மெட்ராஸ் பாஷையின் அழகே அதன் வேகமும், எளிமையும்தான். ஆங்கிலம், தெலுங்கு, உருது என இந்த பகுதியில் புழங்கிய அனைத்து மொழிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் பிய்த்து எடுத்து தமிழோடு பிசைந்து உருவாக்கிய கூட்டாஞ்சோறு மொழிதான் மெட்ராஸ் பாஷை எவ்வளவு பெரிய சொற்றொடரையும் அப்படியே நசுக்கி பிசுக்கி ஒற்றைச் சொல்லாய் வார்த்து எடுக்கிற வார்த்தைச் சித்தர்களால் உருவானதுதான் இந்த அழகிய மொழி.
உதாரணத்திற்கு, இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடு என்பதை மெட்ராஸ் பாஷையில் ரத்தினச் சுருக்கமாக இட்டாந்துடு‘ என்று சொல்லிவிடலாம். அதேசமயம் இட்டுக்குனு வா என்பதற்கும் இஸ்துகுனு வா என்பதற்கும் கடலளவு வித்தியாசம் இருக்கிறது. முன்னது அழைத்துக் கொண்டு வருவது, பின்னது இழுத்துக் கொண்டு வருவது.
இந்த வார்த்தை விளையாட்டுகள் தமிழோடு நின்றுவிடுவதில்லை. ஆங்கிலத்தின் பங்களிப்பும் இதில் பெருமளவு இருக்கிறது. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய ரிக்ஷாக்காரர்கள்தான் மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள் உன்னோட படா பேஜாரா பூட்ச்சுபா… என அலுத்துக் கொள்பவர்கள் அதற்குள் ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை, இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல, ரிக்ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள் dont badger me (என்னை நச்சரிக்காதே) என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்கள். வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger-ஐ நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள்.
இவை போக பக்கெட்டு (BUCKET), பாமாயிலு (PALM OIL), பிஸ்கோத்து (BISCUIT), என நிறைய சொற்களை அப்படியே ஆங்கிலத்தில் இருந்தும் எடுத்தாண்டு கொண்டு இருக்கிறார்கள் ஆங்கிலம் மட்டுமின்றி மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில் கலந்திருக்கின்றன.
பஜாரி என்ற சொல் உருது மொழியில் இருந்து உருவானது. உருதுவில் பஜார் என்றால் சந்தை என்று அர்த்தம். இதனால் சந்தைக்கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள். ஆனால் பஜாரன் என்று ஒரு சொல் இல்லை. ஆக இதிலும் ஆணாதிக்கம் இருந்திருக்கிறது என்பதை கவனிக்கவும்.
பேக்கு என்பது கூட உருதுவில் இருந்து வந்ததுதான். பேவ்கூஃப் என்றால் உருது மொழியில் முட்டாள் என்று அர்த்தம். சென்னைவாசிகள் இந்த பேவ்கூஃபைத் தான் சுருக்கி பேக்கு என்று ஆக்கிவிட்டார்கள்.
இப்படி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு மொழியியல் வரலாறே இருக்கிறது. சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை நாடறியச் செய்த பெருமை தமிழ் திரையுலகிற்கு உண்டு. எம்.ஆர். ராதா, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன் தொடங்கி லூஸ் மோகன், கமலஹாசன் வரை பலரும் இந்த பாஷையைப் பேசி இதன் பெருமையை பறைசாற்றி இருக்கிறார்கள் வா வா வாத்யாரே ஊட்டாண்ட.. என்ற மெட்ராஸ் பாஷை பாடல் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் அலறியது.
ஜெயகாந்தன் போன்றவர்கள் இதே பணியை எழுத்து மூலம் செய்திருக்கிறார்கள். ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ பேசிய பல சொற்கள் இன்று வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. ஆனால் இன்றும் அந்த சித்தாள் நமது நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறாள்.
தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அதில் இருக்கும் வேகமும், ஒலிநயமும்தான் அடக் படக் டிமிக் அடிக்கிற டோலு மையா டப்ஸா போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும் அந்த ஓசைநயம் கேட்பவர்களை திக்குமுக்காட வைத்துவிடுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதேபோல எவ்வளவு அரிய கருத்தையும் பாமரனுக்கும் புரியும் வகையில் பந்தி வைக்கவும் இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பது இதன் கூடுதல் பலம். ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும் இன்று பேசப்படும் பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து தற்போது அந்த இடத்தில் ஃபீல் பண்ணி, செக் பண்ணி, டிபன் பண்ணி என நிறைய பண்ணிவிட்டார்கள்.
பகிர்வு – அறிவு பரவல்