வல்லாதிக்க நாடுகளின் புதிய ஆயுதம்!


இன்று உலகின் முக்கியமான நாடுகள் எல்லாம் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதிலும், அவற்றை போட்டி போட்டுக்கொண்டு விநியோகிப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. ஆனால் அந்த விநியோகத்தில் நேர்மை நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. தடுப்பூசிகள் தயாரிக்கும் நாடுகளும் அவற்றின் பெயர்களும்; வருமாறு:
அமெரிக்கத் தயாரிப்பு Moderna, அமெரிக்கா – ஜெர்மனி கூட்டுத் தயாரிப்பு Pfizer/BioNTech , பிரித்தானியா – சுவீடன் கூட்டுத் தயாரிப்பு – Oxford/AstraZeneca, சீனத் தயாரிப்பு Sinopharm/Beijing, Sinopharm/Wuhan, CanSino and Sinovac ரஸ்யத் தயாரிப்பு Sputnic V, EpiVacCorona, இந்தியத் தயாரிப்பு Covaxin.

இந்தத் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு பெப்ருவரி 21 வரை சுமார் 98 நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. இவற்றில் சுமார் 85 நாடுகள் மேற்குலகத் தயாரிப்புகளுக்கும், 16 நாடுகள் சீனத் தயாரிப்புகளுக்கும், 9 நாடுகள் ரஸ்யத் தயாரிப்புகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனால் இந்தத் தடுப்பூசியைப் பெறுவதில் மிகவும் ஏற்றத்தாழ்வான நிலையே காணப்படுகின்றது. அதாவது, பணக்கார நாடுகளான அமெரிக்கா, கனடா, மற்றும் 10 ஐரோப்பிய நாடுகள் மொத்த தடுப்பூசி உற்பத்தியில் 75 சதவீதமானவற்றைப் பெற்றிருக்க, சுமார் 130 வறிய மற்றும் நடுத்தர நாடுகள் இதுவரை ஒரு தடுப்பூசியைத் தன்னும் பெறவில்லை.

இந்தப் பணக்கார நாடுகள் தமது தேவைக்கும் அதிகமாக தடுப்பூசியைப் பெற்றுப் பதுக்கி வைத்திருக்கின்றன. அது பற்றிய புள்ளி விபரம் இதோ-

  • கனடாவின் சனத்தொகை 37.7 மில்லியன். ஆனால் அது தனது பிரசைகள் ஒவ்வொருவருக்கும் 9 தடவைகள் தடுப்பூசி ஏற்றக்கூடிய அளவுக்கு 362 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
  • 450 மில்லியன் கொண்ட ஐரோப்பிய யூனியன் தனது பிரசைகள் ஒவ்வொருவருக்கும் 4 முறை ஏற்றக்கூடிய அளவுக்கு 1.85 பில்லியன் தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
  • 331 மில்லியன் சனத்தொகை கொண்ட அமெரிக்கா, தனது ஒவ்வொரு பிரசைக்கும் 4 தடவைகள் ஏற்றக்கூடிய அளவுக்கு 1.21 பில்லியன் தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
  • 25.5 மில்லியன் சனத்தொகை கொண்ட ஆஸ்திரேலியா தனது பிரசைகளுக்கு 4.5 தடவைகள் ஏற்றக்கூடிய அளவுக்கு 115 மில்லியன் தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
  • அதேவேளை, 1.32 பில்லியன் சனத்தொகை கொண்ட ஆபிரிக்க யூனியன் அங்கத்துவ நாடுகளுக்கு கிடைக்கவுள்ள 270 மில்லியன் தடுப்பூசிகள் மொத்த சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு மட்டுமே ஏற்றப் போதுமானவை.
  • மறுபக்கத்தில், ஈரான் மீது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் விதித்துள்ள பொருளாதாரத் தடையால், அந்த நாடு சர்வதேச வர்த்தகத்துக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலர் இன்மையால் தடுப்பூசியைப் பெற முடியாத நிலையில் உள்ளது.
    இந்த நிலைமை சம்பந்தமாக அண்மையில் தடுப்பூசி பற்றி ஆராய்வதற்காகக் கூடிய கூட்டத்தில் பேசிய ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்ரெர்றெஸ் (Antonio Guterres), “தடுப்பூசி பங்கிடப்பட்ட முறை அநீதியானதும், முறையற்றதும், பண்பாடற்றதும்” எனச் சாடியிருக்கிறார்.
    பணக்கார மேற்கு நாடுகள் தடுப்பூசிகளை தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்திருப்பதற்கான காரணங்கள் இரண்டு. முதல் காரணம், மேலதிக தடுப்பூசிகளைப் பின்னர் வறிய நாடுகளுக்கு கூடுதலான விலைக்கு விற்று கொள்ளை இலாபம் ஈட்டுவது (தவிச்ச முயல் அடிப்பது), இரண்டாவது காரணம், இந்தத் தடுப்பூசியை சில நாடுகளை அடிபணிய வைக்கும் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது.
    உலகம் விழிப்படைந்து வருவதால் மேற்கத்தைய ஏகாதிபத்திய நாடுகளின் பழைய முறைகள் வலுவிழந்து வருகின்றன. எனவே, அவை இப்பொழுது இந்த கொவிட் தடுப்பூசியையும் தமது ஏகாதிபத்திய, தேசியவாத, இனவாத, நிறவாதக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்கான முறைகளில் ஒன்றாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றன.