‘உண்ணாதவனுக்கு இலை இல்லாத குறை; உண்டவனுக்கோ பாய் இல்லாத குறை’என்று என் அம்மா பழமொழிவதைக் கேட்டிருக்கிறேன்.
சோற்றுக்குப் பிறகுதான், கலை, பொழுதுபோக்கு, ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்.
உலகின் வறுமைக்கான போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. ஒருவேளை உணவோடு
மடியில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு
உறங்குகின்ற எளியமக்கள் கோடானுகோடி.
உணவு, சுகாதாரம், மருந்து, உடை, நீட்டி முடங்க
ஒரு துண்டு நிலம் என்று ஏதுமன்றிப்
பரிதவிக்கிற கூட்டம் கோடானுகோடி.
அவர்கள் மதத்தின் மீதும், கண்டறியாக்
கடவுளின்மீதும் மானசீகமாகத் தோள் சாய்கிறார்கள். கண்மூடி சற்று அயர நினைக்கிறார்கள்.
அவர்கள் துயர்க்காலத்தின் சமாதானமாகக் கருதும் கடவுளை வைத்தே, அவர்கள் சாரும் மதங்களை வைத்தே , மிக மிகச் சாதாரணமானத் தேவைகளைக்கூட அடையமுடியா ஒரு பெருங்கூட்டத்தை பிளக்க நினைப்பதையும், சுரண்ட நினைப்பதையும், பிழைக்க நினைப்பதையும் எப்போதும் தந்திரமாகக் கொண்ட
ஓர் இழிந்தக்கூட்டம் வரலாறில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
அதற்கு எளிதில் இரையாகி விடுகின்றன – மதத்தால் பீடிக்கப்பட்ட மனங்களும், ஒருமித்த சமூகத்திலிருந்து விலகி நிற்கிற மனங்களும்.
எனக்கு ஆச்சர்யம் ! மானுடம் வாழ்க என்று கவி பாடுகிற ஒரு கவிஞனால் எவ்வாறு ஒரு மதத்தின்பால் சார்ந்து நிற்க ஏலுகிறது? சார்ந்து நிற்பதுகூட போகட்டும், எவ்வாறு மாற்றுச் சிந்தனையை இழிவு சொல்லத் தோணுகிறது? மனித விடுதலை, அமைதியான சமூகம் என்று பேசும் ஒரு சிந்தனையாளனால் எவ்விதம் ஒரு மதம் சார்ந்து நியாயப்படுத்த முடிகிறது?
இது அனைவருக்குமான பூமி அல்லவா?
அனைவரின் எண்ணங்களுக்குமான வெளி அல்லவா?
தன் எண்ணத்தைத் திணிக்கவும், தன் புத்தியை அடுத்தவனுக்குப் புகட்டவும் எங்ஙனம் ஒருவனுக்கு மேலாண்மை வருகிறது? அதை நியாயப்படுத்துபவனின் புத்திக்கு என்ன கேடு நேர்ந்தது?
படித்தவன், கல்வி, விஞ்ஞானம், அறிவ எதுவும் சீர்தூக்கிப் பார்க்க உதவவே இல்லை என்றால், இதுகாறும் பூமி கண்ட அகண்ட காலவெளியின் நன்மை என்ன? நாகரிகம் என்கிற கூற்றின் பொருளென்ன?
எனக்கு கமலா தாஸின் வாழ்க்கை ஞாபகம் வருகிறது.
பெண்ணெழுத்து என்பது அண்ணாந்து பார்க்கப்பட்ட சமூகத்தில், அந்தப் புரட்சிக்காரி புதிய சிந்தனைகளை எழுதுகிறாள்.
பெண்ணின் வாழ்க்கையை எழுதுகிறாள்;
பெண்ணின் இதயத்தை எழுதுகிறாள்;
பெண்ணின் காமத்தை எழுதுகிறாள்;
பெண்ணின் தனித்துவத்தை எழுதுகிறாள்.
ஆண் சமூகம் அவளைத் தூற்றுகிறது.
