இனிய தோழர்களே நான் உங்களை நினவு கூருகிறேன்.
காரணம் நீங்கள் என்னுடன் கல்வி கற்றதால் அல்ல,
நாம் ஒன்று கூடி கால்ப்பந்தோ அல்லது மென் பந்தோ விளையாடியதால் அல்ல.
என் சுக துக்கங்களில் கலந்து கொண்டதால் அல்ல.
உங்கள் உணவை என்னுடன் பகிர்ந்ததால் அல்ல.
நாம் விரும்பி இணைந்த ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்
ஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடி நீங்கள் மரணித்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான்,
என் இதயத்தில் உங்கள் நினைவை விருட்சமாய் வளர செய்து,
உங்கள் நினைவுகளை நிலைக்கச் செய்தது.
கும்பகோணம் சிவபுரம் முகாமில் பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில்,
காரைநகர் கடல் படை தள தாக்குதலில், யாழ்ப்பாணத்தில், வன்னியில்,
திருமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் என எம் ஈழ மண்ணில்,
எதிரியுடன் மோதி மட்டுமல்ல சகோதர அமைப்பின் தலைமையின் தவறான முடிவால்
தெருக்களிலும், சிறைபட்டும் கந்தன் கருணை இல்லத்திலும்,
தாய் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கோடம்பாக்கம்
சக்காரியா கொலனி, பவர் அப்பாட்மன்ற் தொடர்மாடி
ஐந்தாம் இலக்க வீட்டில் வைத்து, நிராயுதபாணிகளாக இருந்த வேளை,
தலைவருடன் அனைவரையும் துப்பாக்கி ரவை கொண்டு உருத்தெரியாமல் அவர்களின் முகம் சிதைத்த
தினத்தை மனதில் இருத்தி, உங்கள் அனைவரையும் நினைத்து,
ஆண்டுதோறும் ‘’தியாகிகள்’’ தினம் அனுஸ்டிக்கும் உங்கள் தோழர்கள் போலவே,
நானும் தனித்திருந்து உங்களை நினைவு கூருகிறேன்.
‘’புனிதராகி போனவரே உங்கள் புகழ் உடல் நித்திலம் ஆனது’’.
– ராம் –