‘எங்களுக்குப் பிடித்ததைச் செய்தால்
அனுமதிப்போம்….
பிடிக்காததைச் செய்தால் –
கூட்டம் சேர்ந்து எதிர்ப்போம்…
மறைமுக மிரட்டல்களின்மூலம்
ஒடுக்குவோம் ‘ என்பது
பாசிசத்தின்
வடிவம்தான்! வடிவமேதான்!

ஹிந்து முஸ்லிம்
நல்லிணக்கத்தைப் பேசும்
தனிஷ்க் நகைக்கடை விளம்பரம்!
அதை –
வலதுசாரிகளும்
மத பாசிஸ்டுகளும் எதிர்க்கிறார்கள்.

‘கூலிகள்’ -‘வந்தேறிகள்’ என்று
இழிவுபடுத்தப்பட்ட
இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் எனும்
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த
தமிழ் மக்களில் ஒருவனாக ஜனித்து –
கிரிக்கெட் விளையாட்டின்மூலம்
உலகத்துப் பிரபலங்களும் ஒருவனாக ஒளிர்ந்த
முத்தையா முரளிதரனாக
விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது! – என்று
இனவெறியர்களும், தமிழ் பாசிஸ்டுகளும்
எதிர்க்கிறார்கள்.
விளம்பரத்துக்கு ஆதரவாகப்
பொங்கி வழியும் கருத்துச் சுதந்தர ஆர்வலர்கள்
விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வாய் திறக்க
அச்சப்பட்டு மவுனப்பட்டுக் கிடக்கிறார்கள்.
‘விஜய்சேதுபதியின் திரை வாழ்க்கையை
முடக்கிவிடுமென்று ‘ எச்சரித்து மறைமுகமாக
மிரட்டப்படும் பாசிசக் குரலுக்கெதிராக
எதிர் வினை செய்ய அஞ்சிக் கிடப்பதும் –
கருத்துச் சுதந்தரத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு
துணை போவதுதான்!
எதிர்ப்பு மிரட்டல்கள் ரெண்டுமே-
கருத்துக் சுதந்தரத்தின் – ஜனநாயகத்தின்
குரல்வளையை மிதிக்கிற ,நெரிக்கிற
நடவடிக்கைகள்தாம்.
ரெண்டும் ஒன்றல்ல என்று
வியாக்கியானம் ஆயிரம் கொண்டுவராதீர்கள்.
அடிப்படை என்று ஒன்று இருக்கிறது,
இரண்டும் பாசிசத் தன்மை கொண்ட
இருவேறு கோணத்தின் குரல்கள்தாம்.
ராஜிவ்காந்தி கொலையாளர்கள் என்று
குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் –
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக
அறிவிக்கப்பட்டிருந்தாலும்கூட –
விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரனைப் பேசவும் –
மாவீரர் தினத்தைக் கொண்டாடவும்
அனுமதித்திருக்கிற நாடு இது!
மேலாக –
நீதிமன்றத்தில் நிரூபணம்
ஆகாவிட்டாலும் கூட –
‘தேசத் தந்தை’ காந்தியைக் கொலை செய்ததாக
குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரின் சிலையை
நாடாளுமன்றத்தில் வைத்திருப்பதை –
அந்தமான் விமான நிலையத்துக்கு அவர் பேரைச் சூட்டியிருப்பதை அனுமதித்திருக்கிற நாடு இது.
நடுநிலையாளர்களைக்கூட –
நேரியவர்களைக்கூட –
விரக்தியாளர்களாக்காதீர்!
அப்பாவிப் பொதுமக்களை
‘உங்கள் மலின அரசியலுக்கு’
பலிகடா ஆக்காதீர்கள்.
ஈழத்து தமிழ்மக்களாகிய –
இந்தியத்தமிழ் மக்களாகிய –
நாங்கள் –
நிம்மதியாக வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.