வைரமுத்து கண்டனத்திற்குரியவராகிறார்

இரண்டாவது , பொது வெளியில், இந்திய அளவில் சமகால தமிழ்க்கவிதையின் பிரதிநிதியாகத் தன்னை வெற்றிகரமாக முன்னிறுத்திக்கொண்டது. ஒரு பேச்சுக்காக வைரமுத்துவின் கவிதைகளை நவீன கவிதைகள் என்று ஒப்புக்கொண்டாலும் அவை 50 ஆண்டுகளுக்கு முந்தையவை. 70களின் மிகைஉணர்ச்சி பிரச்சார பாணியிலானவை. அதற்குப்பின் நவீன தமிழ்க்கவிதை வெகுதூரம் வந்து விட்டது. கவிஞராக ஆசைப்பட்டுத் தன் எழுத்துலக வாழ்க்கையை ஆரம்பித்து, பாடலாசிரியராக வளர்ந்து, குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்து அவரும் எதிர்த்திசையில் வெகுதூரம் சென்றுவிட்டார்.

தொடக்கலாலத்திலிருந்தே தமிழ்ச்சமூகம் செய்த பெரும் தவறு பாடலாசிரியர்களைக் கவிஞர்கள் என்று அழைக்க ஆரம்பித்ததுதான். இதன் மூலம் பாடல் எழுதுவதை நான் தகுதி குறைந்ததாக கருதவில்லை. கவிஞர்கள் வேறு. பாடலாசிரியர்கள் வேறு என்று வேறுபடுத்துவது அவசியம் என்பதே.

பாடலாசிரியர்கள் புலவர் மரபைச் சார்ந்தவர்கள். கவிஞர்களைவிட மொழிப்புலமை மிக்கவர்களாக இருப்பார்கள். பாடல்கள் எழுதுவதற்கு புலமை மிக அவசியம். மெட்டு முடியுமுன்னமே வார்த்தைகளைச் செருகிவிடக்கூடியவர்கள்.

கண்ணதாசன், வாலி போன்றவர்கள் அந்தவகையில் அபூர்வமான திறமை சாலிகள். ஆனால் அவர்களுடைய பாடல்கள் தவிர பொதுவெளியில், உரைகளில், எழுத்துக்களில் அவர்களின் கவிதைகள் மேற்கோள்கள் காட்டப்படுவதை நான் கண்டதே இல்லை. அதேபோல் கவிஞர்கள் யாரும் வெற்றிகரமான பாடலாசிரியர்களாகவும் இருந்ததில்லை.

ஆயிரக்கணக்கில் கவிதைகளை எழுதக்கூடிய மனுஷ்யபுத்திரன் ஒரே ஒரு திரைப்பாடல் எழுதி அதுவும் சோபிக்கவில்லை என்பதாக நினைவு. ஒருமுறை கவிஞர் ப்ரான்சிஸ்கிருபாவோடு ஒருவாரம் ஒரு பாடலுக்காக நானும் நண்பர் அனீஸும் போராடினோம். ஏனெனில் கவிஞர்களால் பாத்திரங்களுக்காக சிந்திக்கமுடியாது.

திரைப் பாடல்களின் மூலமாகவே பொருள், புகழ் எல்லாவற்றையும் அடைந்துவிட்ட பாடலாசிரியர்கள் அவ்வாறே அழைக்கப்படுவதில் ஏன் பெருமை கொள்ளக்கூடாது? ஆனால் பாடலாசிரியர்கள் எப்போதும் தங்களைக் கவிஞர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்திருக்கிறார்கள். அல்லது திரைஉலகத்தினர் வழக்கம் போல் பொருந்தாத பட்டங்களை தாராளமாக வழங்கி பாடலாசிரியர்களை கவிஞர்களாக நம்பச் செய்து வந்திருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பழக்கம் கவியரசர், வாலிபக் கவிஞர், மக்கள் கவிஞர், கவிப்பேரரசு, வித்தகக் கவிஞர் என தமிழ்ப் பொதுவெளியில் பாமரர் முதல் படித்தவர்வரை கவிஞர்கள் என்பவர்களாக திரைப் பாடலாசிரியர்களையே கவிஞர்களாகப் பதியவைத்துள்ளது. பாடலாசிரியர்களை கவிஞர்கள் என்றால், வண்ணதாசன், மனுஷ்யபுத்திரன், தேவதச்சன், யவனிகா ஶ்ரீராம் போன்றவர்களை என்னவென்று அழைப்பது?

இதில் மற்ற பாடலாசிரியர்கள் செய்யாத ஒரு விசயம், தொடந்து வைரமுத்து இலக்கியவிருதுகளை நோக்கி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தியவண்ணம் இருப்பவர் என்பதுதான். பாடலாசிரியராக அவர் பெற்ற தேசியவிருதுகளுக்கு அவர் முழுத்தகுதியுடையவர்தான்.

ஆனால் சாகித்ய அகாதமி உள்ளிட்ட விருதுகளை அவர் தன்னுடைய அரசியல் மற்றுமான லாபிகளின் மூலமாகவே பெற்றுவருகிறார். இதேபாணியில் அவர் ஞானபீடம் வரைக்கும் செல்லக்கூடியவர். எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் உரித்தான சொற்ப அங்கீகாரங்களையும் அபகரித்துக்கொள்வதென்பது ஒரு மாபெரும் மோசடியல்லவா?