அந்தளவுக்கு மத்திய வர்க்கத்தினரும் அதற்கு கீழ் மட்டத்தினரும் இப்போது பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறார்கள். அந்த வகையில் கொரோனா ஓரளவுக்கு அரசாங்கத்துக்கு உதவி வருகிறது.
கொவிட் தொற்றின் நிலைமை மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. நோய் ஏற்பட்டால் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக செல்ல ஒரு மருத்துவமனை இல்லாத நிலைமை உருவாகியிருக்கிறது. மருத்துவமனைகளில் கொவிட் விடுதிகள் (வாட்டு) நிரம்பி இருக்கின்றன.
மருத்துவமனைகளில் ஏற்பட்டு இருக்கும் இட நெருக்கடியின் காரணமாக நோய் ஏற்பட்டவர்கள் அதனை உரிய சுகாதார அதிகாரகளிடம் தெரிவித்தாலும் அவர்களை மருத்துவமனைகளில் உடனடியாக சேர்க்க முடியாத நிலைமை நிலவுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதலாவது கொவிட் நோயாளரை கண்டறிந்தலில் இருந்து சுமார் 10 நோயாளர்கள் கண்டறியப்பட்ட உடன், அதாவது ஐந்து நாட்களில் ஒரு மாதத்துக்கு நாட்டை முடக்கிய இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள், இன்று நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 4,500 நோயாளர்கள் இனங்காணப்பட்டு, 200க்கு மேற்பட்டோர் அந்நோயால் உயிரிழக்கும் போதும் நாட்டை முடக்க முடியாது என்று கூறும் அளவுக்கு பொருளாதாரமும் மோசமாக உள்ளது.
எங்கு பார்த்தாலும் கொவிட் நோயாளர்களை காணக்கூடிய நிலைமை இருப்பதால் மக்கள் பீதியில் வாழ வேண்டியதாக உள்ளது. ஒவ்வொரு நாள் காலையிலும் பத்திரிகைகளைப் பார்த்தால் நோயாளர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையுமே முக்கிய செய்திகளாக இருக்கினறன. இரவில் தொலைக் காட்சிச் செய்திகளைகப் பார்த்தலும் அதே நிலைமை தான். எனவே மக்களின் கவனம் முழுவதும் அதன் பால் ஈர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மிகத் தெளிவாக தெரிய வந்திருக்கும்.
கொவிட் தொற்றின் காரணமாகவும் அரச தலைவர்களின் தவறான நிர்வாக மற்றும் பொருளாதார கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாகவும் மக்கள் இரண்டு விதமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு புறம் அவர்களது வருமானம் வெகுவாக குறைந்து வருகிறது. அதேவேளை, உயரும் விலைவாசியும் மக்களை வதைத்து வருகிறது.
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாத போதிலும் அவர்களது மேலதிக நேர வேலை குறைக்கப்பட்டுள்ளது. பல ஊழியர்களுக்கு அடிப்படைய சம்பளமாக சிறியதொர் தொகையே கிடைக்கிறது. அவர்கள் மேலதிக நேர வேலையின் மூலமே ஓரளவு சமாளித்து வந்தார்கள்.
தனியார் நிறுவனங்களில் பலவற்றில் ஊழியர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. நிரந்தரமற்ற ஊழியர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம் 25 சதவீதம், 50 சதவீதம் என குறைக்கபப்ட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலித் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலற்றவர்கள், சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் அடிக்கடி நாடு முடக்கப்படவதன் மூலமும் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாகவும் தொழில் வழங்குநர்களின் தொழில்கள் முறையற்றதாக இருப்பதாலும் செய்வதறியாது இருக்கிறார்கள்.
கொவிட் நோயையும் வருமான வழியாக்கிக் கொண்டவர்கள் தவிர்ந்த கோடீஷ்வரர்கள் முதல் பிச்சைக்காரர் வரை சகலரினதும் வருமானம் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வேகமாக குறைந்து வருகிறது. எனினும் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு மட்டத்துக்கு மேற்பட்டவர்களுக்கு வருமானம் குறைந்தாலும் வாழ்வது பிரச்சினையாக இல்லை. அந்த மட்டத்துக்கு குறைந்தவர்களுக்கு வாழ்க்கையே பெரும் போராட்டமாகி இருக்கிறது. இரசாயன உரத் தடையால் சில பிரதேசங்களில் விவசாயிகளும் வருமானத்தை முற்றாக இழந்துள்ளனர்.
இந்த நிலையில் தான் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் பயங்கரமாக உயர்கிறது. அரிசியின் விலை ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்ததைப் போல் இருமடங்காகியுள்ளது. சீனியின் விலை தற்போது 220 ரூபாயாக உயர்ந்துள்ளது. மரக்கறி விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அவ்வாறிருக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது மக்கள் மேலும் தியாகங்களை செய்ய வேண்டி வரும் என கூறினார். அத்தோடு அரச ஊழியர்களின் அரை மாத சம்பளத்தை கொவிட் கட்டுப்பாட்டு நிதியத்துக்கு வழங்குமாறு அரசாங்கம் கேட்கப் போவதாக வதந்திகள் பரவின. ஆனால் அரசாங்கம் அதனை மறுத்தது. எனினும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை அந்நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்ய அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். மக்களும் அந்நிதியத்துக்கு அன்பளிப்புக்களை வழங்கத் தூண்டுவதே இதன் நோக்கமாக இருந்திருக்கலாம்.