ஆனால் அவள் எழுத்தின் சத்தியமோ
நிராகரிக்க முடியாத சூழலில் அவளை இருத்துகிறது. அறிவாளர்களும், முற்போக்காளர்களும்,
பெண் என்பவள் குருதியாலும் சதையாலுமான
ஒரு சகஜீவிதான் என்று கருதுகிறவர்களும்
அவளைப் போற்றுகிறார்கள்.
அவள் தேடல் எங்கெங்கோ அலைகிறது.
பரந்த சமூகத்தில், மானுடர்க்கிடையில் தேடித் தேடிக் கிடைக்காத அவளுக்கான இடம், அவளை வேறு மதத்துக்குள் நுழையச் சொல்லுகிறது.
பெண் விடுதலைக்கான அத்தனை சாளரங்களும் திறக்கப்படவேண்டுமென்று எழுதிய கரங்கள்
பர்தாவைப் பற்றுகின்றன.
ஹிஜ்ராவை இழுத்துத் தலையைச்
சுற்றிக்கொள்கிறாள் அவள்.
கமலா என்கிற பெண் , இஸ்லாத்தின் வெளியில் ‘எதையோ தேடி’ சுரய்யாவாகப் பெயர் மாறுகிறாள்.
கமலா தாஸைப் போற்றிய பலரும் தூற்றுவோர் பக்கம் அணிசாய்ந்து சுரய்யாவை இழிக்கிறார்கள். உளவியல் விளங்காத பெண்ணியவாதிகள்கூட அவளை பிற்போக்கின் வடிவமாகச் சித்திரிக்கிறார்கள்.
அவளின் பரிணாமங்களில் பரிமாணங்களில்
திடுக்குண்ட ஆண் அறிவுஜீவிகள் மனம்
இன்றுவரை அவளை ஏற்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டே இருக்கிறது.
‘நவீன ஆங்கில இந்தியக் கவிதைகளின் தாய்’ என்று மேற்குலகம் உச்சிமோந்த அந்த இந்திய மகளை பழைமையிலிருந்து மீளமுடியாத – அல்லது சித்தாந்தங்களின் கட்டுகளில் சிக்குண்டு, சுயசிந்தனைகளைக் கண்டு அச்சமுறுகிறவர்கள்
பலரும் கல்லெறிந்தார்கள்.
அவள் மரித்தபின்னரும், கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள்.
அய்யமில்லை, கமலா ஒரு தனித்த பெண்.
மந்தைச் சமூகத்தில் அவர் தன்னை அறிந்துகொள்ள முற்பட்ட புத்திஜீவி. அந்தத் தேடலினூடே, சமூகத்தின் இருண்மைகளைக் கிழித்துக்காட்ட முற்பட்ட
ஓர் எழுத்துப் போராளி.
மதங்களை விமரிசித்ததும் அவர்தான்.
மதத்துள் நுழைந்ததும் அவர்தான்.
பெண்ணியம் பேசியதும் அவர்தான்.
முக்காடிட்டு முகமலர் மறைத்தும் அவர்தான்.
இஸ்லாம் தனக்குப் புகலிடம் தரும்
என்றவரும் அவர்தான்.
இஸ்லாத்துள் காலடி வைத்தபோதும், என் ஜீவனும் காதலனுமாகிய பகவான் கிருஷ்ணனை என்னுடன் அழைத்தே செல்கிறேன் என்று அங்கிருந்தோரைத் துணுக்குற வைத்தவருக்கும் அவர்தான்.
பிற்பாடு அதிலிருந்தும் மீண்டு, அடுத்தொரு
புது மனுஷியாகப் பரிணமித்தவரும் அவர்தான்.
எல்லாமே அவர் தேர்வு.
மதமும் மத எதிர்ப்பும்,
பெண்ணுரிமையும் முக்காடும் –
அனைத்தும் அவர் தெரிவு.
சமூகத்தின் வினைகளுக்கு கமலா என்கிற மாதவிக்குட்டியாகிய சுரய்யாவின்
எதிர்வினைகள் அவை.
அவை கமலாவுக்கு மட்டுமல்ல;
அனைத்துத் தனிநபருக்குமான
உளவியல் தன்மைகள்.
அனுமதிக்கப்பட வேண்டிய உரிமைகள்.
அதை ஆண்டவன் பேரால்
மறுதலிக்கிறவர்களுக்கு
அட்டூழியக்காரர்கள் என்று பெயர்.