வாழைப்பழ நாடுகள் (பகுதி-2)

இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள வாழைப்பழ வர்த்தகமானது 1871 இல் கொஸ்ரா றீக்காவில் அமைக்கப்பட்ட புகையிரதப் பாதையோடுதான் தொடங்கியது. அமெரிக்கர்களால் இப் பாதை நிர்மாணிக்கப்பட்டபோது நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கர்களுக்கு அது பொருட்டாக இருக்கவில்லை. இந்த நீண்ட புகையிரதப் பாதையின் இருமருங்கிலும் வாழைப் பயிர்ச் செய்கையை செய்யும் திட்டத்தை சாத்தியமாக்குவதுதான் அவர்களின் குறியாக இருந்தது.

இந்தப் பாதையினூடே வர்த்தகம் தொடங்கியதும் வாழைப்பழம் அமெரிக்காவுக்கு இலகுவாக சென்றடையக்கூடிய போக்குவரத்து வசதியை உருவாக்கியது. 1880 களில் சில கம்பனிகள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டபோதும், 1899 இல் UFCO (United Fruit Comapy) உலகின் மிகப் பெரிய வாழைப்பழ உற்பத்தி கம்பனியாக இருந்தது. இக் கம்பனியானது இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் வாழைப்பழ உற்பத்தியை செய்தது. கொலம்பியா, கொஸ்ரா றீக்கா, கியூபா, யமெய்க்கா, நிக்கரகுவா, பனாமா போன்ற நாடுகளிலும் டொமினிக்கன் குடியரசின் தலைநகரமான Santo Domingo இலும் வியாபித்திருந்தது. 180 கி.மீற் நீளம் கொண்ட புகையிரதப் பாதையானது மேற்கூறிய வாழை உற்பத்திப் பிரதேசங்களையும் துறைமுகங்களையும் இணைத்து வைத்திருந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (அப்போதைய சனத்தொகை 70 மில்லியன்) அமெரிக்க மக்கள் சராசரியாக வருடத்துக்கு 16 மில்லியன் வாழைக் குலைகளை உட்கொண்டனர். அதனால் கம்பனி பெரும் இலாபமடைந்தது.

இந்த UFCO கம்பனியானது வாழைப்பழ உற்பத்தியை மையமாக வைத்து உலக நாடுகள் சிலவற்றில் பெருமளவான நிலங்களை வாங்கிக் கொண்டது. உள்ளுர் மக்களிடமிருந்து களவாடப்பட்ட நிலங்களும் இதுள் அடக்கம். UFCO வின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானவை குவாத்தமாலாவும் கொலம்பியாவும் ஆகும்.

1901 இல் குவாத்தமாலாவின் சர்வாதிகாரி Manuel Estrada Cabrera குவாத்தமாலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அஞ்சல் போக்குவரத்துக்கு அனுமதியை UFCO வுக்கு வழங்கினார்.

இவ்வாறாகத்தான் UFCO குவாத்தமாலாவுக்குள் காலூன்றியது. அதன் பிறகு இந்தக் கம்பனியின் மேற்பார்வைக்குக் கீழ் குவாத்தமாலா வரத் தொடங்கியது. இந்த சர்வாதிகாரி (Cabrera) யானவர் UFCO வின் பொம்மை ஆட்சியாளராக இருந்தார். UFCO வின் துணைநிறுவனமாக “குவாத்தமாலா புகையிரத வழித்தட கம்பனி” உருவாகியது. இதற்கு 40 மில்லியன் டொலர் முதலீடாகப் போடப்பட்டது.

UFCO வானது குவாத்தமாலாவின் போக்குவரத்தை மட்டுமல்ல, தொலைத் தொடர்பையும் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது. குவாத்தமாலாவின் Puerto Barrios. துறைமுகத்தினூடாக ஏற்றுமதியாகும் அல்லது இறக்குமதியாகும் சரக்குகளுக்கு UFCO வரி விதித்தது. அதுமட்டுமல்ல, குவாத்தமாலாவின் எல்லா வரிவிதிப்புகளிலிருந்தும் 99 வருடங்களுக்கு தமக்கு விலக்களிக்கும் ஒப்பந்தத்தை சர்வாதிகரி Cabrera வுடன் செய்துவிட்டிருந்தது.

1951 இல் Jacobo Arbenz, மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதுவரை 2.2 வீதமானவர்கள் 70 வீதமான நிலத்தை உடமையாக்கி வைத்திருந்தனர். குவாத்தமாலா சனத்தொகையின் 90 வீதமான மக்களுக்கு 10 வீதமான நிலமே இருந்தது. அவர்களில் பெரும் பகுதியினர் பூர்வ குடிகள்.

பெரும் நிலச்சுவாந்தர்களின் பெருமளவு நிலம் பாவிக்கப்படாமலே இருந்தது. Jacobo Arbenz நிலப் பங்கீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பாவனையற்றிருந்த நிலத்தில் 90 வீதமானவற்றை விவசாய நிலமாக மாற்றினார். இது UFCO வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில் பாவனையில்லாதிருந்த நிலப் பரப்பில் பெரும்பாலானதும் இக் கம்பனிக்கு சொந்தமானவையாக இருந்தன.

UFCO அமெரிக்க அரசின் உதவியை நாடியது. அமெரிக்க அரசும் UFCO உம் அமெரிக்க மக்களிடையே பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. அதாவது குவாத்தமாலா “கம்யூனிச அரசு” என்றும், “சோவியத் மேற்பார்வை அரசு” எனவும் அப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. அதனால் அந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்ற கருத்தியலை உருவாக்கியது.

அமெரிக்க அரசும் சிஐஏ யும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி Jacobo Arbenz அவர்களை 1954 இல் ஒரு சதிப்புரட்சி மூலம் வீழ்த்தியது.
தனது பொம்மை ஜனாதிபதியாக தீவிர வலதுசாரியும் சர்வாதிகாரியுமான Carlos Castillo Armas இனை அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது. இதுவே குவாத்தமாலாவின் இராணுவ சர்வாதிகார வரலாற்றின் தொடக்கமாக இருந்தது. அமெரிக்காவின் நிழலில் 30 வருடங்களாக சில சர்வாதிகாரிகள் மாறிமாறி ஆட்சிசெய்தார்கள். இதன் விளைவாக இரண்டு இலட்சம் பேர் உள்நாட்டு யுத்தத்தில் மரணமடைந்தார்கள்.

(தொடரும்)