இதன்போது பைகளில் வைத்து பராமரித்து உற்பத்தி செய்யக்கூடிய இயற்கை முறையில் உரங்களை இட்டு உருவாக்கிய நாற்றுக்களும் அவற்றுக்குரிய பைகளும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரப்படுகின்றன.
“நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள இக்காலகட்டத்தில், மக்கள் அநாவசியமாக வெளியில் திரிவதை விட்டு விட்டு, வீட்டிலே இருந்து சுயமாக வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கைகளை, இயற்கை முறையில் மேற்கொண்டு, பயனடைய வேண்டும். இச்செயற்பாட்டை பயனாளிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளும் பட்சத்தில், நாம் நேரடியாக வீடு வீடாகச் சென்று, பார்வையிட்டதன் பின்னர் மேலும் அவர்களின் முயற்சிகளுக்கு ஏற்ப ஆடு, மாடு, கோழி, உள்ளிட்ட மேலதிக உதவித் திட்டங்களையும் வழங்கவுள்ளோம்” என பசுமை இல்லத்தின் தலைவர் ப.கோணேஸ்வரன் தெரிவிக்கின்றார்.
“பிறரிடம் கையேந்தும் நிலையிலிருந்து எமது மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காகத்தான் நாம் வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள 8 மாவட்டங்களிலும் பசுமை இல்லம் எனும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எமது இச்செயற்றிட்டத்தின் மூலம் மக்களுக்கு பயன் தரும் மா, மாதுளை, மற்றும் கத்தரி, மிளகாய், கமுகு, கறிமிளகாய், வெண்டி, உள்ளிட்ட மரக்கறிப் பயிர் கன்றுகளை வளங்கி வருகின்றோம்.
இலங்கையிலே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாவட்டங்களாக மட்டக்களப்பு மாவட்டமும் கிளிநொச்சி மாவட்டமும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை எவ்வாறு வாழ்வாதார ரீதியாக உயர்த்துவது என்ற கேள்வி எங்களிடமிருந்து எழுந்தது. அதற்கிணங்க நாம் திட்ட வரைபுகளை எழுதி, சுவிஸ் நாட்டிலே வாழ்கின்ற எமது உறவுகளிடம் கையளித்ததன் பெயரில் எமக்கு அவர்கள் இத்திட்டத்திற்கு உதவிகளை நல்கி வருகின்றார்கள். அந்த வகையில்தான் பசுமை இல்லத்தினூடாக வடக்கு, கிழக்கு முழுவதும் எமது மக்களை தற்காப்பு பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பவதற்கு நாம் செயற்பட்டுக் கொண்டு வருகின்றோம்.
பசுமை இல்லத்தின் கீழ் கிராமங்கள் தோறும் பசுமை கிராமியக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வழங்கப்படுகின்ற பயிர் கன்றுகளையும் கிராமங்களையும் நன்கு அவதானித்து கண்காணிக்கப்பட்டும் வரப்படுகின்றன. அந்த வகையில் பசுமை இல்லத்தின் செயற்பாடுகள் முதலிடத்தில் கிளிநொச்சி மாவட்டமும் இரண்டாவது இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. நாம் இவ்வாறு வீடுகளிலே பைகளில் வைத்து தோட்டங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு பண பரிசுகளையும், மற்றும், கோழி, ஆடு, மாடு, உள்ளிட்ட ஏனைய வாழ்வாதார உதவித்திட்டங்களையும் எதிர்காலத்தில் வழங்கவுள்ளோம்.
எமது செயற்பாடுளைத் தட்டிக் கொடுப்பதற்கு யாருமில்லை. வறுமையில் குடும்பமே இறந்து விட்டது என்றால் ஊடகங்கள் வந்து குவிந்துவிடும், வாழ்வாதார ரீதியாக நாம் எமது மக்களை தற்காப்பு பொருளாதார ரீதியாக மேற்கொள்ளும் உதவிகளுக்கு உந்துசக்தியளிக்க ஊடகங்களோ வேறு யாரும் உதவுவதில்லை.
அண்மையில் கிளிநொச்சியில் ஒரு தாய் தனது 3 பிள்ளைகளை கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் இடம்பெற்றது. இதற்கு காரணம் வறுமை. மட்டக்களப்பு மாவட்டத்திலும், அண்மைக்காலமாக நுண்டன் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இதனால் பலர் தற்கொலை செய்திருந்தார்கள். எமது பசுமை இல்லச் செயற்பாடுகளுக்கு அரச நிறுவனங்களும் பொதுமக்களும் ஆதரவு வழங்கினால் நுண்கடன் எனும் கொடிய நோயை இல்லாதொழித்துவிடலாம். இந்த நுண்கடன் எமது மக்கள் மீதும், எமது மண் மீதும் திணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நுண்கடன்களால் எமது மக்களை மீண்டும், மீண்டும் வறுமைக்குட்படுத்தி, அடிமையாக்குகின்ற நிலமைதான் ஏற்படுகின்றன.
