நான்கு வருடங்களுக்கு முன்னால் ஃப்ரான்சிடம் கால் இறுதிப் போட்டியில் மூன்று கோல்களுக்கு எதிராக நான்கு கோல்கள் வாங்கித் தோற்றபோதே மெஸ்ஸியின் உலகக் கோப்பைக் கனவுகள் யாவும் நீராவியாகப் போய்விட்டதென்றே பலரும் கருதியிருப்பார்கள்.
ஐரோப்பிய லீக் மேட்சுகளில் தனது மந்திரக் கால்களினால் தான் சார்ந்த பார்சலோனா அணிக்குப் பல கோப்பைகளை வாங்கித் தர முடிந்தாலும் ஓர் அணித்தலைவனாக தான் சார்ந்த அர்ஜென்டினாவுக்குப் பெரிய போட்டிகள் எதிலும் கோப்பைகளை வெல்ல முடியாத துரதிர்ஷ்டம் துரத்திக் கொண்டே இருந்தது மெஸ்ஸியை.
இன்னொரு சக ஆட்டக்காரனான போர்ச்சுக்கலின் ரொனால்டோ போர்ச்சு க்கலுக்காக ஐரோப்பிய கோப்பையை வென்றபோது மெஸ்ஸியால் முடியாதது ரொனால்டோவினாவில் முடிந்தது என்று உலகம் அவரைக் கொண்டாடியது. மெஸ்ஸியின் காயங்களில் உப்பு தடவும் வேலையாக அது தொடர்ந்தது. ( ஆனால் அதே ரொனால்டோ கத்தரில் நடந்த உலகக் கோப்பையில் ஸ்விட்சர்லாந்துக்கெதிரான போட்டியில் ஆட அனுமதிக்கப்படாமல் ஓய்வு இருக்கையில் அமர வைக்கப்பட்டது போல மெஸ்ஸிக்கு ஒரு போதும் நடந்து விடவில்லை)
லத்தீன் அமெரிக்க நாடுகளும் , ஐரோப்பாவும்தான் உலகக் கால்பந்தாட்டத் தின் தீவிர விசிறிக்கூட்டங்கள். ஐரோப்பாவிற்கு ‘யூரோ கப்’ இருப்பது போல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ‘கோப்பா அமெரிக்கா கப்’பிற்கான போட்டிகள் நடைபெறுகின்றன. ஐரோப்பாவும் சரி, லத்தீன் அமெரிக்க நாடுகளும் சரி. தங்களது இந்தப் போட்டிகளை ‘மினி வேர்ல்ட் கப்’ என்றே அறிவிக்கின்றன. கால்பந்தாட்டத்தில் அவர்களின் ஆதிக்கம் அப்படி.
2007-2008 இல் கோப்பா அமெரிக்கா கோப்பையில் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா நுழைந்தாலும் பிரேசில் அடித்த மூன்று கோல்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாமல் முடங்கிய போது, அர்ஜெண்டினாவின் கேப்டன் மெஸ்ஸிக்கெதிரே குற்றச்சாட்டுகள் குவிந்தன. மெஸ்ஸிக்கு அப்போது வயது 23. அந்தப் போட்டித் தொடரின் மிகச் சிறந்த இளைய வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்சிருந்தும் கூட இந்நிலை மெஸ்ஸிக்கு.
அதைத் தொடர்ந்து 2008இல் அர்ஜெண்டினா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இறங்கியபோது மெஸ்ஸி அர்ஜெண்டினாவுக்காக விளையாடக் கூடாதென்று ‘பார்சலோனா க்ளப்’ எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு வகையாகப் போராடி எப்படியோ கடைசியாக மெஸ்ஸி ஆடலாம் என அனுமதி கிடைத்தது. ப்ரேசிலை 3-0 என்று அரை இறுதியில் வீழ்த்திய பின்னர் இறுதிப் போட்டியில் நைஜீரியாவுக்கெதிராக அர்ஜெண்டினா அடித்த ஒற்றை கோலிற்குப் பின்னால் இருந்தது மெஸ்ஸியின் மந்திரக் கால் அளந்து வழங்கிய உதவிதான். அதுதான் அணித்தலைவனாக மெஸ்ஸி தன் நாட்டிற்கு வாங்கித் தந்த முதல் வெற்றி.
இரண்டு முறை தொடர்ந்து ‘கோப்பா அமெரிக்கா’ கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அர்ஜெண்டினாவை அழைத்துச் சென்றாலும் இரண்டாம் முறை, சிலியிடம் ‘பெனால்ட்டி’ வழியாகத் தோல்வியைத் தழுவ வேண்டி வந்தபோது ஒட்டு மொத்த அர்ஜெண்டினாவும் மெஸ்ஸியைக் கழுவேற்றத் தயாரானது.
