யாழ்ப்பாணம் நிலாவரைக் கிணற்றினுள் நடந்த ஆய்வினைப் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்

அமைவிடம்: யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராச வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, J/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் உள்ள நவக்கிரி என்னும் ஊரில் நிலாவரைக் கிணறு அமைந்துள்ளது. இக்கிணற்றிற்கு அருகில் நவசைலேசுவரம் என்னும் ஓர் சிவனாலயமும் உண்டு.

முதல் ஆய்வு: 1824 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அப்போதைய அரச பிரதிநிதி ஃவேர்டிபில் ஒக்லான்ட் ஃகைகின்னின் அனுசரணையுடன் நிலாவரையின் ஆழம், நீர் மற்றும் வேகம் என்பன பற்றி ஆராயபட்டது. இந்த ஆய்வின் பயனாக இதன் ஆழம் அப்போதைய அப்போதைய தொழில் நுட்பத்திற்கு ஏற்ற்றாற் போல் கண்டுபிடிக்கப்பட்டது… அப்போது இதன் ஆழம் 164 அடியாகாவும் கடல் மட்டத்தில் இருந்து 0.25 அடி ஆழத்தில் நீரைக் கொண்டுள்ளது

அளவு: தற்போதுள்ள நிலாவரைக் கிணறு 52 அடி நீளம், 37 அடி அகலம் கொண்டு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது.

சொந்தம்: தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம்.

பராமரிப்பகம்: இதன் பராமரிப்புப் பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது. இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாதராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வு நாள்: கடந்த 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு பிற்பகலில் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் நவர்கிரி, நிலாவரைக் கிணறு, தன்னுள் பல மருமங்களையும் வியப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், எந்தவொரு ஆய்வாலும் இதன் ஆழத்தையோ உருவாக்கத்தைப் பற்றியோ முடிவுகளைத் தர இயலவில்லை. இந்நிலையானது கடந்த 2016ஆம் ஆண்டோடு ஒரு முடிவிற்கு வந்தது.

‘சிறீலங்காக் கடற்படையின் சுழியோடிகள் ‘

சுழியோடிகள் – சுழித்துக் கொண்டு ஓடும் வலிமையான சுழல் நீரின் அடியிலும் நீந்திச் செல்லும் திறன் படைத்தவர்கள்.

சிறீலங்காக் கடற்படையின் சுழியோடிகள், படுவிகளின்(robot) உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், அனைத்து புதுமையான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள். கிணற்றுக்குள் 55.5m (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. அதாவது சராசரியாக இரண்டு பனை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது. இங்குள்ள நீர் 31 அடிவரையான ஆழத்திற்கு நன்னீராக உள்ளது. அதன்கீழ் 81 அடிவரையும் உவர் தன்மையானதாகவுள்ளது. அதன்கீழ் நிலத்தடி நீரோட்டத்துடன் நீர் தொடர்புபட்டுள்ளது.

சுழியோடிகள் கொண்டு சென்ற படுவிகள் எடுத்த நிழற்படங்களின் மூலம் கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அவற்றில் ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றைய இரண்டும் வண்டிலென அடையாளம் காணக்கூடியவாறும் காணப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித புலனங்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இவை உள்விழுந்து பல நூற்றாண்டுகளாகலாம் என்று என அனுமானிக்க முடிகிறது.

‘அடியில் உள்ள மாட்டு வண்டிகள் ‘

படுவிகள்(robot) செய்த ஆய்வில், கிணற்றின் அடியில் பல திசைகளை நோக்கி, பல நீரடி பிலங்கள்(under water cavern) காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது. நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணி நேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் பலர் கேள்விப்பட்டதுண்டு. இன்று, அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை படுவிகளின் ஆய்வுகள் மூலம் கிடைத்த நீரோட்டங்களை வைத்து உறுதி செய்யப்படுகிறது.

கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு பிலம்(cavern) ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்க முடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் பிலத்திற்கும் நிலாவரைக் கிணற்றுப் பிலத்திற்கும் இடையிலான நீரோட்டத் தொடர்பு இருப்பதை உய்த்தறிய முடிகிறது.

‘மற்றொரு மாட்டு வண்டி ‘

நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நீரக(நிலத்தடி நீர்) தொடர்பு இருப்பதனால் வறட்சியின்போதும் மழைக்காலத்தின் போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது.

இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நீரக பிலங்களிற்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

‘யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்றது.

சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன.

இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும் போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.

இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன.

சுண்ணப் பாறைகள் வன்னிப் பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன.

இப்பாறைப் படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது.

இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.

புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக் கற்பாறை தரையின் கீழ் நீரோடும் பிலங்கள்(cavern) அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக் கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.

இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய பிலங்களாக உருமாறி விடுகின்றன. இப்பிலங்கள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.

பிலம் மேலும் மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் பிலத்தின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது.

இவ்வாறு உருவான ஒரு பிலமே நிலாவரைக் கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய பிலங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன.’

இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும். மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்கான மீள்நிரப்பியாகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக்கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்டகாலமாகப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எழுபதுகளில் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில் 30.000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்போமாயின் உப்பு நீர் மேலோங்கிவரும் இடரும் உள்ளது.

நிலாவரை தொடர்பான கர்ண பரம்பரைக் கதையானது மிகவும் சுவையானது . ஏனெனில் இக்கதை இராமாயணத்துடன் தொடர்புபட்டுள்ளது.

→ இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்த போது, வானரப் படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று அந்த கர்ண பரம்பரைக்கதை கூறுகிறது.

எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறானது, யாழ்மண்ணின் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு புதையலாகும்.

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்