எனவே நாம் வழங்கி வரும் ஒரு பையில் நடப்படுகின்ற பயிரிலிருந்து 10 கிலோகிராம் வரையில் விளைபொருட்களைப் பறிக்கக் கூடிய கத்தரி, மிளகாய், கறிமிளகாய், உள்ளிட்ட பல பயிர் கன்றுகரை நாம் வழங்கி வருகின்றோம். அதிலிருந்து மக்கள் தமது உணவுக்காக எடுத்துக் கொள்வதை விடுத்து ஏனையவற்றை விற்பனை செய்தும் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியும். அதிலிருந்து கிடைக்கும் சிறிய வருமானத்தை சேமியுங்கள்; மாறாக நுண்கடன்களைப் எடுக்க வேண்டாம், நுண்கடங்கள் இரத்தம் குடிக்கும் அட்டையைப் போல் மக்களை உறிஞ்சிவிடும். அதனை மக்கள் விளங்கிச் செயற்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என பசுமை இல்லத்தின் வடக்கு கிழக்கு இணைப்பானர் க.வினோத்குமார் தெரிவிக்கின்றார்.
வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு உதவுவதற்காக பல நிதிநிறுவனங்களும் கம்பனிகளும் மக்கள் மத்தியில் குழுக்களாகவும் நேரடியாகவும், கடனுதவிகளை சுயதொழில்களுக்காக வழங்கி வந்தாலும், அதனைப் பெற்று சிலர் நன்மையடைகின்ற போதிலும், பெரும்பாலான மக்கள் அக்கடனை மீளச் செலுத்த முடியாத சூழலால் தற்கொலை வரைக்கும் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் பசுமை இல்லத்தின் செய்றபாடுகள் வரவேற்கத்தக்கதாகும்.
நமது சமுதாயம் விவசாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகும். நானும் விவசாயப் பீட மாணவி. வேளாண்மை, தாவரங்கள், மரங்கள் வளர்த்தால்தான் இனிமேல் இயற்கையில் நின்று பிடிக்கலாம் என்ற எண்ணக்கரு சமுதாயத்தில் உருவெடுத்து விட்டது.
ஆறுமாதங்களுக்கு ஒரு தடவை பெரிய அளவில் வயற்காணி உள்ளவர்கள் வேளாண்மை செய்துவந்தாலும், வீடுகளிலுள்ள சிறிய நிலப்பரப்புகளில் பைகளில் தானியங்களை இட்டு வீட்டுத் தோட்டங்கள் செய்து குடும்ப வருமானத்தோடு, ஒருபகுதி உணவுத் தேவையையும் நிவர்த்தி செய்யலாம்.
பசுமை இல்லத்தின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும். இந்த இல்லத்தினால் வழங்கப்படும் பயிற் கன்றுகளை வைத்து மக்கள் நன்மையடைய வேண்டும். வழங்கப்பட்டுவரும் பயிற் கன்றுகள் உடன் பலன் தரக்கூடியதாக இல்லாவிட்டாலும், அதனுள் ஊடுபயிற் செய்கைகளையும் மக்கள் மேற்கொள்ள வேண்டும்.
இப்பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் உள்ளன. அதனால் பயிர்களும் நாசமடைகின்றன. யானை வேலிகள் அமைக்கும் செயற்பாடுகளும், முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே பயிர்கன்றுகளிலிருந்து விளைவைப் பெற்று வறுமையைக் குறைப்பதற்கு மக்கள் முயற்சி எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தெரிவிக்கின்றார்.
மேற்படி துறைசார்ந்தவர்கள் தெரிவித்தது போன்று பொதுமக்களும் வறுமை, வறுமை, என முடங்கிக்கிடக்காமல், தற்கால கொரோனா சூழலுக்கு மத்தியில் தத்தமது வீடுகளில் வீட்டுத் தோட்டங்களையும், அல்லது பசுமை இல்லம் கிராமங்கள் தோறும் வழங்கி வரும் பயிர்கன்றுகளையும் பெற்று வீடுகளிலே சிறிய சிறிய தோட்டங்கள் வைத்து அதிலிருந்து உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, குடும்ப பொருளாதாரத்தையும் மேபடுத்துவதற்கு அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
வெளியில் மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் ஓடி ஓடி வேலை செய்து கொவிட் – 19 தொற்றுக்களைப் பெற்று நோயாளியாகாமல் தற்காலத்திற்கு ஏற்றாற்போல் அனைவரும் முடிந்தவரையில் வீடுகளிலே இருந்துகொண்டு இயற்கை உரங்களை இட்டு வீட்டுத் தோட்டங்களைச் செய்து ஆரோக்கியமாக வாழ்ந்தால் நாடும் ஆரோக்கிமாக மிளிரும் என்பதோ, இப்பசுமை இல்லத்தின் செயற்பாடுகளை வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து வீடுகளிலும் மிளிரச் செய்வதற்கு ஏனை புலம் பெயர் அமைப்புக்களும், தனவந்தர்களும், கைகொடுத்து உதவும் பட்சத்தில் அது மேலும் விஸ்த்தீரணம் பெரும் எனலாம்.