போட்டியின் மிகச்சிறந்த கால்பந்தாட்டக்காரன் விருது கிடைத்தாலுமே கூட வெற்றியை நழுவ விட்டது மிகப்பெரும் விவாதத்தை உருவாக்கியது. மனம் வெதும்பிப் போன மெஸ்ஸி, “இனி நான் அர்ஜெண்டினாவு க்காக ஆடப் போவதில்லை” என்று அறிவித்தார்.
அதன் பின்னர்தான் தங்க முட்டையிடும் வாத்தை அறுக்க நினைத்து விட்டோமே என்று அர்ஜெண்டினாக்காரர்களின் மர மண்டையில் விளக்கு எரிந்தது. ” போய் விடாதே லியோ” என்ற பதாகைகளுடன் மெஸ்ஸிக்கான ஆதரவு நிலை அர்ஜெண்டினா முழுக்க ஓர் இயக்கமாகக் கொண்டாடப்பட்டது.
“கால்பந்தை நேசிக்கும் இந்தத் தேசத்திற்கு இறைவன் அளித்த அருட்கொடையான மெஸ்ஸியை காப்பாற்ற வேண்டியது நம் கடமை” என்று அறிவித்தார் அர்ஜெண்டினாவின் அதிபரான மௌரிஸியோ. ஒருபடி மேலே போய், அர்ஜெண்டினாவின் தலைநகரான ‘ப்யூனஸ் அயர்ஸின்’ மேயர், மெஸ்ஸியின் சிலையைத் திறந்து வைத்தார்.
“உன்னை விட்டால் எங்களுக்கு யாருமில்லை” என்று ஒட்டுமொத்த அர்ஜெண்டினாவும் மீண்டும் கதறியதால் 2018இல் உலகக் கோப்பைப் போட்டிகளின் தகுதிச் சுற்றில் அர்ஜெண்டினாவுக்காக ஆடுவதற்கு மனமிரங்கினார் மெஸ்ஸி. அந்த மனமாற்றம் வீண் போகவில்லை என்பதை இந்த உலகக் கோப்பை நிரூபித்திருக்கிறது
2018 உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் மந்திரச் செயல்பாடுகள் ஏதும் பலனளிக்கவில்லை. க்ரோஷியாவிடம் 0-3 என்று தோற்றுப் போனது அர்ஜெண்டினா. மீண்டும் மெஸ்ஸியை நோக்கி விமர்சன அம்புகள் ஏவப்பட்டபோது, “மெஸ்ஸி ஓர் அற்புதமான ஆட்டக்காரன். ஆனால் அவன் மட்டுமே எப்போதும் எல்லாவற்றையும் தனியே செய்ய முடியாது” என்று அந்தத் தோல்விக்கு மீண்டும் மெஸ்ஸியைக் குற்றம் சாட்டியவர்களுக்கெதிராக அர்ஜெண்டினாவின் பயிற்சியாளர் களமிறங்கினார். ஆனால் கத்தரில் 2022இல் நடந்த உலகக் கோப்பையில் அரை இறுதியில் க்ரோஷியாவை வீழ்த்தி கவித்துவ நியாயம் தேடிக் கொண்டது மெஸ்ஸியின் அர்ஜெண்டினா.
உண்மையில் கால்பந்தாட்டம் தனிநபர் திறமை சார்ந்தது மட்டுமல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. ஒரேயோர் ஆட்டக்காரனென்றால் அவனை எதிராளிகளால் எளிதில் அடையாளம் கண்டு ஆடவிடாமல் செய்து விட இயலும். எனவே மெஸ்ஸியின் அபாரத் திறமை க்கும், வேகத்திற்கும், மைதானத்தை அவதானிக்கும் கூர்மதிக்கும் இணையாக ஆட ஆட்கள் இல்லாமல் அர்ஜெண்டினா அவதியுற்றபோதும் சிலுவைகளைச் சுமந்தே வாழ வேண்டிய சூழல் இருந்தது மெஸ்ஸிக்கு.
என்றேனும் தன் நாட்டிற்காக கோப்பா அமெரிக்கக் கோப்பையையேனும் வென்று தர வேண்டுமென்ற மெஸ்ஸியின் கனவு 2021 இல் தனது பரமஎதிரிகளான பிரேசிலை 1-0 என்ற கணக்கில் தோற்கடித்தபோது நிறைவேறியது. எனவே, 2022 கத்தரில் நடைபெற்ற உலகக்கோப்பையை, மெஸ்ஸியின் அணி வெல்லும் என்ற எண்ணம் அர்ஜெண்டினாவில் மீண்டும் விதைக்கப்பட்டது. அதாவது மெஸ்ஸியின் தோள்களில் மீண்டும் எதிர்பார்ப்புகளின் அதிபாரம்.
தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் தோற்றபோது மீண்டும் மெஸ்ஸியின் கணக்கில் சிகப்பு மை கொண்டு குறிப்புகள் எழுதத் தயாரெடுத்தனர். ஆனால் தேர்ந்த ஆட்டக்காரனின் நிதானம், அசுரப் பாய்ச்சலின்போதும் கூட கால்களை விட்டு இரண்டு அங்குலம் கூட பந்து நகர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் கட்டுப்பாடு, ஆடுகளனை ஒற்றைப் பார்வையில் அவதானிக்கும் ஆற்றல், எதிராளிகளுக்குப் போக்குக் காட்டிப் பந்தை வெட்டியாடும் திறமையென்று மெஸ்ஸியென்ற உன்னத ஆட்டக்காரனின் நேர்த்தி வெளிப்பட்ட உலகக் கோப்பையாக இது மாற அந்தத் தோல்வியே காரணமானது.
பல கோடி கால்பந்தாட்ட ரசிகர்களின் உள்ளங்களை தனது அபாரமான ஆட்டத்திறன் மூலம் வென்று விட்ட மெஸ்ஸிக்கு, உலகக் கோப்பை வெற்றி அவரது கிரீடத்தில் இன்னொரு சிறகு.
கால்பந்தாட்டத்தில் தொடர்ந்து சுமார் 15 ஆண்டுகள் உடலைப் பேணி திறனைப் பேணுவது என்பது மிகக் கடினம். மெசியும் உடலைப் பேணுதலில் ஒழுக்கம் மிகுத்தவர். மெசியின் தனிப்பட்ட ஒழுக்கத்தை உலகமே உயர்வாகப் பேசும். அந்த வகையில் இக்கால இளைஞர்களுக்கு சிறப்பான முன்மாதிரியும் கூட இந்த ‘லியோ’னல் மெஸ்ஸி.
ஐரோப்பிய கால் பந்தாட்டக் க்ளப்பிலிருந்து விலகி அமெரிக்காவில் இன்டர் மியாமி க்ளப்பிற்காக ஆண்டிற்கு 60 மில்லியன் டாலர்கள் ஊதியமாகப் பெற்று ஆடுகிறார் மெஸ்ஸி. பத்து ஆட்டங்களிலிருந்து ஆறு வெற்றிகளைப் பெற்று இதுநாள் வரை ‘லீக் கோப்பை ட்ராபி’ சரித்திரத்தில், இதுவரை வெற்றி கண்டறியாத இன்டர்மியாமிக்கு வெற்றியின் சுவையை அறியத் தந்திருக்கிறார் மெஸ்ஸி. தொட்டதெல்லாம் துலங்கும் என்று சொல்வதுண்டு. ஆனால், தன் கால்பட்டதெல்லாம் துலங்குமென்று உலகுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் மெஸ்ஸி.
கால் பந்தாட்டத்தில் வெல்வதற்கு இனி எந்த விருதுமே மீதமில்லை என்ற நிலையில், “பேலன் தி ஓர்” விருதினை எட்டாவது முறையாக வென்றிருக்கிறார் லியோ. “பேலன் தி ஓர்” என்பது சிறந்த கால்பந்தாட்டக்காரர்களுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. இந்த உயரத்தை உடனடியாக எட்டுமளவுக்கு எவரும் இல்லையென்பதிலிருந்தே இந்த ‘லியோ’னல் மெஸ்ஸியின் ஆதிக்கம் தெளிவாகும். வெகுவாகக் கொண்டாடப்பட்ட அல்லது மெஸ்ஸியோடு எப்போதும் ஒப்பிடப்படுகிற போர்ச்சுக்கல்லின் ரொனால்டோவே 5 முறைக்கு மேல் இதனைப் பெற முடியவில்லை.
இனி இவன் இவ்வளவுதான் என்று உடனிருப்பவர்களே உதறித்தள்ளும் சூழலில் இருந்து மீண்டுவர அபார மனபலம் தேவை. மிகப் பெரும் அழுத்தமும் எதிர்பார்ப்புகளும் தரும் பாரம் வேறு. எல்லாவற்றையும் மிகைப்பவனே அதிநாயகனாகிறான்.
தொடர்ச்சியாக மூன்று கோப்பைகளை வென்றதன் மூலம் புதிய சாதனையை அர்ஜென்டினாவுக்காக நிகழ்த்தியிருக்கும் லியோனல் மெஸ்ஸி நம் காலத்தின் ஓர் அதிநாயகன் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.