அமைச்சர்களால் இதனை செய்ய முடியும். ஏனெனில் அவர்கள் பொது மக்களின் பணத்தால் பராமரிக்கபப்டுகிறார்கள். அமைச்சர் ஒருவரை பராமரிக்க அரசாங்கம் மாதமொன்றுக்கு 75 இலட்சம் ரூபாய் செலவிடுவதாக அண்மையில் ஒரு செய்தியில கூறப்பட்டது.
நாட்டில் வெளிநாட்டு செலாவனித் தட்டுப்பாட்டின் காரணமாக அரசாங்கம் கடந்த வருடம் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்தது. இதனால் சில பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு சில தேசிய உற்பத்திப் பொருட்களின் மூலப் பொருள்கள் இறக்குமதி தடைப்பட்டுள்ளதால் அப்பொருட்களும் சந்தையில் குறைவாகவே இருக்கிறது.
இது போன்ற காரணங்களால் அரசாங்கத்துக்கு உடனடியாக சில பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் பல அத்தியாவசிப் பொருட்களின் விலைகள் அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேட்டின காரணமாகவும் உயர் மட்டத்தில் உள்ளவர்களின் ஊழல் காரணமாகவுமே கட்டுக்கடங்காதிருக்கிறது.
உதாரணமாக, வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி வைத்துக் கொண்டு இருப்பதாலேயே அதன் விலை இவ்வாறு உயர்கிறது என அரசாங்கத் தலைவர்களேகூறுகிறார்கள். இதைக் கூறிவிட்டு விலை ஏற்றத்துக்கான தமது பொறுப்பை ஏற்க மறுப்பதாக இருந்தால் நாட்டுக்கு ஓர் அரசாங்கம் தேவையா?
கிழக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் பெரும்பாலான விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வது பொலன்னருவையில் மா பெரும் அரிசி ஆலைகளை நடத்தி வரும் நான்கு வர்த்தகர்கள் என்பது பலருக்கு தெரிந்த விடயம். அவர்கள் எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் அரச தலைவர்களின் நண்பர்களாகவே இருக்கின்றனர். சிலர் அரசியல்வாதிகளாகவும் இருக்கின்றனர்.
இவர்களது நடவடிக்கைகளை முறையாக கண்காணித்து கட்டுப்படுத்தினால் அரிசி விலை செயற்கையாக ஏறாது என்பதும் சந்தை நிலவரத்தை அறிந்த சகலருக்கும் தெரிந்த உண்மை. எனவே அரிசி விலை ஏறுவதன் இரகசியத்தையும் எவராலும் ஊகிக்க முடியும். இது நிர்வாகப் பிரச்சினையேயன்றி பொருளியல் சார்ந்த விடயம் அல்ல.
நவம்பர் மாதமளவில் 90 ரூபாய் மற்றும் 100 ரூபாய்க்கே சந்தையில் சீனி விலை இருந்தது. இந்த விலையைக் குறைப்பதாகக் கூறி அரசாங்கம் அது வரை கிலோ கிராமுக்கு 50 ரூபாவாக இருந்த சீனிக்கான தீர்வையை 25 சதமாகக் குறைத்து ஒரு கிலோ கிராம் 85 ரூபாவுக்கு விற்குமாறு வர்த்தகர்களை பணித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. ஆனால், அந்த தீர்வை சலுகையை பெற்றுக் கொண்ட வர்ததகர்கள் வர்த்தமானியை புறக்கணித்துவிட்டு ஒரு கிலோகிராம் சீனியை 120 ரூபாவுக்கு விற்றனர். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இதனை தடுக்க எதனையும் செய்யவில்லை.
தீர்வை குறைக்கும் போது அரசாங்கத்தின் சில தலைவர்கள் பல ஆயிரம் தொன் சீனியை ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து கப்பலில் ஏற்றியிருந்ததாக மக்கள் விடுதலை முன்னணி அம்பலப்படுத்தியது. எனவே தீர்வை குறைப்பானது சில அரசியல்வாதிகளும் சில வர்த்தகர்களும் கூட்டாக செய்த மோசடி என்றும் அதன் மூலம் அந்த வர்த்தகர்கள் 1,500 கோடி ரூபாய் மேலதிக இலாபத்தை ஈட்டிக் கொண்டதாகவும் அக் கட்சி குற்றஞ்சாட்டியது.
இந்த மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருந்த ஒரே சட்ட ஆயுதமான மேற்கூறப்பட்ட வர்த்தமானியையும் அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் வாபஸ் பெற்றது. இப்போது 85 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சீனி 220 ருபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு கிலோ கிராம் சீனியால் வர்த்தகர்கள் முன்னர் பெற்றதையும் விட 140 ரூபாய் மேலதிக இலாபத்தை அடைகிறார்கள்.
இந்த விலை ஏற்றத்துக்கு சீனித் தட்டுப்பாடோ அல்லது ரூபாயின் பெறுமதி சரிவோ காரணமல்ல என்பதும் நிர்வாக சீர்கேடும் ஊழலுமே காரணம்.