா ரக லொறி வந்ததாகவும் அந்த லொறியின் பின்னால் மோட்டார் சைக்கிள் நின்றதாகவும் பட்டா லொறியை பின்நகர்த்தினால்த்தான் பஸ்ஸை முன்நகர்த்த முடியும் என்ற சூழ்நிலையில், நடத்துநர் பஸ்ஸிலிருந்து இறங்கி, பட்டா லொறி சாரதியுடன் வாக்குவாதப்பட்டதாகவும் இதன்போதே, பஸ்ஸின் சாரதி, ரயில் வருவதைக் கவனியாது, பஸ்ஸை முன்னகர்த்தியதாகவும், இவ்வாறு பஸ்ஸின் சாரதி, நடத்துநர் பாதையை அவதானிக்காமல் பயணத்தை தொடர்ந்ததே விபத்துக்கான காரணமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் பஸ்ஸூடன் போதியபோது, பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலிருந்து விபத்தைக் கண்ணுற்றவர்கள், விபத்து நடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்கள். இவ்வாறு அயலில் இருந்து வந்தவர்களாலேயே, ரயிலுடன் மோதுண்டு பிரண்டிருந்த பஸ் கயிறு கட்டி, இழுத்து நிமிர்த்தப்பட்டது. இதன் பின்னரே பஸ்ஸூக்குள் காயமடைந்து அகப்பட்டு இருந்தவர்கள், அருகில் இருந்த தலைமன்னர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முதலுதவி அளித்தபின்னர், அம்புலன்ஸ் ஊடாக உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
விபத்துக் குறித்து அறிந்தவுடன், பிற்பகல் 2.15 மணியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தயார் நிலையில் காணப்பட்டது. வைத்தியசாலையின் வைத்தியர்கள், பணியாளர்கள், சுகாதாரத் தொண்டர்கள் என பல தரப்பட்டவர்களும் தயார் நிலையில் காணப்பட்டனர். விபத்தைக் கேள்விப்பட்ட மக்கள் வைத்தியசாலையை சூழ்ந்து கொண்டனர்.
காயமடைந்த 24 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். இதன் போது பல்வேறு வகைகளில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டது. விபத்தில், காயமடைந்த தரம் 9 இல் கல்வி கற்ற பாலச்சந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவன் உயிரிழந்ததோடு, காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்றுமாலை, மன்னார் வைத்தியசாலையில் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்ட விடயம் தீ போல பரவியதையடுத்து, நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் முண்டியடித்துக் கொண்டு இரத்ததானம் செய்தனர்.
குறித்த விபத்து காரணமாக, பியர் கிராமமே முழுமையாக சோகத்தில் ஆழ்ந்துள்ளது. “ஓர் உயிரை இழந்துள்ளோம். பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். பொலிஸார் நீதியைப் பெற்றுத்தருவதாக கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பதிலை, உரிய தரப்பினர் கூறப்போகின்றார்கள். குறித்த விபத்துக்கு சரியான தீர்வு வேண்டும். இந்த விபத்துக்கு மிக முக்கிய காரணம், குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஊழியர்கள். எனவே, உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் அரசு உரிய நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்பதே பியர் கிராம மக்களின் ஆதங்கமாகும்.
இந்த விபத்து தொடர்பில், பஸ் சாரதியும் ரயில்வே கடவையின் கடமை நேர காவலாளியும் தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர்.